பெற்றோல் விநியோகத்திற்காக கல்முனையிலுள்ள முச்சக்கர வண்டிகளை பதிவு செய்ய ஏற்பாடு


(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளும் இலகுவாக பெற்றோலை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, விசேட அனுமதிப்பத்திரம் (பாஸ்) வழங்குவதற்காக அவற்றை கல்முனை மாநகர சபையில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோக செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி, நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கல்முனை மாநகர சபையில் நேற்று சனிக்கிழமை (25) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இப்பதிவு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக குறித்தொதுக்கப்பட்டிருக்கின்ற பின்வரும் தினங்களில் பயணிகள் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளினதும் தனிப்பட்ட பாவனையில் உள்ள முச்சக்கர வண்டிகளினதும் உரிமையாளர்கள் அல்லது பாவனையாளர்கள் மோட்டார் திணைக்கள பதிவுப் புத்தகத்தின் பிரதியுடன் கல்முனை பொது நூலக வளாகத்தில் அமைந்துள்ள மாநகர சபை அலுவலகத்திற்கு வருகைதந்து, அதனைப் பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்படுகிறது.

இதன்படி நாளை திங்கள் (27) மற்றும் நாளை மறுதினம் செவ்வாய் (28) இரு தினங்களும் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள முச்சக்கர வண்டிகளும் புதன்கிழமை (29) மற்றும் வியாழகிழமை (30) இரு தினங்களும் கல்முனை பிரதேசத்திலுள்ள முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்படவுள்ளன.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (01.07.2022) மற்றும் சனிக்கிழமை (02) ஆகிய இரு தினங்களும் பாண்டிருப்பு, மணற்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள முச்சக்கர வண்டிகளும் ஞாயிறு (03.07.2002) மற்றும் திங்கள் (04) ஆகிய இரு தினங்களும் மருதமுனை, பெரிய நீலாவணை ஆகிய பிரதேசங்களிலுள்ள முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்படும் என கல்முனை மாநகர சபை அறிவித்துள்ளது.

அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தினங்களில் மாத்திரம் வருகைதந்து, பதிவு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சம்மந்தப்பட்டவர்களை மாநகர சபை கேட்டுள்ளது