2023 வரவு -செலவுத் திட்டம் : வன விலங்கு அமைச்சிற்கு 3710.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு !


வனவிலங்கு மற்றும் வன வளங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசிய கால்நடை வளர்ப்பை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்காக வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சிற்கு 2023 வரவு -செலவுத் திட்டத்தின் ஊடாக 3710.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ், வனவிலங்கு பாதுகாப்புத் துறை, மின் வேலிகள் அமைத்தல், தேசிய பூங்காக்களில் வீதிகள் தயார் செய்து எல்லைகளைக் குறிப்பது, திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துவது எனத் திட்டமிட்டுள்ளது.

மேலும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் வலையமைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் 11 பாதுகாக்கப்பட்ட பகுதிகளை பிரகடனப்படுத்துதல், சுற்றுலா சேவை வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் ஆண்டு வருமானத்தை அதிகரித்தல், தேசிய பூங்காக்களை அண்டிய பகுதிகளில் வாழும் சமூகத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் போன்றவை இத்திட்டங்களில் அடங்கும்.

யானை – மனித மோதலை கட்டுப்படுத்தும் வகையில் மின்சார வேலிகள், விவசாய மின் வேலிகள் அமைத்தல், காட்டு யானைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்துதல், துன்பப்படும் யானைகளை யானைகள் காப்பகங்களில் விடுவித்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

வன அடர்த்தியை அதிகரிக்கும் வகையில், வீதி ஓரங்களில் மரங்கள் நடுதல், பாடசாலைகள், அரச அலுவலகங்கள், தனியார் துறை அலுவலகங்கள், மத வழிபாட்டுத் தலங்களில் மரங்கள் நடுதல், தற்போதுள்ள காடுகள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க இந்த ஏற்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.