இராணுவம், பொலிஸ் அனுசரணையுடன் தற்போதும் இரவிலே மண் அகழ்வு நடைபெறுகிறது : கோவிந்தன் கருணாகரம் (ஜனா) !



சுற்றாடல் அமைச்சர் எமது மாவட்டத்தில் இருக்கும் மண்மாபியாக்களைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்திருக்கின்றார். சட்டத்திற்கு முரணாக மண் ஏற்றுபவர்களைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்திருக்கின்றார் ஆனால் அங்கு இராணுவம், பொலிஸ் என்பவற்;றின் அனுசரணையுடன் தற்போதும் இரவிலே மண் அகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் (02) நடைபெற்ற சுற்றாடல், வனஜீவராசிகள், வனவளங்கள் பாதுகாப்பு, சுற்றலாத்துறை மற்றும் காணி அமைச்சுகளின் விடய தானம் சம்மந்தமான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் அதிகமான வளத்தை உருவாக்குவதும், கூடுதலான பிரச்சனைகளைக் கொண்டதுமான அமைச்சுகளின் மீதான விவாதம் இன்று நடைபெறுகின்றது. இன்று இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் 18 மாவட்டங்கள் யானைக்கும், மனிதனுக்கும் இடையில் மோதலுள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிலும் ஆறு மாவட்டங்கள் கூடுதலான பிரச்சனை கொண்ட மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற மூன்று மாவட்டங்களும், பொலநறுவை, அநுராதபுரம், குருநாகல் போன்ற மாவட்டங்களுடன் சேர்த்து புத்தளம், மகியங்களை போன்ற பிரதேசங்களும் இன்று யானைகளுக்கும் மனிதர்களுக்கும் மோதல்கள் அதிகம் இடம்பெறும் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் யானைத் தாக்குதலுக்குள்ளாகி 20 பேர் உயிரிழந்துள்ளார்கள், 24 பேர் காயமடைந்துள்ளார்கள். அதேபோன்று முதலையினால் பாதிக்கப்பட்டு ஒருவர் மரணமடைந்திருக்கிறார். ஒருவர் காயமடைந்திருக்கி;றார். அதேநோரத்தில் 14 யானைகள் மட்டக்கப்பு மாவட்டத்தில் இறந்திருப்பதுடன், 205 வீடுகள் யானைகளினால் சேதமாக்கப்பட்டிருக்கின்றன. 2021ம் அண்டு யானைத் தக்குதலுக்குள்ளாகி 18 மனிதர்கள் இறந்துள்ளார்கள், முதலையினால் மூவர் இறந்திருக்கின்றார்கள். 2017 தொடக்கம் 2022ம் ஆண்டு வரையான ஐந்து வருட காலத்தில் யானைத்தாக்கத்திற்குள்ளாகி 78 பேர் மரணமடைந்துள்ளார்கள், 95 பேர் காயமுற்றிருக்கின்றார்கள், அதேவேளை 550 விடுகள் சேதமாக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஐந்தாண்டு காலத்தில் 90 யானைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இறந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது முதலையினால் 15 பேர் மரணமடைந்திருக்கின்றார்கள்.

இதற்குக் காரணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைப் பாதுகாப்பு அலுவலகங்களும், அலுவலகர்களும் மிகக் குறைவாக இருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே ஒரு பிராந்திய அலுவலகமும் துணை அலுவலகங்கள் இரண்டும் மாத்திரமே இருக்கின்றன. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறவாகவே இருக்கின்றது. திருகோணமலை மாவட்டத்தில் ஆறுக்கும் மேற்பட்;ட பிராந்திய அலுவலகங்களுடன் சேர்த்து துணை அலுவலகங்கள் அடங்கலாக பத்து அலுவலகங்கள் இருக்கின்றன. ஒரு அலுவலகத்திற்கு நிரந்தரமாக 4 பேர் கடமையில் இருக்கின்றார்கள். ஆனால் மடடக்களப்பு மாவட்டத்தில் வெறுமனே 12 அலுவலகர்களே யானையில் இருந்து மக்களையும், மனிதர்களிடமருந்து யானைகளையும் காப்பற்றுவதற்கு இருக்கின்றார்கள்.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு என்ற ரீதயில் மட்டக்களப்பில் 180பேர் யானை பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தாலும் 25பேர் அதிலிருந்து விலகியிருக்கின்றார்கள். காரணம் அவர்களுக்கு ஒரு நாளைக்கு 1000ரூபா மாத்திரமே சம்பளமாக வழங்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார நிலையில் இந்தச் சம்பளம் போதாத காரணத்தினால் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் சென்றிருக்கின்றார்கள்.

மட்டக்களப்பைப் பொறுத்த மட்டில் 210 கிலோமீட்டர் துரத்திற்கு யானை வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கிரான் வாகரை பிரதேசத்திலே 104 கிலோமீட்டர் யானை வேலிக்குரிய பொருட்கள் அங்கு வந்திருக்கின்றன. ஆனால் அங்கு யானை வேலிகள் இன்னும் அமைக்கப்படவில்லை. தற்போது மட்டக்களப்பு நகரிலே ஒரு பிராந்திய அலுவலகமும் வெல்லாவெளி, கிரான் பிரதேசதங்களில் துணை அலுவலகங்கள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே மேலும் இரண்டு பிராந்திய அலுவலகங்கள் வெல்லாவெளி மற்றும் கிரான் பிரதேசங்களிலும் மேலும் மூன்று துணை அலுவலகங்களில் புல்லுமலை கரடியனாற்றை மையப்படுத்தி ஒரு அலுவலகமும், வவுணதீவு பட்டிப்பளை, பன்சேனை போன்றவற்றை மையப்டுத்தி ஒரு அலுவலகமும் வாகரை பிரசேத்தை உள்ளடக்கி ஒவ்வொரு துணை அலுவலகங்கள் அமைக்கபபட வெண்டிய தேவை இருக்கின்றர்து.

குறைந்தபட்சம் வாகரைப் பிரதேசத்தில் இருந்து 300 கிலோமீட்டர்கள் வெல்லாவெளி வரை யானை வேலிகள் இருக்க வேண்டிய இடங்களில் பகலில் மாத்திரமே ஒரு இலட்சம் வேலைவாய்ப்பிற்கு உட்படுத்தப்பட்டவர்கள் கடமையில் ஈடுபடுகின்றார்கள். இரவு வேளைகளில் தான் யானைகள் யானை வேலியை உடைத்துக் கொண்டு விவசாயிகளின் வயல்களையும், பயன்தரு மரங்களையும், சேமித்து வைத்திருக்கும் நெற்களையும் சேதப்படுத்துகின்றன.

வெல்லாவெளி பிரதேசத்தைப் பொருத்த மட்டில் 1000 ஏக்கருக்கு மேற்பட்ட அந்த தளவாய்க் காட்டிலே பெரிய மரங்கள் எதுவுமே இல்லை அனைத்தும் பற்றைக் காடுகளே இருக்கின்றன. அந்தப் பற்றைக் காடுகளில் யானைகள் பகலிலே ஒழித்திருந்து இரவு நேரத்திலே கிராமப் புறங்களுக்குள் உள்நுலைந்து வீடுகளைச் சேதப்படுத்துவதோடு அந்தப் பிரதேச மக்களின் உயிருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

அந்தப் பிரதேசங்கள் தற்போது வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. வனவளத்திற்குரிய பெரிய காடுகள் எதுவுமே அந்தப் பிரதேசத்தில் இல்லாத காரணத்தினால் அந்தப் பிரதேசம் துப்பரவு செய்யப்பட்டு எதிர்காலத்தில் மேய்ச்சற் தரைக்குப் பயன்படுத்தப்படுமாக இருந்தால் யானைகள் அங்கு தங்க வேண்டிய நிலை ஏற்படாது என்பது மாத்திரமல்லாமல் அந்தப் பிரதேச மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் கூட்டிக் கொள்வர்கள் என்பதனால் வனவளத் திணைக்களம் எதிர்காலத்தில் அங்கு அந்தப் பிரதேசத்தை விடுவிக்க வேண்டும்.

வனவளத் திணைக்களம் கொழும்பில் இருந்து ஜி.பி.எஸ் ஊடாக காட்டைக் கணிப்பிட்டு எல்லைக்கல் போடுகின்றது. நீண்டகாலமாக வயல் செய்த காணிகள், மேட்டுப்பயிர் செய்த காணிகள், மாத்திரமல்லாமல் மட்டக்களப்பு வாவியின் அருகிலுள்ள காணிகளில் கூட கல் போடுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை ஆற்றங்கரையை ஒட்டிய பிரசேத்தில் இறால் வளர்ப்பு செய்யப்பட்டது. தற்போது அந்த வாவியை ஒட்டிய பிரதேசம் சுமார் 400 ஏக்கருக்கு மேற்பட்ட பிரதேசம் இரால் வளர்ப்பிற்காக அந்தப் பிரதேச மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கத் தயாhக இருக்கம் போது அதனைக் கூட எல்லையிட்டு வனவளத் திணைக்களம் தடுக்கின்றது.
மக்கள் ரொம்பவே கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தப் பொருளாதாரச் சூழ்நிலையில் அந்த மக்களை வளப்படுத்தவதற்கு கொஞ்சமாவது நெகிழ்வுத் தன்மையுடன் வனவளத் திணைக்களம் தங்கள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் இங்கிருக்கும் சுற்றாடல் அமைச்சர் எமது மாவட்டத்தில் இருக்கும் மண்மாபியாக்களைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்திருக்கின்றார். சட்டத்திற்கு முரணாக மண் ஏற்றுபவர்களைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்திருக்கின்றார் ஆனால் அங்கு இராணுவம் பொலிஸ் என்பவற்;றின் அனுசரணையுடன் தற்போதும் இரவிலே மண் அகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தாண்டிய விசேட அதிரடிப்படை மிகவும் நிதானமாகச் செயற்பட்டு சட்டவிரோத மண் அகழ்வினைத் தடுக்கின்றார்கள். குறிப்பாக வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டியடிவெளி, வாகனேரி, சந்தியாறு போன்ற பிரதேசங்களிலே 8500 ஏக்கர் நெற் காணிகளுக்கு அதனூடாக ஊடறுத்துச் செல்லும் ஆற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை இருக்கின்றது.

ஏனெனில் அந்த ஆற்றிலே மண் அகழ்வதால் வயல் மட்டத்தில் இருந்து ஆறு மிகவும் ஆழத்தில் இருக்கின்றது. எனவே எருக்கலம் காட்டுப் பாலத்திற்கு அருகில் விசேட அதிரப்படை சிறு முகாமை அமைப்பீர்களானால் அந்தப் பிரதேசத்தில் இருந்து சட்;டவிரோதமாக மண் அகழ்பவர்களைக் கைப்பற்றலாம் என்பதுடன் ஏறாவூர் பற்றுப் பிரதேசத்திலே வயல்வெளியிலே எக்சவேட்டர் ஒன்று வயல் திருந்தம் மேற்கொள்ளாமல் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இரவிலே அந்த இயந்திரத்தினூடாக சட்டவிரோதமாக மண் அகழ்வதாக தகவல்கள் இருக்கின்றன. இவற்றை அமைச்சர் அவர்கள் கனவனத்தில் எடுத்து அந்தப் பிரதேசத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.