ஆசிரியரிடம் மெய்யியல் (தத்துவம்) நோக்கு வலுப்பெற வேண்டும்

ஆசிரியரிடம் மெய்யியல் (தத்துவம்) நோக்கு வலுப்பெற வேண்டும்

பாடசாலைக் கல்வியானது பிள்ளைமையம், வாழ்க்கை மையம், செயற்பாட்டு மையம் என்ற பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. ஆனால், ஒரு வகுப்பறையின் கலைத்திட்ட முகாமையாளர் ஆசிரியராகவே காணப்படுகின்றார். தற்காலத்தில் ஆசிரியர் மாணவர்களது முன்மாதிரி (Modelஎன்ற நிலை அருகிக்கொண்டு செல்கிறது.

'ஆசிரியர்கள் ஞான விளக்குகள் அறிவுப் பரத்தையர்கள் அல்ல' என்ற சோக்கிரட்டீஸின் கருத்தை ஒவ்வொரு ஆசிரியரும் தன்னில் உருவேற்றிக்கொள்ள வேண்டும். 'ஊரார் பிள்ளை தலை தடவத் தன் பிள்ளை தானே வளரும்' என்ற  உண்மையை அடிக்கடி ஞாபகத்திற்கு வகுப்பறையில் நுழையும் போது முன்னிறுத்திப் பார்க்க வேண்டும். ஆசிரியர் இயேசுகிறிஸ்து போன்ற இரக்கமுடையவராக இருக்க வேண்டும் என்ற ரூஸோவின் கருத்தை என்றும் நினைவில் கொள்ள வேண்டும். 

ஆசிரியர் தனது பாடசாலையின் சூழவுள்ள கிராமத்தை அல்லது நகரத்தை முற்றிலும் உணர்ந்தவராக  செயற்பட வேண்டும். 'நான் கற்பிக்கிறேன் என்று எண்ணாது,  மாணவனது உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக்கொணர்ந்து, மாணவனது இயற்கை அறிவையும், ஆற்றல்களையும் துலங்கச் செய்யும் தூண்டியாக உள்ளேன் என்றும் சிந்திக்க வேண்டும். ஆசிரியருக்கும் மாணவருக்கும்  இடையிலான அன்புப்பிணைப்பு பற்ருறுதி வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஆசிரியர் தன்னிடத்தே காட்டும் கல்விச்சிரத்தையை ஒரு போதும் உதாசீனம் செய்யமுடியாது என்ற நிலைக்கு மாணவனைத் தயார்படுத்த வேண்டும்.

வகுப்பறையில் பாடசாலைச் சூழலில் ஏற்படும் பிரச்சினைகள், தடங்கல்கள் அனைத்தையும் நீக்கும் வடிகால்களாக ஆசிரியரை மாணவன் மனதில் நிலை நிறுத்திக்கொள்ளச் செய்ய வேண்டும்,  மாணவனது சுயசிந்தனைக்கு முற்றிலும் வழிதிறந்து விடுபவராயும், மாணவனிடம் உயர்ந்த எண்ணங்களையும், பின்பற்றுதல்களையும் பெறத்தக்க முன்மாதிரியாக திகழ்பவராகவும் ஆசிரியர் இருக்க வேண்டும். மாணவனிடம் எழும் முரண்பாடுகளையும், சிக்கல்களையும் களைபவராக இருக்க வேண்டுமேயன்றி, அதனைத் தோற்றுவிப்பவராக இருக்கக் கூடாது.

ஆசிரியரிடத்தே சிறந்த வாழ்கைத் தத்துவம் காணப்படவில்லையெனில், அதனை  எவ்வாறு மாணவரிடத்தே  எதிர் பார்க்க முடியும் என்ற உண்மையை ஆசிரியர் ஒவ்வொரு நொடியிலும் தன்னிடத்தே கேட்கத்தக்க நிலையில் அவர் மெய்யியல் சிந்தனை பெற்றவராக இருக்க வேண்டும்.

வறுமை மனித சமூகத்தின் கொடுமை, அடிமை நிலை எவர்க்கும்  உரியதல்ல, உண்மை நாட்டமே மனித இயல்;பு சுற்றாடலை முற்றாக அறிவதும் அதனோடு பொருந்தி வாழ்வதுமே வாழ்க்கையின் சிறப்பு என்ற தாற்பரியங்களை, சிந்திக்கும் ஆற்றலை மாணவரிடம் தூண்டத்தக்கவரே ஆசிரியர் ஆவார். மாணவன்  தன்னை அறிந்து கொள்ளவும், தன்னிடம் ஆழ்ந்து கிடக்கும் ஆற்றல்களால் விழிப்படையவும், கல்வியின்பால் அவனை  முகப்படுத்தும் நுட்பங்கள் அனைத்தும் ஆசிரிடத்து காணப்பட வேண்டில், அவர் மெய்யியல் நாட்டமுடையவராக இருக்க வேண்டும். மெய்யியலை அறிந்திருக்க வேண்டும்.

காந்தியின் மெய்யியலை கற்கும்  போது நாட்டுப்;பற்று, தேசிய உணர்வு, உடல், உள்;ளம், ஆத்மா இணைந்த செயற்பாடு, மதச்சார்பின்மை, சமத்துவ உணர்வு என்பவைகளை எவ்வாறு இந்திய மக்;களிடையே கருத்தூன்;ற முயன்றார் என்ற அவரது வாழ்க்கை நுட்பங்கள், ஆர்வம் என்பன ஆசிரியரிடத்தும் மிளிர வேண்டும். உண்மைக்காகப் போராடுவது  என்பது தன்னை  வலுப்படுத்துவது, மனத்தைரியத்தை  வளர்ப்பதும், தனது போராட்டம் தனது ஆத்ம வலுவை வளர்ப்பதால் எதிரியைப் பணிய வைக்க முடியும் என்ற சத்ய நாட்டம், கீழைத்தேயத்தின் ஆத்ம  விழிப்பு, சமயம் பற்றிய அவரது செயற்பாடு ஒரு ஆசிரியரால் மாணவரிடத்து எவ்வாறு விதைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை ஆசிரியரிடத்தே வளர்ந்திருக்க வேண்டும். 

தவறுகளை விமர்சிப்பதும், கண்டிப்பதும்; அவனைத் தவறுகள் இல்லாதவனாக்குவதற்கு என்ற உணர்வு ஒவ்வொரு மாணவரிடத்திலும்; ஊட்டப்பட வேண்டும். மொத்தத்தில் மாணவன் தன்னம்பிக்கையின் வடிவமாகக் கட்டியெழுப்பப்படத்தக்க  மெய்யியல் நோக்கு ஆசிரியரிடத்தே வலுப்பெற்றிருக்க வேண்டும். கல்வியின் நோக்;கம் தன்னம்பிக்கையை தோற்றுவிப்பது என்பது, அதுவே சுதந்திரம், அனைத்து நன்மைகளதும் வெற்றியினதும் அடித்தளம். என்பதை மார்க்ஸ்ஸிடம் இருந்தும், காந்தியிடமிருந்து பெற்ற சிந்தனைகளாக ஆசிரியரிடத்தில்  மிளிர வேண்டும்.
'மாணவரிடத்தே கற்கும் திறன்களையும் (Learning Skill கற்பதற்கான ஆர்வத்தையும்,  வாழ்நாள் முழுவதும் பெற்றுக்கொள்ளச் செய்பவர்கள் ஆசிரியர்களே' என்ற (Peter Drueker)  பீற்றர் டிரக்கரது கருத்தை, ஆசிரியர் தன்னோடு இணைத்தவராக கல்வி ஒரு வாழ்நாள் முழுவதற்குமான தொடர் கருமம் என்ற நோக்கை மாணவரிடத்தே பொருந்தக் கூடிய    மெய்யியல் நாட்டம் கொண்டிருக்க வேண்டும்.

'கல்விப் பின்னடைவு இன்று பாடசாலைகளில் நிலவுகிறதெனில் அங்கு ஆசிரிய மாணவர் உறவு சீராக இல்லையென்பதே பொருள்' எனலாம். கல்வி மெய்யியல் வளராத காலத்தில் சமூகத்தில் ஆசிரிய மாணவ உறவு புனிதமாக இருந்தது. இன்று தொழில்நுட்ப் வளர்ச்சி காரணமாக அவ்வுறவு சீர்குலைந்து விட்டது. உலகம் எத்தகைய நிலையில் சீர்குலைந்தாலும். அவ்வுறவை நிலைநிறுத்தும் மனப்பாங்கு ஆசிரியரிடமிருந்து ஒருபோதும் அகலக்கூடாது. ஆசிரியன் தாய், தந்தை, நண்பன், ஆலோசகன், வழிகாட்டி, முன்மாதிரி, கடவுள் என்ற பல்வேறு பாத்திரங்களை ஏற்றுள்ளான். இப்பாத்திரங்களாக அவன் நடமாட, செயற்பட அவனிடத்தே மெய்யியல் சிந்தனைப்புலம் வலுவாக நிறுவப்பட்டிருத்தல் அவசியம் ஆகும்.

இராசசிங்கம் நாகேந்திரன் (ஆசிரியர்),
மட்/செங்கலடி விவேகானந்தா வித்தியாலயம்,
கல்வி முதுமாணி கற்கை ஆசிரிய மாணவன்,
கிழக்குப்பல்கலைக்கழகம்,
வந்தாறுமூலை.