தற்காலத்தில் ஆசிரியர் வாண்மை விருத்தியின் அவசியமும் இலங்கையில் ஆசிரியர் வாண்மைத்துவ விருத்திக்காக மேற்கொள்ளப்படும் அண்மைக்கால முன்னெடுப்புகளும்.


அறியாமை எனும் இருள் அறிவு ஞானத்தை விதைத்திடுபவர்களே ஆசிரியர்களாவர். ஒருவர் இந்த உலகில் பெறுகின்ற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே கல்வி எனப்படும். இவ்வாறு ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து ஒரு நபரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாக செய்வதற்கு வழியமைக்கும் கல்வியை மனிதகுலத்திற்கு வழங்கும் மான்புமிகு மனிதர்களே ஆசிரியர்களாவர். 

மாணவர்கள் தங்களின் அனுபவங்களின் மூலம் புதிய புதிய அர்த்தங்களை கட்டியெழுப்புகின்றனர். அவ்வாறான மாணவர் சமுதாயத்தை தட்டிக் கொடுத்து சிறந்த கற்றல் வாய்ப்புகளை சூழலில் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே ஆசிரியர்களது வகிபங்காகும் எனும் கருத்து சமூகத்தில் இன்று வலுப்பெற்றுள்ளது.

எனவே ஒரு நல்ல ஆசிரியரின் வகிபங்கு அறிவை மாணவர்களுக்கு அள்ளிக்கொடுப்பது மட்டுமன்றி அவர்களை தாமாகச் சிந்திப்பதற்கும் தமக்கான தீர்மானங்களை தாமாக மேற்கொள்வதற்கும் தாமாக செயற்படுக் கற்பதற்கும் தூண்டுபவராக ஆசிரியரானவர் செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய மாறுபட்ட சிக்கலான கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் அதற்கேற்ப தமது ஆசிரியர் வாண்மையை விருத்தி செய்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அந்தவகையில் ஆசிரியர் வாண்மை விருத்தி என்றால் என்ன என்பதை இவ்வாறு வரைவிலக்கணப்படுத்த முடியும். "மாணவர்களுக்கான கல்விசார் அடைவு மட்டங்களை அதாவது பெறுபேறுகளை வெற்றிகரமான வகையில் உருவாக்கத் தேவைப்படுகின்ற திறன்கள், தேர்ச்சிகள் என்பவற்றை மேம்படுத்திக் கொள்ளும் செயன்முறையே ஆசிரியர் வாண்மை விருத்தி எனப்படும்.

அதாவது மாணவர்களை அறிவு, திறன், ஒழுக்கம், வாழ்க்கை என்பவற்றில் உயர்வடையச் செய்வதற்காக கற்பிப்பதற்கான திறன்கள், தேர்ச்சிகள், கற்பிக்கும் தரம் என்பவற்றினை மேம்படுத்திக் கொள்கின்ற செயன்முறையே ஆசிரியர் வாண்மை விருத்தி எனப்படுகிறது. ஆசிரியர் தொழில் ஒரு புனிதமான சேவை என்றும் அறிவு மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற உயரிய சேவையாகவும் கருதப்படுகின்றது. ஹீமாயூன் கபீர் என்பவர் குறிப்பிடுவதன் படி திறமையான ஆசிரியர்கள் இல்லாவிடில் ஒரு நல்ல கல்வி முறையானது தோற்றுப்போகும். திறமையான ஆசிரியர்கள் இருந்தால் சாதாரண கல்வி கூட பெரிய அளவில் பேசப்படும் என்றார்.

மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பிப்பதற்கு தேவையான திறன்களையும் தேர்ச்சிகளையும் வளர்த்துக்கொள்ள வாண்மை விருத்தி அவசியமாகின்றது. ஆசிரியர்கள் மாணவர்களின் நிலை அறிந்து, அவர்களின் தேவைகளை அறிந்து கற்பிக்கக் கூடியவராக இருப்பதற்கு வாண்மை என்பது தேவையாகின்றது. கல்வியில் அதிக ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அவர்களுடைய ஆர்வத்துக்கேற்பவும், ஆர்வத்தை தூண்டும் வகையிலும் கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும். 

புத்தாக்கங்கள், பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, வினாவிடைப் போட்டி என்பவற்றை நடத்துதல், குழுக்கற்றல் என்பவற்றின் மூலம் அவர்களின் ஆர்வத்தை தூண்டுதல் அத்தோடு கற்றலில் பின்தங்கிய மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கான அறிவு, திறன் என்பவற்றுக்கேற்ப கற்றலை மேற்கொள்ள வேண்டும். எனவே ஆசிரியர்கள் மாணவர்களின் அறிவு, திறமைகளை வளர்த்துக்கொள்ள வாண்மை விருத்தி அவசியமாகின்றது. 

தமது கற்பித்தல் தரத்தினை பேணிக்கொள்ளவும் ஆசிரியர்களுக்கு வாண்மை விருத்தி அவசியமாகின்றது. ஆசிரியர்கள் வெறும் புத்தகக் கல்வியை மட்டும் மாணவர்களுக்கு கற்பிக்காது, தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தல், அனுபவக் கல்வியை வழங்க செயற்பாட்டு முறைகளுடனான கல்வி படவுருக்கள், காட்ச்சிகள் மூலமாக கல்வியை வழங்கல் போன்ற பல்வேறு முறைகளை தமது கற்பித்தலில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். 

இன்றைய கல்வித் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஆசிரியர்களுக்கு வாண்மை விருத்தி அவசியமாகவுள்ளது. தற்காலத்தில் ஆசிரியர் தொழிலானது சவால் மிக்க ஒன்றாக காணப்படுகின்றது. இன்றைய காலத்தில் காணப்படும் கல்வி முறைகளே இதற்கு காரணமாக அமைகின்றது. இன்றைய காலத்தில் கல்வியானது தொழிநுட்ப மயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறைக்கல்வி, கணினி, இணையம் போன்ற தொழிநுட்பங்களினூடான கல்வி, நிகழ்நிலை (online) கல்வி என தற்கால கல்வி காணப்படுகின்றது. 

இவ்வாறான முறைகள் மூலம் மாணவர்களிடையே தொழிநுட்ப்ப அறிவுகளை வளர்ப்பதாக கல்வி காணப்படுகின்றது. ஆனால் ஆசிரியர்கள் மத்தியில் தொழிநுட்ப்ப அறிவின்மை, கணினி, இணையம் என்பவற்றை பயன்படுத்த தெரியாமை, தொழிநுடப்ப சாதனங்களை கையாள முடியாமை போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. 

இவ்வாறான பிரச்சினைகள் உள்ள ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கான தற்காலத்திற்கு பொருத்தமான கல்வியினை வழங்க முடியாதுள்ளது. எனவே ஆசிரியர்கள் தொழிநுட்ப்ப அறிவு, தொழிநுட்ப்ப சாதனங்களை அணுகும் முறை அவற்றை பயன்படுத்தும் முறை என்பன தொடர்பாக தம்மை விருத்தி செய்துகொள்ள வேண்டும். எனவே ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் இன்றைய கல்வித் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தமது தொழிலை அதாவது ஆசிரியர் வாண்மையை விருத்தி செய்துகொள்வது அவசியமாகின்றது.

ஆசிரியர்களானவர்கள் மாறிவரும் உலகிற்கு ஏற்ப தம்மை இசைவாக்கிக்கொள்ள வாண்மை விருத்தி அவசியமாகின்றது. இன்றைய உலகமானது நவீன தொழிநுட்ப மயமாக்கப்பட்டு வருகின்றது. ஆனால் ஆசிரியர்கள் சிலர் பண்டைய கால மரபையே பின்பற்றுகின்றனர். பழைய காலத்தில் தங்கியிருப்பதை விட்டு மாறி வரும் நவீன உலகத்திற்கேற்ப தங்களையும் இசைவாக்கிக் கொள்பவர்களாக இருப்பதற்கு வாண்மை விருத்தி அவசியமாகின்றது. ஆசிரியர்கள் தமக்கான பதவி உயர்வுகளையும் சம்பளப் படிகளையும் பெற்றுக்கொள்ள வாண்மை விருத்தி தேவைப்படுகின்றது. 

ஆசிரியர்கள் தமது பதவிகளை உயர்த்துவதற்கும் மேலும் கற்கின்றனர். இவ்வாறு தொடர்ந்து கற்று தமது பதவிகளை உயர்த்துவதனூடாக சம்பள படிகளையும் உயர்வாக பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு பதவிகளை உயர்த்துவதற்கும் சம்பளப்படிகளை பெற்றுக் கொள்வதற்கும் ஆசிரியர்களுக்கு வாண்மை விருத்தி தேவைப்படுகின்றது

இலங்கையில் காலத்திற்கு காலம் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி மறுசீரமைப்பில் ஆசிரியர் வாண்மை விருத்தி தொட்பாக அதிகளவு அக்கறை காட்டப்படுகிறது. இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கல்வி மறுசீரமைப்பில் கூட ஆசிரியர் வாண்மைசார் விருத்திக்கான பல்வேறு விதப்புரைகள் முன்மொழியப்பட்டுள்ளன. அந்தவகையில் இலங்கையில் ஆசிரியர் வாண்மை விருத்திக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன மாற்றங்களை பின்வருமாறு பட்டியலிட முடியும். 

தகைமை விருத்திக் கற்கை நெறி (Broadening Course) ஆசிரியர்கள் மேலதிக தகைமைகளைப் பெறும் பொருட்டு தமது அறிவையும் திறன்களையும் விரிவாக்கிக்கொள்ள இக்கற்கை நெறி ஊக்குவிக்கும். அங்கீகரிக்கத்தக்க சான்றிதழ்களைப் பெறக் கூடிய இக் கற்கைநெறிகளை பல்கலைக்கழகங்களும் தேசிய கல்வி நிறுவகமும் வழங்குகிறது.

மீள் பயிற்சிக் கற்கை நெறி (Re-Training Course) பிரதானமாக குறிப்பான பாடத்துறைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் நோக்கமுடையது. இக் கற்கைநெறிகள் ஆசிரியர் பயிற்சி நிலையங்களில், தேசிய கல்விக் கல்லூரிகளில், தேசிய கல்வி நிறுவகத்தில், பல்கலைக்கழகங்களில் நடாத்தப்படும். மேலும், இலங்கை, ஜேர்மன் போன்ற நாடுகளுக்கிடையில் கைச்சாத்தான இரு பக்க உடன்படிக்கை மூலம் இலங்கையில் ஆசிரியர் வாண்மை விருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஜேர்மனும் ஆதரவு வழங்கி வருகின்றது. 

ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ஆதாரக் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் ஆசிரியர்களுக்கு முன் சேவைப் பயிற்சியையும் வழங்குவதில் தீவிரமாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கல்வி விஞ்ஞான கலாசார நிறுவனம் (UNESCO), ஆசிரிய சங்கங்கள் (Teacher Union), திட்டமிடல் பிரிவு (TEP) என்பன பல வழிகளில் முயன்று வருகிறது.

நவீன உலகப் போக்கினை வெற்றி கொள்வதற்காக இலங்கை அரசு தனது நவீன கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக தகவல் தொழிநுட்ப்பத்தையும் உட்சேர்த்து திட்டங்களை வகுத்து வருகின்றது. 

இதற்கமைய ஆசிரியர்களது கணினிசார் அறிவினை மேம்படுத்தி ஆசிரியர் வாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் பல்வேறு முன்னேற்றகரமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது ஆசிரியர்களின் கணினி சார்ந்த அறிவு விருத்தியானது அவர்களது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பெரும் உறுதுணையாக அமையும் எனும் தொனிப்பொருளில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பாடசாலைகளில் கணினியை எவ்வாறு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தலாம் எனும் விழிப்புணர்வும் செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இரண்டாம் நிலைக் கல்வி நவீனமயப்படுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் 2000 பாடசாலைகளுக்கு கற்றல் வள நிலையங்களும் ஒவ்வொரு வள நிலையங்களும் கணினி வசதிகளுடனும், 11 கல்வியியற் கல்லூரிகளுக்கு இணைய வசதிகளும் செய்யப்பட்டு ஆசிரியர்களது வாண்மை விருத்தி செய்யப்பட்டு வருகின்றது

கணினி அறிவு என்பது கல்வி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. வாழ்வியல் முதலீடுமாகும். இதற்கமைய ஆசிரியர்கள் தமது வாண்மை விருத்தியைப் புதிய கல்விச் செல்நெறிகளுக்கு ஏற்ப விருத்தி செய்யவேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆசிரியர்கள் மரபு ரீதியாகப் பெற்று வந்த வகிபங்குகளையும் ஏற்று வினைத்திறனுடன் செயற்படக்கூடிய தொழிற் தகமையை பெற்றுக்கொள்ளுதல் இன்றியமையாததாகும். வகுப்பறைக் கற்பித்தலின் போது ஆசிரியர்கள் கணினியைக் கொண்டு இன்றைய பரந்த உலகின் சூட்சுமங்களையும், விளக்கங்களையும், உருவப்படங்களையும், காட்சிகளையும், இடங்களையும் கட்புலனும் செவிப்புலனும் இணையக் கற்பிக்கும் போது கற்பித்தலின் விளைதிறனை ஆசிரியர்கள் இலகுவாக எய்துவர்.

மேற்படி நவீன மாற்றங்களுக்கு முகங்கொடுத்து கற்பித்தலை மேற்க்கொள்ளும் உயர் தொழிலாளர்களான ஆசிரியர்களது வாண்மை விருத்திக்காக பின்வரும் நடவடிக்கைகள் அண்மைக்காலங்களில் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட சுபீட்சத்தின் தொலைநோக்கு எனும் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட ஞானத்தைக் கொண்ட பிரசை, அறிவைக் கொண்ட சமூகம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களது வாண்மையை மேம்படுத்தி அவர்களது தரத்தை அதிகரிக்கும் நோக்கில் தேசிய கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டது. 

அத்தோடு தகவல் தொழிநுடப் திறனுடைய ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கில் ஆசிரியர்களுக்கு ICDCAC, IPICT போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் ஆசிரியர் வாண்மையை விருத்தி செய்யும் நோக்கில் ஜப்பான், கொரியன் மொழிகளைப் பயில்வதற்கான புலமைப்பரிசில்களும் வழங்கப்படுவதோடு தமது கல்வித் தரத்தை மேம்படுத்த உயர் படிப்புகளை மேற்கொள்ள உள்நாடு மற்றும் வெளிநாடுகளை மையமாகக் கொண்டு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றது.

அத்தோடு ஆசிரியர் கலாசாலைகளில் கட்டாயமயமாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. BED கற்கையும்

இலங்கையில் ஆசிரியர் வாண்மை விருத்தியை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கான அணைத்து பாடநெறிகளும் தற்போது ஒரு ஒழுங்கமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டு கற்றல் கற்பித்தல் செயல்முறையில் ஈடுபடும் ஆசிரியர் SLQF மட்டம் 12 வரை செல்லக்கூடிய வகையில் அவை ஒழுங்குபடுத்தப்பட்டு ஆசிரியர்களுக்கான வினைதிறன் தடைதாண்டல் பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன.

ஆசிரியர்கள் வெறுமனே ஏட்டுக் கல்வியை மட்டும் கொடுப்பவராக இருத்தலாகாது. அவர் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இணைப்பாடவிதான செயற்பாடுகளையும் மற்றும் அறிவினை தோற்றுவிப்பவராகவும் இன்றைய நிலையில் காணப்படல் வேண்டும். மாணவர்களிடம் காணப்படும் ஆற்றலை மாணவர்களையே உணரச் செய்வதற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். மாணவர்களுடைய வெற்றிக்கும் அவர்களின் நிகழ்கால

வாழ்க்கைக்கும் ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் செயற்பாடு துணையாக அமைய வேண்டும். 

ஒரு ஆசிரியர் சிறந்த கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டுமாயின் அறிவு மட்டும் கொடுத்தால் போதாது அதனையும் தாண்டிய செயற்பாடுகள் மனப்பாங்கு. அற்பணிப்பு, ஊக்கம், தேடல், தத்துவம் என்பவற்றில் மாற்றங்கள் ஏற்படவேண்டும். ஆசிரியர்கள் பூரணமாக இருந்தால் மட்டுமே அவரால் பயிற்றுவிக்கப்படும் மாணவர்களும் பூரண ஆற்றல் உடையவராக உருவாக முடியும். இவ்வாறு ஒரு ஆசிரியரை பூரணமானவராக கட்டமைப்பதற்கு ஆசிரியர் வாண்மை விருத்தி என்பது இன்றியமையாததாகும்.

சண்முகநாதன் வினுக்சன்

இரண்டாம் வருடம் முதலாம் அரையாண்டு
கல்வியியல் சிறப்பு கற்கை 
கல்வி பிள்ளை நலத்துறை 
கிழக்குப்  பல்கலைக்கழகம்
இலங்கை