
இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வௌிநாடுகள் மற்றும் உலகத் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இது, இலங்கையுடனான தற்போதைய இராஜதந்திர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக வௌி விவகார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.
இலங்கையின் நீண்டகால நட்பு நாடான அமெரிக்காவின் வாழ்த்துக்களை அதன் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
ஜனநாயக விழுமியங்கள் மற்றும் வலுவான மனித உறவுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை நீண்ட காலம் நீடிக்கும் என்று வெளியுறவுச் செயலாளர் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வௌியிட்டு வலியுறுத்தினார்.
வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் அதில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
அதில், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்துவதில் இந்தியாவின் ஆர்வத்தை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மேலும், சீன ஜனாதிபதி, சீன பிரதமர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வென்க் யீ ஆகியோரின் சுதந்திர தின செய்தியும் வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகம் ஊடாக அதிகாரப்பூர்வ சுதந்திர தின செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் சீனாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்தச் செய்தி வலியுறுத்தியது.
மேலும், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் கியூபா உள்ளிட்ட பல நாடுகளும் இலங்கைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை உலகம் முழுவதும் வென்றுள்ள வலுவான மற்றும் நீண்டகால இராஜதந்திர உறவுகளை இது பிரதிபலிக்கிறது.
இந்த வாழ்த்துக்களுக்கு இலங்கை அரசாங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அமைதி மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்துடன் அர்த்தமுள்ள கூட்டாண்மைகளைத் தொடங்க உறுதிபூண்டுள்ளதாகவும் வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.