
இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியின் அனைத்துப் பங்குரிமைகளையும் இலங்கை வங்கி பெற்றுக் கொண்டு, இலங்கை வங்கியுடன் இணைப்புச் செய்யப்பட்ட நிறுவனமாக தொழிற்பாடுகளை மேற்கொண்டு செல்வதற்கும், அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியின் அனைத்துப் பங்குகளையும் மக்கள் வங்கி பெற்றுக் கொண்டு குறித்த வங்கியுடன் இணைப்புச் செய்யப்பட்ட நிறுவனமாக தொழிற்பாடுகளை மேற்கொண்டு செல்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
25.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 11 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
1997 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கிச் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டுள்ள இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியின் பங்குச் சந்தையில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள விசேட வங்கியாகும்.
வீடமைப்புக்கான நிதி வழங்கல் மற்றும் அதற்குரிய ஏனைய சேவைகளை வழங்குதல் போன்றன அதன் நோக்கங்களாகும். 1975 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கிச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி முழுமையான அரசுக்குச் சொந்தமான அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள விசேட வங்கியாவதுடன், அதன் மூலம் வீடமைப்புப் பற்றிய ஈட்டுக் கடன் வசதிகள் வழங்கப்படுகின்றது.
இவ்விரண்டு வங்கிகளும் சிறிய சந்தைப் பங்குகளுடன் குறைவான இலாபம், குறைந்த மூலதனத்தால் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான இயலுமை இல்லாமையால், குறித்த வங்கிகளின் தற்போதுள்ள வணிகக் கட்டமைப்பு நிலைபெறுதகு வகையில் இல்லையென் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய, இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி மற்றும் அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியின் தொழிற்பாட்டின் வினைத்திறனை அதிகரித்து, ஒட்டுமொத்த வங்கித் துறையின் நிலைபேற்றுத் தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் வைப்பாளர்களின் தேவைகளைப் பாதுகாத்தல் போன்ற நோக்கங்களுடன், இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியின் அனைத்துப் பங்குரிமைகளையும் இலங்கை வங்கி பெற்றுக் கொண்டு, இலங்கை வங்கியுடன் இணைப்புச் செய்யப்பட்ட நிறுவனமாக தொழிற்பாடுகளை மேற்கொண்டு செல்வதற்கும், அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியின் அனைத்துப் பங்குகளையும் மக்கள் வங்கி பெற்றுக் கொண்டு குறித்த வங்கியுடன் இணைப்புச் செய்யப்பட்ட நிறுவனமாக தொழிற்பாடுகளை மேற்கொண்டு செல்வதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதியினால் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.












