முன்னாள் இராணுவ கேணல் கைதுக்கு எதிரான இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு !



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறாமல் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான கேணல் கே.எஸ்.மத்துமகேவை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவை இன்று (11) மேன்முறையீட்டு நீதிமன்றம் ஜனவரி மாதம் 29ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

குறித்த கேணல் அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி சேனவிரத்னவுக்காக ஒரு தனிப்பட்ட சட்டத்தரணி ஆஜரானார். அத்துடன், இந்த விசாரணைகள் தொடர்பான மூல முறைப்பாட்டைச் செய்த அருட்தந்தை ரோஹான் டி சில்வாவும், வழக்கில் தலையிட்டு கருத்துத் தெரிவிக்க அனுமதி கோரி தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் விண்ணப்பித்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, தமது கட்சிக்காரர் ஒரு சிரேஷ்ட இராணுவப் புலனாய்வு அதிகாரி என்றும், அவர் தற்போது தியத்தலாவ இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் கடமையாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், தனது கட்சிக்காரரைக் கைது செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடனேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், விசாரணைகளைத் தடை செய்யத் தமக்கு எந்த அவசியமும் இல்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறினார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், இந்த விசாரணை தொடர்பான முழுமையான அறிக்கைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, இந்த வழக்கில் ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை டிசம்பர் மாதம் 11ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும், அதற்கான மறுப்பு ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை ஜனவரி மாதம் 14ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் தரப்பினர்களுக்கு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, மேலதிக உறுதிப்படுத்தல்களுக்காக இந்த மனுவை ஜனவரி மாதம் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.