வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு மூன்று மக்கள் ஆணையை பெற்றுக்கொண்ட அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது - சஜித் பிரேமதாச



வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு மூன்று மக்கள் ஆணையை பெற்றுக்கொண்ட அரசாங்கம், துன்பப்படும் நாடு, உதவியற்ற வாழ்க்கையை இன்று ஏற்படுத்தி இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதியால் 2026ஆம் ஆண்டுக்காக சமர்ப்பித்திருக்கும் வரவு செலவு திட்டம் தொடர்பில் பார்ப்பதற்கு முன்னர் 2025 வரவு செலவு திட்டத்ததை அரசாங்கம் எவ்வாறு செயற்படுத்தி இருக்கிறது என பார்க்க வேண்டும்.இந்த வருடத்தின் வரவு செலவு திட்ட முன்மொழிவுகளின் நிதி முன்னேற்றம் மற்றும் பெளதிக முன்னேற்றம் தொடர்பில் நான் இந்த சபையில் கேள் எழுப்பி இருந்தேன். இந்த கேள்விக்கு பதிலளிக்க காலம் தேவை என தெரிவித்தார்கள். அரசாங்கம் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க காலம் கேட்டதற்கு காரணம் என்ன என்பது தற்போது தெரிந்துகொள்ளலாம்.

ஏனெனில் இந்த வருட பாடசாலை கல்வியை நவீனப்படுத்த 500 மில்லியன் ரூபா ஒதுக்கி இருக்கிறது. அதில் இதுவரை பயன்படுத்தி இருப்பது நூற்றுக்கு 20 வீதமாகும். உயர் தர பல்கலைக்கழகம் ஒன்றில் பாடநெறியை தொடர்வதற்காக 200 மில்லியன் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் முன்னேற்றம் நூற்றுக்கு 15வீதமாகும். அதேபோன்று இன்னும் பல வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் நூற்றுக்கு 50 வீத முன்னேற்றம்கூட இல்லை. 2025 வரவு செலவு திட்டத்தின் முன்னேற்றம் இவ்வாறு என்றால் 2026 வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் தெரிவிப்பதற்கு என்ன இருக்கிறது?

மேலும் மக்களின் வாழ்க்கைச்சுமையை குறைப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால் இன்று அத்தியாவசிய பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.35ஆயிரிம் பட்டதாரிகளுக்கு வாக்குறுதி அளித்த தொழிலை வழங்கினீர்களா? அதேபோன்று வாக்குறுதியளித்த 16600 ஆசிரியர்களின் தொழில் எங்கே? வறுமை ஒழிக்கும் வேலைத்திட்டம் எங்கே? ஜனாதிபதி தற்போது அடுத்த வருடத்துக்காக சமர்ப்பித்திருக்கும் வரவு செலவு திட்ட அறிக்கையின் ஆசிரியர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானியாகும்.

மேலும் திறைசேரி வழிந்தோடுவதாக தெரிவிக்கிறார்கள்.அரசாங்கம் மக்களின் பின்னால் விரட்டிச்சென்று ஒவ்வொரு விடயத்துக்கும் வரி அறவிட்டு வருகிறது. அவ்வாறு திறைசேரியை நிரப்புவதாக இருந்தால் பாலர் பாடசாலை மாணவனுக்கும் இதனை செய்யலாம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கைவிட அதிக வரியை அரசாங்கம் அறவிட்டிருக்கிறது. இவ்வாறு அறவிட்ட 479 பில்லியன் ரூபாவை மக்களின் நன்மைக்காக முதலீடு செய்ய வேண்டும். அதற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி தயாராக இருக்கிறது.

மேலும் அரசாங்கத்தின் நடவடிக்கையால் மக்கள் இன்று விரக்தியடைந்திருக்கின்றனர். அதனால் மாகாண சபை தேர்தலை நடத்தி நாட்டு மக்களுக்கு அரசு தொடர்பாகவும் ஏனைய அரசியல் கட்சிகள் தொடர்பாகவும் நிலைப்பாட்டை தெரிவிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இடமளிக்க வேண்டும். ஜனாதிபதி 3 மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டு இன்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் போன்று செயற்படுகிறார் என்றார்.