மட்டக்களப்புப் பகுதியில் செயற்பட்டு வந்த ஒரு போலி ஆண் சட்டத்தரணி, கடந்த சனிக்கிழமை (08) ஓந்தாச்சிமடம் பிரதேசத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 42 வயதுடையவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அடையாள அணிவகுப்புக்காக இன்று செவ்வாய்க்கிழமை (11) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில், அவருக்கு எதிராக முறைப்பாடு செய்த மூன்று பேரும் குறித்த நபரை அடையாளம் காட்டினர். இதனைத் தொடர்ந்து, நீதவான் அந்த நபரை எதிர்வரும் நவம்பர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணி கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக சட்டத்தரணி போல நடித்து வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த போலி சட்டத்தரணியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, சட்டத்தரணி என அடையாளப்படுத்தும் போலி வருகை அட்டை, ரப்பர் முத்திரை, மற்றும் வாகனங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களைத் தயாரித்துக் கொடுத்த கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த அச்சுக்கூட உரிமையாளர் ஒருவரும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








.jpeg)



.jpeg)