மஹரகம - தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் சிசிரிவி கமராவை பொருத்தி பெண்கள் ஆடை மாற்றுவதை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் அந்நிலையத்தின் உரிமையாளர் தலங்கம பொலிஸாரால் திங்கட்கிழமை (08) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளரின் கையடக்கத் தொலைபேசியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அணியறைக்குள் பெண்கள் ஆடை மாற்றும் காணொளிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியில் உள்ள காணொளிகள் பெண்கள், சிறுமிகள் மற்றும் யுவதிகள் உள்ளிட்ட பலர் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் குறித்த காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்தாரா அல்லது வேறு எவருக்கேனும் விற்பனை செய்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













