
கண்டி, கொட்டுகொடல்ல வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள தனியார் 5 மாடி கட்டிடமொன்றின் மேலதிக கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, இன்று (24) ஞாயிற்றுக்கிழமை அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
மேற்படி விபத்தின் போது கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் மீது இரும்பு மற்றும் சிமெண்ட் கான்கிரீட் இடிபாடுகள் வீழ்ந்து அதில் சிக்கி அவர்கள் படுகாயமடைந்தனர்.
அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு, அவசர சிகிச்சைக்காக வாகனங்கள் மூலம் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்களுக்கு அவசர அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வைத்தியசாலை குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தக் கட்டுமானப் பகுதி மிகவும் ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த கண்டி தலைமையக பொலிஸ் உத்தியோகத்தர்களும், இந்தக் கட்டுமானப் பணிகள் பாதுகாப்பற்ற ஒன்றாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக கண்டி தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கட்டிடத்தின் மேலதிக நிர்மாணப்பணிகள் எவ்வித பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றாமல் அவசரமாக முன்னெடுக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.






.jpeg)
.jpeg)




