
சிறுவர்களின் உரிமைகள் நாட்டின் அரசியலமைப்பின் கீழ் அடிப்படை உரிமைகளாக மாற்றியமைக்கப்பட்டு, அவை அனைத்தையும் விட முதன்மையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பெற்றோர்கள் பிள்ளைகளின் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்கு முதலிடம் வழங்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், பாலர் பாடசாலை பிள்ளைகளுக்கான மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் தேசிய கொள்கையாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
குளியாபிட்டிய நகரில் அமைந்துள்ள 11 பாலர் பாடசாலைகளைச் சேர்ந்த 550 சிறார்களுக்கு பாடசாலை பைகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தற்போது மக்கள் பெரும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். தங்களது அத்தியாவசியத் தேவைகளையும் விருப்பங்களையும் கூட நிறைவேற்ற முடியாத நிலை காணப்பட்ட போதிலும், பெற்றோர்கள் எப்போதும் தமது பிள்ளைகளுக்கே முதலிடம் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலை அப்படியே தொடர வேண்டும். குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதற்கு எம்மால் முடிந்த உச்சக்கட்ட பங்களிப்புகளை வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம்.
அன்று பாடசாலை சிறார்களுக்கு சீருடை மற்றும் மதிய உணவு என்பவற்றை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச வழங்கி வைத்தார். இந்த தருணத்திலாவது குறைந்தபட்சம் பாலர் பாடசாலை குழந்தைகள் அனைவருக்குமான முறையான ஊட்டச்சத்து வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.
இது நம் அனைவரினதும் பொறுப்பாகும். அரசாங்கத்தின் பங்களிப்பு ஒருபுறமிருக்க, பாலர் பாடசாலை மட்டத்தில் பெற்றோர்களும் ஒன்றிணைந்து பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். முடிந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறார்களுக்கு நாம் கூடிய முன்னுரிமையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
நாட்டின், இனத்தின் மற்றும் தேசத்தின் எதிர்காலமான சிறார்கள் தொடர்பாக பெற்றோருக்குப் பெரும் பொறுப்பு காணப்படுகிறது. பிள்ளைகளைப் பராமரிப்பது, அவர்களுக்குச் சரியான பாதுகாப்பு, அரவணைப்பு மற்றும் பக்கபலத்தைப் பெற்றுக் கொடுப்பது பெற்றோர்களின் முதற்கடமையாகும்.
ஒரு மகளுக்குத் தந்தையாக நானும் குழந்தைகளின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்து வைத்துள்ளேன். இந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய கருணை, அன்பு மற்றும் பாதுகாப்பினை நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
சிறார்களின் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நாம் அர்ப்பணிப்போடு நடந்து கொள்ள வேண்டும். குழந்தை பிறந்த நாளிலிருந்து 5 வயது வரையிலான காலகட்டத்திற்குள் அவர்களின் மூளை வளர்ச்சி 90 வீதத்தை அடைகிறது என குழந்தை நல விசேட மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நமது நாட்டில் தற்சமயம் 17,800 க்கும் அதிகமான பாலர் பாடசாலைகள் உள்ளன. அவற்றில் 21,500 க்கும் அதிகமான ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், 2,80,000 க்கும் அதிகமான குழந்தைகள் கல்வி கற்கின்றனர். இவ்வாறானதொரு முக்கிய காலகட்டத்தில், நமது நாட்டில் ஒரு முறைசாரா குழந்தைப் பருவ வளர்ச்சி திட்டமே காணப்படுகிறது.
நமது நாட்டில் மாகாணத்திற்கு மாகாணம் இந்த பாலர் கல்வி வேறுபடுகின்றதுடன், வெவ்வேறு பாடத்திட்டங்களே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை மாற்றி, சர்வதேச தரத்திலான முறையான கல்வி இளம் குழந்தைப் பருவத்திலிருந்தே முன்னெடுக்கப்பட வேண்டும். உலகத் தரத்தின்படி, இளம் குழந்தைப் பருவத்திலிருந்து 12 ஆம் வகுப்பு வரை குழந்தைகளின் கல்வி முறை ஒழுங்காக வலுவூட்டப்பட வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் சபை கூட ஏற்றுக்கொண்டுள்ளது.
எனவே, இன்னும் ஓரிரு வருடங்களில் பாடசாலைக் கல்விக்குள் நுழையவுள்ள இந்த குழந்தைகளுக்குச் சிறந்ததொரு எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்றார்.





.jpeg)
.jpeg)





