பௌத்த சாசன சீரழிவைத் தடுக்க சட்டத்திருத்தம் அவசியம் - மல்வத்தை மகாநாயக்க தேரர் வலியுறுத்தல்


பௌத்த சாசனத்திற்கு ஏற்பட்டுவரும் சீரழிவைத் தடுப்பதற்காக விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தங்களை கொண்டு வருமாறு மல்வத்தை பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் தெரிவித்தார்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல மல்வத்தை மகா விகாரைக்குச் சென்றிருந்த போதே மகாநாயக்கத் தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்படவுள்ள பௌத்த துறவிகள் தொடர்பான மகாசங்க மாநாடு குறித்து மகாநாயக்க தேரருக்கு தெளிவுபடுத்துவதற்காக, கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கு சென்றிருந்தார். அதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மகாநாயக்கத் தேரர் மேலும் தெரிவிக்கையில்,

மகா சங்கத்தினர் தொடர்பாக பௌத்த ஒழுக்கக்கோவை ஒன்றைக் கொண்டுவருவதற்காக 2006 ஆம் ஆண்டு முதல் தான் பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்ததாகவும் ஆனால் அதற்கான ஆதரவு கிடைக்காத காரணத்தால் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.

2006ஆம் ஆண்டு முதல் பலர் ஆட்சியில் இருந்தனர். அவர்கள் யாரும் இதற்கான ஆதரவை தெரிவிக்கவில்லை. இதனால் பௌத்த துறவிகள் ஒழுக்கக்கோவை ஒன்றைக் கொண்டுவரும் யோசனையை தாம் கைவிட்டதாகவும் தெரவித்தார். எனவே தற்போதாவது பௌத்த சாசனத்திற்கு ஏற்பட்டு வரும் சீரழிவைத் தடுப்பதற்காக விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தங்களையாவது கொண்டு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

பௌத்த துறவிகள் ஒழுக்கக்கோவை ஒன்றை தயாரிப்பதற்காக மல்வத்து மகாநாயக்கரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பௌத்த பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி மகா சங்கத்தினர் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும், அந்த முயற்சியை வெற்றிகொள்ள முடியாமல் போனதாகவும், அதன் விளைவுகளையே தற்போது காணக் கூடியதாக உள்ளதாகவும் மகாநாயக்க தேரர் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல, மகா சங்கத்தினரால் பிரதான எதிர்க்கட்சியிடம் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் சங்க மாநாடொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிவிப்பதற்காக சஜித் பிரேமதாச எதிர்வரும் நாட்களில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற உள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி அதற்கான பொருத்தமான திகதியையும் அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.