நுவரெலியாவில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்ற நபர் கைது!



பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 3,755 கஞ்சா கலந்த போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் திங்கட்கிழமை பிற்பகல் (08) மேற்கொண்ட விசேட சோதனையின் போது, இந்த 3,755 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா, பழைய பஜார் வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில், ஆயுர்வேத திணைக்களத்தின் முறையான அனுமதிப்பத்திரம் எதுவுமின்றி, பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக இம்மாத்திரைகள் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் அனுமதிப்பத்திரம் இன்றி ஆயுர்வேத மருந்துக்கடை நடத்துவதாகக் கூறிக்கொண்டு, அதன் போர்வையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்கே முன்னுரிமை அளித்து வந்துள்ளார்.

இளைஞர்கள் இம்மாத்திரைகளை வாங்குவதற்காக அடிக்கடி அந்த கடைக்கு வந்து செலகின்றனர் என கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட மாத்திரைகளும் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.