
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், நேற்று திங்கட்கிழமை (08) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, மஹபாகே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஜயசிங்கபுர பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்ல பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 60 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதேநேரம், சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பெருந்தொகையான கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோனபொல பகுதியில் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 9 பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1,750 லீற்றர் கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோனபொல பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.








.jpg)



