
1983 'கறுப்பு ஜூலை இனக் கலவரம் இடம்பெறக் காரணமான காரணிகள் மற்றும் இத்தகைய அழிவுக்கு தலைமை தாங்கிய நபர்கள் யார் என்பது தொடர்பில் கண்டறியவும், இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் ஏற்படுவதை தடுப்பதற்கும் பாராளுமன்ற விசேட குழு ஒன்றை நியமிக்குமாறு ஆளுங்கட்சியின் 51 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு பாராளுமன்றத்தில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) காலை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சபைக்கு நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனூர திஸாநாயக்க சபைக்கு சமர்ப்பித்தார்.
பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணையில், அமைச்சர்களான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஆனந்த விஜேபால ஆகிய இரண்டு அமைச்சர்கள் உட்பட 51 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தேவையான பரிந்துரைகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வேதனையடைந்த அனைத்து மக்களுக்கும் நியாயமான நிவாரணம் அல்லது கௌரவமான பரிகாரத்தை வழங்கவேண்டியது அரசின் பொறுப்பாகும் எனப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
'1983ஆம் ஆண்டில் இடம்பெற்ற 'கறுப்பு ஜூலை' கலவரமானது, நாட்டைப் பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகப் பல தசாப்தங்கள் பின்னோக்கித் தள்ளியதுடன், ஆயிரக்கணக்கான பெறுமதியான உயிர்கள் பலியாகவும், பாரிய சொத்துச் சேதங்கள் ஏற்படவும் வழிவகுத்தது. இதில் மிகக் கொடூரமான சேதம் யாதெனில்,பௌதிக அழிவுகளை விடவும் சமூகங்களுக்கு இடையே பதற்றம், பயம் மற்றும் சந்தேக உணர்வுகள் தீவிரமடைந்தமையேயாகும்' எனப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றிலேயே மிக மோசமான துயரமாகக் கருதப்படும் 1983 கறுப்பு ஜூலை வன்முறையினால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், சொத்துச் சேதங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்ட உளவியல் ரீதியான மற்றும் சமூகப் பாதிப்புகள் இதுவரை சரியாக மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்காலத்தில் இத்தகைய இனவாத மற்றும் நெருக்கடியான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு, வலுவான சட்ட, சமூக மற்றும் நல்லிணக்க பொறிமுறையொன்றை உருவாக்கவேண்டிய தேவை உருவாகியுள்ளதுடன், இலங்கையில் உள்ள பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே நிலவும் நம்பிக்கை மற்றும் நன்மதிப்பைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பது இன்றியமையாதது எனவும் அந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த வன்முறைச் சம்பவம் இடம்பெறுவதற்கான காரணிகள் மற்றும் இத்தகைய அழிவுகளுக்கு தலைமை தாங்கிய நபர்கள் யார் என்பது தொடர்பில் கண்டறியப்படவேண்டும் எனவும் அந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1983 கறுப்பு ஜூலை கலவரத்தை மட்டும் மையமாகக் கொள்ளாமல், தேசிய நல்லிணக்கம் குறித்து ஆராய்வதற்குத் தெரிவுக்குழு ஒன்றை நியமிப்பதே மிகவும் பொருத்தமானது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் பாராளுமன்ற விவாதத்தின்போது தெரிவித்திருந்த நிலையிலேயே, ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.












