மிதுன ராசி வாசகர்களே! உங்களின் நான்காம் ராசியில் சஞ்சரித்த சனி பகவான் பூர்வ புண்ய புத்திர ஸ்தானமான ஐந்தாம் ராசியில் 15-11-2011 முதல், முதல் கட்டமாக 15.5.2012 வரை துலாம் ராசியில் குரு பகவானின் பார்வையில் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் குடும்ப முன்னேற்றத்திற்கான சம்பவங்கள் நடக்கும். வாரிசுகள் உண்டாகும். நெடுநாட்களாகத் தடைபட்டிருந்த திருமணம் கைகூடும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் மேலோங்கும். உங்களின் சிந்தனா சக்தி பலப்படும். எவரையும் குறை சொல்லாமல் பேசி உங்கள் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.
ஆனாலும் சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும். என்றாலும் உங்கள் கெüரவத்திற்கு பங்கம் வராது. பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் அநாவசியச் செலவுகளைச் செய்ய வேண்டாம். மற்றபடி நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்களின் முக்கியமான விஷயங்களில் தக்க ஆலோசனைகளை வழங்குவார்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றி விடுவீர்கள். முந்தைய காலத்தில் திருடு போன பொருள் திரும்பவும் உங்கள் கை வந்து சேரும். செய்தொழிலில் நிலவும் போட்டிகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள்.
16.5.2012 முதல் 80 நாட்கள் அதாவது 3.8.2012 வரை சனி பகவான் வக்கிர கதியில் கன்னி ராசியில் குரு பகவானின் பார்வையைப் பெற்று சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். புதிய வாகனம் வாங்குவீர்கள். உங்களின் சுய முயற்சி நல்ல முறையில் பலனளிக்கும். சிலர் வசிக்கும் வீட்டை பழுது பார்ப்பீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள். எதிரிகளும் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். ஷேர் மார்க்கெட் மூலமும் அவ்வப்போது சிறுசிறு லாபம் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
4.8.2012 முதல் 2.11.2014 வரை மறுபடியும் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களின் பணப்புழக்கத்தில் சிறிது பின்னடைவுகளை உண்டாக்குவார். மனதிலும் சஞ்சலங்கள் உண்டாகும். அதனால் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும். மேலும் எவருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கித் தர வேண்டாம். அதோடு எவருக்கும் ஜாமீன் போடவும் கூடாது. மற்றபடி இந்தக் காலகட்டத்தில் சமுதாயத்தில் உங்கள் பெயர், புகழ் உயரும். உங்கள் காரியங்களைச் சலிப்பில்லாமல் ஆற்றுவீர்கள். முயற்சிகளை சரியாக மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். உங்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் உங்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வார்கள். அன்னையின் உடல் உபாதை தீரும்.
31.5.2013க்குப் பிறகு சனி பகவானுக்கு குரு பகவானின் அருட் பார்வை கிடைக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நீங்கள் வழக்கத்தை விட சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். ஆன்மீகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பதவி உயர்வு கிடைத்து இடமாற்றத்தையும் பெறுவீர்கள். புதிய பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்வீர்கள். வேகத்துடன் விவேகமும் கூடும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப உங்களின் செயல்திட்டங்களை மாற்றியமைத்துக்கொள்வீர்கள். உங்களின் தெளிந்த சிந்தனைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் காலகட்டம் இது.
உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இரண்டுமே கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அலுவலகத்தில் மிடுக்குடன் வலம் வருவீர்கள். சக ஊழியர்கள் உங்களிடம் பகைமை மறந்து நட்பு பாராட்டுவார்கள். ஆனாலும் புதிய பொறுப்புகளில் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டிவரும். அலுவலகத்தில் சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
வியாபாரிகள் சுக செüகர்யங்களை எதிர்பார்க்காமல் உழைப்பீர்கள். முக்கியமான விஷயங்களை மட்டும் உடனே செய்யவும். போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளைச் சந்திப்பீர்கள். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே சிரத்தையுடன் உழைக்க வேண்டி வரும். மற்றபடி கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் இந்தக் காலகட்டத்தில் சிறப்பாகவே இருக்கும்.
விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறுவீர்கள். கொள்முதலிலும் எதிர்பார்த்த வருமானத்தைக் காண்பீர்கள். நீர்ப்பாசன வசதிகளால் விளைச்சல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். மற்றபடி பூச்சிக்கொல்லி மருந்துக்காகக் கூடுதல் செலவு செய்ய நேரிடும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் அனுசரணையாக நடந்துகொண்டால் மேலும் நன்மை அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சியில் வளர்ச்சியடைவீர்கள். ஆனாலும் தொண்டர்கள் அலட்சியமாக நடந்துகொள்வார்கள். அதனால் கோபப்படாமல் விவேகத்துடன் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். சமுதாயத்திற்குப் பயன்படும் உண்மையான தொண்டுகளில் மட்டுமே ஈடுபடுவீர்கள். எதிரிகள் உங்களின் செயலாற்றும் திறனைக் கண்டு அதிசயிப்பார்கள்.
கலைத்துறையினர் கடமைகளை உணர்ந்து செயல்படுவீர்கள். சக கலைஞர்களிடம் தேவையான உதவிகளைக் கேட்டுப் பெறுவீர்கள். கிடைக்கும் சில ஒப்பந்தங்கள் நிறைவு தருவதாக இருக்காது. மற்றபடி ரசிகர்களின் ஆதரவினால் சில கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருமானத்தைப் பெருக்குவீர்கள். கையிருப்புப் பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
பெண்மணிகள் குடும்பத்தில் நற்பெயர் வாங்குவீர்கள். கணவருடன் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். குழந்தைகள் வழியிலும் தாய் வழியிலும் சிறுசிறு தொல்லைகள் வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்ப விசேஷங்களுக்காக ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள்.
மாணவமணிகளின் பயிற்சியும் முயற்சியும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். கடினமாக உழைத்துக் கணிசமான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பயத்தையும், பதற்றத்தையும் தவிர்க்க யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்யவும். உடன் பிறந்தோரிடம் தக்க உதவிகளை எதிர்பார்க்கலாம். பெற்றோர்களும் ஆசிரியர்களும் உங்களிடம் கனிவாகப் பழகுவார்கள். உற்சாகத்துடன் விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.
பரிகாரம்: குரு தட்சிணாமூர்த்தியை வியாழக் கிழமைகளில் வழிபட நன்மைகள் பெருகும்.
--