ரிஷப ராசி வாசகர்களே! உங்களின் ஐந்தாம் ராசியில் சஞ்சரித்த சனி பகவான் ஆறாம் ராசியான ருண ரோக சத்ரு ஸ்தான ராசியில் 15.11.2011 முதல், முதல் கட்டமாக 15.5.2012 வரை துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் குரு பகவானின் பார்வையைப் பெற்று உச்ச ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானால் எடுத்த காரியங்களை முடிக்காமல் பின் வாங்க மாட்டீர்கள். உங்களின் வசீகரமான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு கூடும். பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் மறையும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை நிலவும். தொழிலில் சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். கடுமையாக உழைத்து வெற்றிகளைப் பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் வளர்ச்சியால் பூரித்துப் போவார்கள்.
உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை அனுசரித்துச் செல்லவும். அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்யவும். மற்றபடி எதிர்பாராத நபர்களிடமிருந்து நல்லாதரவைப் பெற்று குறிப்பிட்ட இலக்குகளை அடைவீர்கள். உங்கள் ஆன்மீக பலம் முன்பை விட அதிகரிக்கும். நீண்ட நாளைய குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அடமானம் வைத்த பொருட்களையும் மீட்டு விடுவீர்கள்.
16.5.2012 முதல் 80 நாட்கள் அதாவது 3.8.2012 வரை சனி பகவான் வக்கிர கதியில் கன்னி ராசியில் குரு பகவான் பார்வையில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். இந்தக் காலகட்டத்தில் உங்களை முன்னிலைப்படுத்தக்கூடிய அளவில் சம்பவங்கள் நடக்கும். வாழ்க்கையில் சலிப்படையாமல் தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரிந்திருந்த நண்பர்கள் திரும்பவும் வந்து இணைவார்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களை நடத்துவீர்கள். திடமாகச் சிந்தித்து தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். கடினமான காரியங்களையும் செய்து முடிப்பதற்கு இறையருள் கிடைக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது.
4.8.2012 முதல் 2.11.2014 வரை துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் செய்தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். புதிய முயற்சிகளை நண்பர்களுடன் இணைந்து செயல்படுத்துவீர்கள். அநாவசியப் பயணங்களையும் செய்ய நேரிடும். மேலும் வயிறுப் பகுதியில் சிறு உபாதை தோன்றும். எனவே சிறு அறிகுறிகுறிகளையும் அலட்சிப்படுத்த வேண்டாம். மற்றபடி கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெரிய அளவிலான சேமிப்புக்கு வாய்ப்பு ஏற்படாது. சகோதர சகோதரிகளிடமும் கவனமாகப் பேசாவிட்டால் அநாவசிய விரோதங்கள் ஏற்படலாம். மேலும் ஆவணங்களில் கையெழுத்திடும் முன் ஷரத்துக்களை முழுவதும் படித்துப் பார்த்து புரிந்து கொண்டு கையெழுத்திடவும்.
31.5.2013க்குப் பிறகு சனி பகவானுக்கு குரு பகவானின் அருட்பார்வை கிடைக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வம்பு, வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். உடலில் இருந்த நோய்கள் மறைந்து ஆரோக்யம் மேம்படும். பெற்றோரின் உடல் நலனும் சீராகும். இழந்த பெயரும் புகழும் திரும்பக் கிடைக்கும்.
உத்யோகஸ்தர்கள் பயணங்களால் பண வரவைக் காண்பீர்கள். அலுவலகத்தில் இருக்கும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியாவிட்டாலும் தற்காலிக தீர்வைக் காண்பீர்கள். அலுவலகத்தில் வேலைப் பளு சற்று அதிகமாகவே இருக்கும். கடினமாக உழைப்பீர்கள். உங்களிடமிருந்த அவநம்பிக்கை அகலும். பதவி உயர்வு கிடைக்கும். மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப்படும் அளவிற்கு முக்கியஸ்தராக அலுவலகத்தில் வலம் வருவீர்கள்.
வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். அனைத்து விஷயங்களையும் ஒருமுறைக்கு இரு முறை யோசித்துச் செயல்படுத்தவும். மற்றபடி பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய யுக்திகளைப் புகுத்தி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். மேலும் சிறிய முதலீடுகளால் தன பிராப்தியைப் பெறுவீர்கள்.
விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். லாபம் அதிகரிக்கும். விளைபொருட்களை புதிய சந்தைகளில் விற்பனை செய்ய முனைவீர்கள். கால்நடைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகள் பயனளிக்கும். புதிய குத்தகைகளை நாடிச் சென்று பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். ஆனாலும் அவற்றை முழுமையாக அனுபவிக்க முடியாமல் அவ்வப்போது குறுக்கீடுகள் ஏற்படும். மனம் தளராமல் அதை எதிர்த்து வெற்றியடைவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும். கட்சியில் அந்தஸ்தான பொறுப்புகளைப் பெறுவீர்கள்.
கலைத்துறையினர் தாங்கள் ஈடுபட்டுள்ள துறையிலுள்ள நுணுக்கங்களை நன்றாகப் புரிந்து கொள்வீர்கள். அவற்றை உரிய நேரத்தில் உபயோகித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். தாமதம் ஏற்பட்டாலும் புதிய ஒப்பந்தங்களை நன்றாக முடித்துக் கொடுப்பீர்கள். உங்கள் சிந்தனைகள் தெளிவாக இருப்பதால் எத்தகைய கடினமான சூழ்நிலையையும் சரியாக உள்வாங்கிக்கொண்டு செயல்படுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் நன்றாகவே தொடரும்.
பெண்மணிகள் எந்த வாக்குவாதத்திலும் சிக்கிக்கொள்ளாமல் புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வருமானம் சீராக இருக்கும். உற்றார், உறவினர்கள் உங்கள் இல்லத்திற்கு வருவார்கள். குழந்தைகளின் ஆரோக்யத்தில் கவனம் செலுத்தவும்.
மாணவமணிகள் நன்றாக உழைத்துப் படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கல்வி ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். சக மாணவர்களுடன் எச்சரிக்கையுடன் பழகவும்.பரிகாரம்: இந்தக் காலகட்டத்தில் துர்க்கையை வழிபட திட்டமிட்ட செயல்கள் அனைத்தும் வெற்றி வாகை சூடும். --