தனுசு - சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2011


தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம்  முதல் பாதம் முடிய)

 தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சமூகத்தில் உங்களுக்கு இருந்த அவமரியாதை நீங்கி மதிப்பு, மரியாதை உயரும். புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். பண வருவாய் சிறப்பாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் இணைவீர்கள். நெடுநாட்களாகத் தொடர்ந்து வந்த வழக்கு விஷயங்கள் முடிவுக்கு வரும். மன உறுதியுடனும், பொறுமையுடனும் செயல்பட்டு சகோதர, சகோதரிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உங்களின் கடமைகளை சரியாகச் செய்து முடிப்பீர்கள்.
 31.5.2013க்குப் பிறகு சனி பகவானுக்கு குரு பகவானின் பார்வை கிடைக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நீங்கள் சிறு தவறுகள் செய்தாலும் அவற்றால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உங்கள் காரியங்களுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கும். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்து உடல் நலம், மனம் வளம் ஆகியற்றைப் பாதுகாத்துக்கொள்வீர்கள். வெளியூர் அல்லது வெளிநாட்டுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். வாரிசுகள் உண்டாகும். பிரிந்திருந்த உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்ச்சியுடன் வாழும் காலகட்டமாக இது அமைகிறது.
 உத்யோகஸ்தர்கள் கவனமாகப் பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் பிரச்னைகள் ஏற்படாத வண்ணம் கவனமாக நடந்துகொள்வீர்கள். அவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கவும். மற்றபடி சிறப்பான ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள்.
 வியாபாரிகள் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய முதலீடுகள் செய்வதற்கு பழைய சேமிப்புகள் கை கொடுக்கும். போட்டிகள் கடுமையாக இருந்தாலும் அவற்றை சாதுர்யமாகச் சமாளித்து வெற்றிபெறுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெற்று செயல்பட்டால் மேலும் பலன் அடையலாம்.
 விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். பூமியால் லாபம் உண்டாகும். புதிய குத்தகைகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்கள் கிடைக்கும். புழு, பூச்சிகளால் பாதிப்பு ஏற்படாது. நீர்வள ஆதாரங்களைச் சீரமைத்துக் கொள்வீர்கள்.
 அரசியல்வாதிகள் புகழின் ஏணியில் ஏறத் தொடங்குவீர்கள். கட்சி மேலிடத்தின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றி நல்ல பெயர் வாங்குவீர்கள். பண வரவு சரளமாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். புதிய பதவிகள் கிடைக்கும். நண்பர்கள் போல் பழகும் எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். உயர்ந்தவர்களை சந்தித்து வேலைகளை வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள்.
 கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் வந்து சேரும். சக கலைஞர்களே உங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார்கள். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். கோபப்படாமல் காரியங்களைச் செய்யவும்.
 பெண்மணிகள் மகிழ்ச்சியுடன் உலா வருவீர்கள். திருமணமாகாமல் இருந்தவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். தெய்வ பலத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
 மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விரும்பிய பாடப் பிரிவுகள் கிடைக்கும். விளையாட்டில் பரிசுகளைப் பெறுவீர்கள். பெற்றோர் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.
 பரிகாரம்: இந்தக் காலகட்டம் முழுவதும் சிவபெருமானை வழிபட்டு வரவும். தினமும் முடிந்தவரை "நமசிவாய' என்று ஜெபிக்கவும். ஸ்ரீருத்ரத்தை குறுந்தகட்டில் போட்டு கேட்டு வரவும்.  .-