விருச்சிக ராசி வாசகர்களே! உங்களுக்கு லாபஸ்தானத்தில் அமர்ந்திருந்த சனி பகவான் உங்களுக்கு விரயச் சனியாகி அதாவது, அயன, சயன, மோட்ச ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். ஏழரை சனியைத் தொடங்கி முதல் கட்டமாக 15.11.2011 முதல் 15.5.2012 வரை துலாம் ராசியில் குரு பகவானின் பார்வையில் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் சனி பகவான் உங்கள் நண்பர்களின் குணாதிசயங்களை உங்களுக்குப் புரிய வைப்பார். அவர்களுக்கு நீங்கள் உதவி செய்வீர்கள். பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். அநாவசியச் செலவைத் தவிர்க்கவும். செய்தொழிலில் நல்ல முறையில் ஈடுபடுவீர்கள். உங்கள் கடின உழைப்பு வீண் போகாது. புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்து செயல்படுத்துவீர்கள். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். இதன்மூலம் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த இடங்களிலிருந்து கடன்கள் கிடைத்து புதிய வீடு வாங்கும் யோகத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுப காரிய முயற்சிகள் வெற்றி பெறும். கிடைக்காது என்று நினைத்திருந்த சொத்து உங்களுக்குக் கிடைத்து அதன் மூலம் வருமானம் வரத் தொடங்கும்.
16.5.2012 முதல் 80 நாட்கள் அதாவது 3.8.2012 வரை சனி பகவான் வக்கிர கதியில் கன்னி ராசியில் லாபஸ் தானத்தில் குரு பகவானின் பார்வையைப் பெற்று சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் உங்களின் பழைய முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கும்.
எதிர்ப்புகள் இருக்காது. வெளிநாட்டுத் தொடர்பு பலப்படும்.
வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உடல் நலம் சீராக இருக்கும். நண்பர்களுக்கு உதவிசெய்வீர்கள். அவர்களின் உதவிகளைப் பெறுவீர்கள். விருந்து, விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்கான சந்தர்ப்பங்கள் தேடி வரும்.
4.8.2012 முதல் 2.11.2014 வரை மறுபடியும் துலாம் ராசியில் ஏழரை சனியாக சனி பகவான் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் செயல்களில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களின் வருகையால் நன்மைகள் உண்டாகும். என்றாலும் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் வீண் விரோதம் ஏற்படும். இதனால் அவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். சிலருக்கு வெளியூர் சென்று தொழில் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் பூமி வாங்கும் யோகம் உண்டாகும். அதேசமயம் அதில் வீடுகட்டும் முயற்சியைத் தள்ளிப் போடவும். மற்றபடி தற்போது வசிக்கும் வீட்டைவிட வசதியான வீட்டுக்குக் குடி பெயர்வீர்கள்.
31.5.2013க்குப் பிறகு சனி பகவானுக்கு குரு பகவானின் பார்வை கிடைக்கிறது. இந்தக் கால கட்டத்தில் செய்தொழிலில் பிரச்னைகள் குறையும். நிதானமாகப் பணியாற்றுவீர்கள். பதற்றம், அலைச்சல் இல்லாமல் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். நண்பர்களுடன் அனுசரித்துப் போவீர்கள். புதிய பயிற்சிகளைப் பெற்று உங்கள் திறமைகள் பளிச்சிடும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிரிகளை ஒடுக்கும் வல்லமையைப் பெறுவீர்கள். மனதில் உள்ள குழப்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டு உங்கள் காரியங்களில் அக்கறை காட்டுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் எவருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். முன் ஜாமீனும் கொடுக்க வேண்டாம். மற்றபடி சட்ட சிக்கல்கள் ஏதும் ஏற்படாது.
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளில் சிறிய குழப்பங்கள் ஏற்பட்டாலும் சக ஊழியர்களின் உதவியால் வெற்றியுடன் முடித்துவிடுவீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு உதவியாக இருப்பதால் பிரச்னைகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவில் இருக்கும். உழைப்பு வீண் போகாது.
வியாபாரிகள் "கொக்குக்கு ஒன்றே மதி' என்கிற ரீதியில் வியாபாரத்திலேயே குறியாக இருக்கவும். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும் நண்பர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். கடன் கொடுக்காமல் கறாராகப் பேசி வியாபாரத்தை விரிவுபடுத்தவும். பழைய கடன்களை சீரிய முயற்சியின் பேரில் திருப்பிச் செலுத்திவிடுவீர்கள்.
விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் அதிகரிக்கும். புதிய விவசாய உபகரணங்களை வாங்கி விவசாயத்தை நவீன மயமாக்குவீர்கள். கால்நடைகளால் நல்ல பலன்களைக் காண்பீர்கள். நிலத்தில் சலிப்பில்லாமல் உழைத்தால் மேலும் முன்னேற்றம் அடையலாம்.புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம்.
அரசியல்வாதிகளுக்கு உயர் பதவிகள் தேடி வரும். தொண்டர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். உங்களின் எண்ணங்களை செயலாக்குவதில் தடைகள் ஏற்படாது. சிறப்பான அங்கீகாரம் பெற்று அதிர்ஷ்டசாலியாக வலம் வருவீர்கள். உங்களுக்கு எதிராகப் போடப்பட்ட சதிகளிலிருந்து விடுபடுவீர்கள்.
கலைத்துறையினரின் கனவுகளும் திட்டங்களும் நிறைவேறும். புதிய நண்பர்களால் பெருமை அடைவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது துறையில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெறுவீர்கள். ரசிகர்களின் பேராதரவுடன் மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். திறமைகளை நல்ல முறையில் வெளிப்படுத்துவீர்கள்.
பெண்மணிகள் ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். பண வரவு சீராக இருக்கும். கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உண்டாகும். உற்றார், உறவினர்களுடனான ஒற்றுமையைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.
மாணவமணிகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் மாணவராகத் திகழ்வீர்கள். சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மனதில் உற்சாகத்தைப் பெறுவீர்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். பரிகாரம்: ராம பக்த அனுமனை வழிபடவும். "ராம் ராம்' என்று ஜெபித்துக்கொண்டே அனுமனை சுற்றி வரவும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் "ஸ்ரீராமஜெயம்' என்று எழுதி வரவும். .--