உங்களின் ஒன்பதாம் ராசியான பாக்யஸ்தானத்திலிருந்து தொழில் ஸ்தானமான பத்தாம் ராசியில் 15.11.2011 முதல், முதல் கட்டமாக 15.5.2012 வரை துலாம் ராசியில் குரு பகவானின் பார்வையைப் பெற்று சனிபகவான் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் சனி பகவான் உங்களை சுய முயற்சியில் முன்னேற வைப்பார். செய்தொழிலில் போட்டி, பொறாமைகள் இருந்தாலும் அவற்றை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். பணப்புழக்கம் சுமாராக இருந்தாலும் தேவைகளுக்கு ஏற்ற வருமானம் வந்துகொண்டிருக்கும். ஆசைப்பட்டவற்றை எப்படியும் அடைந்துவிடுவீர்கள். தொழில் நிமித்தமாக செய்யும் பயணங்களால் நன்மை அடைவீர்கள். அரசு வழியில் சந்தித்த சில சிரமங்கள் மறையும். எவருக்கும் இந்தக் காலகட்டத்தில் முன் ஜாமீன்போட வேண்டாம்.
16.5.2012 முதல் 80 நாட்கள் அதாவது 3.8.2012 வரை சனி பகவான் வக்கிர கதியில் கன்னி ராசியில் குருபகவானின் பார்வையைப் பெற்று சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் பாக்யஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் பெற்றோரின் ஆதரவை நல்ல முறையில் கிடைக்கச் செய்வார். பொருளாதார வளம் சிறப்பாக அமையும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த பிரச்னைகள் விலகும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்தி அடமானத்தில் இருந்த சொத்துக்களை மீட்டுவிடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தெளிந்த அறிவுடன் காரியமாற்றுவீர்கள். அனைத்துச் செயல்களிலும் நேர்மையாக இருப்பீர்கள். நண்பர்களுக்குத் தேவையான ஆலோசனைகளைக் கூறுவீர்கள். உங்களின் கடின உழைப்பு இந்தக் காலகட்டத்தில் வீண் போகாது.
4.8.2012 முதல் 2.11.2014 வரை மறுபடியும் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் உங்களின் செய்தொழிலில் நல்ல திருப்பங்களை உண்டாக்குவார். கடல் கடந்த நாடுகளுக்கும் உங்களை அழைத்துச் செல்வார். பொதுநலப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். இரக்க சுபாவம் அதிகரிக்கும். இதனால் ஏழை, எளியோருக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். சிலர் புதிய வீடுகளுக்கு மாறுவார்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களை வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பீர்கள். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பெரியோர்களின் ஆலோசனைகள்படி நடக்கவும். சில நேரங்களில் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும் என்பதால் எவரிடமும் வெளிப்படையாகப் பழக வேண்டாம். மற்றபடி எதனாலும் உங்களின் செல்வாக்கு குறையாது.
31.5.2013க்குப் பிறகு குரு பகவானின் கனிந்த பார்வை சனி பகவானுக்குக் கிடைக்கிறது. இந்தக் காலகட்டத்தில் நீதியை நிலைநாட்டப் பாடுபடுவீர்கள். உங்களின் காரியங்களில் பொறுமையுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்வீர்கள். தேவைக்கேற்ப நண்பர்கள் உதவுவார்கள். பணவரவு நன்றாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொண்டு சேமிப்பை அதிகப்படுத்திக்கொள்ளவும். தடைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் சுப காரியங்கள் நல்ல முறையில் நடக்கும். உடன்பிறந்தோர் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். பழைய விரோதிகளும் உங்களுடன் நட்பு பாராட்டி உங்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வார்கள். உங்கள் நீண்ட நாளைய ஆசை நிறைவேறும்.
உத்யோகஸ்தர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். அலைச்சல், திரிச்சல் இல்லாமல் உங்கள் வேலைகளை சரியாக முடித்துவிடுவீர்கள். சக ஊழியர்களுடன் சகஜ நிலையைக் கடைபிடிக்கவும். வீண்பேச்சு வார்த்தைகளால் குழப்பங்கள் வரலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு கிடைத்து சாதனை செய்ய விழைவீர்கள். மேலதிகாரிகளிடம் வெளிப்படையாகப் பழக வேண்டாம்.
வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும், உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டிவரும். வெளியில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிப் பிடித்து அங்கு வியாபாரத்தை விரிவுபடுத்திப் பலன் பெறுவீர்கள். கூட்டாளிகளிடம் உங்கள் ரகசியங்களைப் பற்றி மனம் திறந்து பேச வேண்டாம். செலவுகள் செய்யும் போது விழிப்புடன் இருப்பது அவசியம்.
விவசாயிகள் அரசாங்க உதவிகளைப் பெறுவீர்கள். விளைச்சல் நன்றாக இருக்கும். கொள்முதலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் வசதி, வாய்ப்புகள் தேடி வரும். புதிய குத்தகைகளை எடுப்பீர்கள். புதிய முயற்சிகளில் உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவீர்கள். ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்ட பாசன வசதிகள் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள். கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். மற்றபடி கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். தொண்டர்களின் ஆதரவு உங்களுக்கு சிறப்பாக இருப்பதால் கவலைப்பட ஏதுமில்லை. சமுதாயத்தில் உங்களின் கௌரவமும், புகழும் அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் திரும்பவும் கிடைக்கும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். உங்களின் முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். தொழிலில் நன்றாகச் செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சக கலைஞர்களின் உதவிகள் கிடைப்பது அரிது.
பெண்மணிகள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். நீங்கள் செய்யும் வீண் யோசனைகள் உங்களின் வலிமையைக் குறைக்கும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து சுமுக நிலையை உண்டாக்கவும். வீண் வாக்குவாதங்களிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பெரியோர்களின் ஆசியும், கணவரின் ஆதரவும் இந்தக் காலகட்டம் முழுவதும் கிடைக்கும்.
மாணவமணிகள் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தினால்தான் சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற முடியும். தீய பழக்கங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள். மற்றபடி ஆசிரியர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு வரவும். லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தை குறுந்தகடுகளில் போட்டு காலை, மாலை வேளைகளில் கேட்டு வரவும். -