துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2011


துலாம்
 (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)
 துலாம் ராசி நேயர்களே! உங்களுக்கு ஏழரை நாட்டுச் சனியின் விரய சனி முடிந்து ஜென்ம சனியின் சஞ்சாரம் 15.11.2011 முதல், முதல் கட்டமாக 15.5.2012 வரை உங்கள் ராசியில் குரு பகவானின் பார்வையில் உச்சம் பெற்று நடக்கத் தொடங்குகிறது. இந்தக் காலகட்டத்தில் சனி பகவான் உங்களுக்கு நல்லவர்களின் நட்பை ஏற்படுத்திக் கொடுப்பார். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் உதவிகளைப் பெற்று நலமடைவார்கள். பொருளாதர வளம் உயரும். அரசு அதிகாரிகள் உங்கள் காரியங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எதிலும் சிந்தித்து நல்ல முறையில் செயல்படுவீர்கள். ஆன்மீகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். செய்தொழிலுக்காக பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். அனைத்து விஷயங்களையும் நடைமுறைக்கு ஏற்றவாறு பார்ப்பதால் கஷ்டங்கள் எதையும் சந்திக்க மாட்டீர்கள். உங்களின் நீண்ட கால லட்சியங்கள், கனவுகள் நிறைவேற அடித்தளம் அமைத்துக்கொள்வீர்கள்.
 16.5.2012 முதல் 80 நாட்கள் அதாவது 3.8.2012 வரை சனி பகவான் வக்கிர கதியில் கன்னி ராசியில் விரய சனியாக சஞ்சரித்தாலும் குரு பகவானின் பார்வையைப் பெறுகிறார். இந்தக் காலகட்டத்தில் கடின உழைப்புக்கேற்ற தேவையான ஓய்வெடுத்துக் கொள்வீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். அறிமுகமில்லாதோரின் ஆதரவும் உங்களுக்கு நன்மைகளைத் தேடித் தரும். செய்தொழிலில் அபரிமிதமான லாபம் கொட்டும். உங்கள் செல்வாக்கு உயரும். மற்றபடி வம்பு, வழக்குகளில் அனுகூலமான திருப்பங்களை இந்த வாரம் எதிர்பார்க்க முடியாது.
 4.8.2012 முதல் 2.11.2014 வரை துலாம் ராசியில் சனி பகவான் ஜென்ம சனியாக சஞ்சாரம் செய்கிறார். இந்தக் காலகட்டத்தில் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சிறு இடையூறுகள் ஏற்பட்டு விலகும். சிலர் பழைய கூட்டாளிகளை விட்டு விலகி புதிய கூட்டாளிகளுடன் இணைவார்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.
 ஆனாலும் மனதில் உள்ள குறைகளை மறைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் உலா வருவீர்கள். புத்தியைக் கூர்மையாக்கித் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவீர்கள். அநாவசியமான சட்ட சிக்கல்களிலும் சிக்கிக்கொள்ள நேரிடலாம். எனவே கவனம் தேவை. மேலும் சரியானநேரத்தில் ஆகாரம் உட்கொள்ள முடியாமல் போகும்.
 31.5.2013க்குப் பிறகு சனி பகவானுக்கு குரு பகவானின் அருட்பார்வை கிடைக்கிறது. இந்தக் காலகட்டத்தில் செய்தொழிலில் நன்மை தரும் மாற்றங்கள் உண்டாகும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். அதற்காக சிறிது பராமரிப்பு செலவு செய்ய நேரிடும். மேலும் குழந்தைகளின் உடல் ஆரோக்யத்திற்காகவும் செலவு செய்வீர்கள். மற்றபடி ஏதாவது ஒரு வகையில் சாதனை புரிவீர்கள். உங்களின் விஷயங்களில் அடுத்தவர்களின் தலையீட்டை விரும்ப மாட்டீர்கள். வம்பு, வழக்குகளில் உங்கள் பக்கம் சாதகமாகத் தீர்ப்பாகும். ஆன்மீக பலம் முன்பை விட அதிகரிக்கும். மகான்களையும், மகத்துவம் மிகுந்த புண்ணியத் தலங்களையும் வழிபட்டு மகிழ்ச்சியடைவீர்கள்.
 உத்யோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே குறித்த காலத்திற்குள் முடிவடையும். உங்களின் வேலைகளில் தெளிந்த மன நிலையுடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவு நிலை உண்டாகும். பண வரவு சீராக இருக்கும். அலுவலகத்தில் கடன் பெற்று வீடு, வாகனம் ஆகியவற்றை வாங்குவீர்கள்.
 வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு பலனடைவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடையும். வாடிக்கையாளர்களைக் கவரப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். இதற்குக் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களின் விற்பனைப் பிரதிநிதிகள் பல இடங்களுக்கும் சென்று விற்பனையைப் பெருக்குவார்கள். அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கும் கணக்கு, வழக்குகளை சரியாக வைத்துக்கொள்வீர்கள்.
 விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். இதனால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். நெருங்கியவர்களுக்கு உதவிகளைச் செய்து அவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய கடன்களை வாங்கி விவசாயத்தை விரிவுபடுத்துவீர்கள். அரசு மானியம் கிடைக்கும். கால்நடைகளாலும் லாபம் அதிகரிக்கும்.
 அரசியல்வாதிகளுக்குத் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் எளிதில் வெற்றியடையும். விருந்து,கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவீர்கள். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். தொண்டர்களின் ஆதரவினால் சாதனைகளைச் செய்வீர்கள். இருப்பினும் புதிய பொறுப்புகளை கவனத்துடன் கையாளவும்.
 கலைத்துறையினருக்கு புகழும்,பாராட்டும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். என்றாலும் உங்கள் வேலைகளில் பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். மனதில் இருக்கும் வருத்தங்களையும், தயக்கங்களையும் வெளியில் காட்ட மாட்டீர்கள். ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள். சக கலைஞர்களிடம் கவனமாகப் பழகவும்.
 பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். கணவரைப் புரிந்துகொண்டு நடந்துகொள்வீர்கள். உற்றார், உறவினர்களின் நன்மதிப்புக்குப் பாத்திரமாவீர்கள். குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
 மாணவமணிகள் மற்றவர்களை அதிகம் எதிர்பார்க்காமல் உங்களின் கல்வி சம்பந்தப்பட்ட வேலைகளை நீங்களே செய்து கொள்ள முயலுங்கள். அதை சரியாகச் செய்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறவும். மற்றபடி வெளிவிளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றிக்கொடி நாட்டுவீர்கள்.
 பரிகாரம்: மஹா விஷ்ணு, மஹாலட்சுமியை வழிபடவும். விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தை குறுந்தகட்டில் போட்டு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கேட்டு வாருங்கள்.  --