சிம்மம் சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2011


சிம்மம்
(மகம், பூரம்,உத்திரம் முதல்  பாதம் முடிய)
சிம்ம ராசி நேயர்களே! உங்களுக்கு ஏழரை நாட்டு சனி முடிந்து தைரியஸ்தான ராசியான மூன்றாம் ராசியில் 15.11.2011 முதல், முதல் கட்டமாக 15.5.2012 வரை துலாம் ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் குரு பகவானின் பார்வையில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களின் எதிரிகளையும் உங்கள் வசப்படுத்தும் ஆற்றலைத் தருவார். செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் மறையும். உங்கள் தொழில் நல்ல முறையில் வளர்ச்சி அடையும். வெளியில் கொடுத்திருந்த கடன்கள் வசூலாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சலுகைகள் திடீரென்று உங்களுக்குக் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து உபகரணங்களை இறக்குமதி செய்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உற்றார், உறவினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டிற்குச் சென்று தொழில் செய்யும் வாய்ப்புகளும் உண்டாகும்.
 16.5.2012 முதல் 80 நாட்கள் அதாவது 3.8.2012 வரை சனிபகவான் வக்கிர கதியில் கன்னி ராசியில் குரு பகவானின் பார்வையைப் பெற்று சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் சுய மரியாதையை எந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்காமல் பணியாற்றுவீர்கள். உங்களின் புத்திசாலித்தனத்துடன் ஞாபக சக்தியும் அதிகரிக்கும். நீங்கள் விரோதியாக நினைத்திருந்தவர்கள் மனம் மாறி உங்களுடன் நட்பு கொள்வார்கள். உங்களுக்கு உதவி செய்வார்கள். கடினமான காரியங்களையும் விரல் சொடுக்கும் நேரத்தில் முடித்து விடுவீர்கள். உங்களின் பெயரும், புகழும் உயரும். பழைய வழக்குகளில் எதிராளிகள் சமாதானம் ஆவார்கள். உங்கள் தேக ஆரோக்யமும், குடும்பத்தினரின் தேக ஆரோக்யமும் சீராக இருக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது.
 4.8.2012 முதல் 2.11.2014 வரை துலாம் ராசியில் மறுபடியும் சஞ்சரிக்கும் சனி பகவான் அவ்வப்போது மனதில் தெளிவற்ற நிலையை உண்டாக்குவார். சிறிய விஷயங்களுக்கும் சட்டென்று கோபப்படுவீர்கள். உங்கள் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடிக்க சிரமப்படுவீர்கள். எனவே இந்தக் காலகட்டத்தில் சரியாகத் திட்டமிட்டு செயலாற்றவும். மேலும் பிறரிடம் பேசும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றபடி நண்பர்கள் உங்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள். உற்சாகமான மனநிலையுடன் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். உற்றார், உறவினர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள்.
 31.5.2013க்குப் பிறகு சனி பகவானுக்கு குரு பகவானின் அருட் பார்வை கிடைக்கிறது. இந்தக் காலகட்டத்தில் உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். தாமதமான கட்டுமானப் பணிகளை மீண்டும் துவக்கி நல்லபடியாக முடித்துவிடுவீர்கள். குடும்பத்தில் நிலவும் பூர்வீகச் சொத்து விஷயங்களில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியான பாகப் பிரிவினை ஏற்படும். பண வருவாய் இரட்டிப்பாகும்.
 இதனால் புதிய சேமிப்புத் திட்டங்களில் ஈடுபடுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் ஏற்றமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைந்துவிடும்.
 உத்யோகஸ்தர்களுக்கு கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இடமாற்றங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். சம்பள உயர்வால் சந்தோஷம் அடைவீர்கள். அலுவலகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் வெற்றியடையும். சக ஊழியர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். அவர்களுடன் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளுக்கும், நல்லெண்ணங்களுக்கும் ஆளாவீர்கள். அலுவலகரீதியான பயணங்களால் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும்.
 வியாபாரிகள் போட்டி, பொறாமைகள் குறைந்து சுமுக நிலையைக் காண்பீர்கள். என்றாலும் கவனத்துடன் இருந்து வியாபாரத்தை விரிவுபடுத்தவும். கொடுக்கல், வாங்கலில் சிறு சிரமங்கள் உண்டாகலாம். எனவே வரவு, செலவுகளில் கவனமாக இருக்கவும். சில சமயங்களில் நண்பர்களிடமும், கூட்டாளிகளிடமும் மனக் கசப்புகள் ஏற்படலாம். ஆகவே புதிய முயற்சிகளில் எச்சரிக்கை தேவை.
 விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது. மேலும் அனைத்து விவசாயப் பணிகளும் தடையுடனே வெற்றி பெறும். மற்றபடி காய்கறிகளாலும், பால் வியாபாரத்தாலும் லாபத்தைக் காணலாம். கால்நடைகளின் பராமரிப்புச் செலவு குறையும். குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். புதிய அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள். வயல், வரப்பு பிரச்னைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
 அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். அதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். உங்களின் வேலைகளை சிரமமின்றி முடித்துவிடுவீர்கள். தொண்டர்களின் ஆதரவும் கட்சி மேலிடத்தின் அரவணைப்பும் இருப்பதால் உங்களின் எண்ணங்கள் ஈடேறி புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வீண் பேச்சுகளிலும் வாக்குவாதங்களிலும் ஈடுபட வேண்டாம்.
 கலைத்துறையினருக்கு பழைய ஒப்பந்தங்களை முடித்துக்கொடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் சரியாக முடித்துக்கொடுத்து விடுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்களின் திறமைகள் வெளி உலகுக்கு வெளிப்படும். ரசிகர்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ள சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். மனதில் இனம்புரியாத சஞ்சலம் சூழும். எனவே இறை வழிபாட்டைத் தொடருங்கள்.
 பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உங்களின் பக்குவமான பேச்சினால் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். குடும்பத்திலும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
 மாணவமணிகளுக்கு படிப்பில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் வெற்றி பெறுவீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு உங்கள் பாடங்களை உடனுக்குடன் முடித்து மதிப்பெண்களை அள்ளுங்கள். உடற்பயிற்சிகளையும், யோகா போன்றவற்றையும் மேற்கொள்ளுங்கள்.
 பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்டு வரவும். --