உங்களுக்கு ஏழாம் வீடான சப்தம ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான் 15.11.2011 முதல், முதல் கட்டமாக 15.5.2012 வரை அஷ்டம ஸ்தானமான எட்டாம் ராசியில் உச்சம் பெற்று குரு பகவானின் பார்வையில் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இன்பகரமான சூழ்நிலை நிலவும். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் புதிய ஆடை, அணிமணிகளை வாங்குவீர்கள். உற்றார், உறவினர்களுக்காக உங்கள் கொள்கையை சற்று தளர்த்திக்கொள்ள நேரிடும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் பெயரும், கௌரவமும் அதிகரிக்கும். தர்ம காரியங்களுக்கும், ஆலயத் திருப்பணிகளுக்கும் செலவு செய்து மகிழ்வீர்கள். செய்தொழிலில் உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். எவருக்கும் முன் ஜாமீன் போட வேண்டாம். உங்கள் பெயரில் கடன் வாங்கியும் கொடுக்கக் கூடாது.
16.5.2012 முதல் 80 நாட்கள் அதாவது 3.8.2012 வரை சனி பகவான் வக்கிரமடைந்து கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் சனி பகவான், சமூகத்தில் உயர்ந்த நிலையை எப்படியாவது எட்டிவிட வேண்டும் என்கிற குறிக்கோளுடன் உங்களை உழைக்க வைப்பார். கை நழுவிப் போன வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எதிர்பாராத வகையில் நீங்கள் வளர்ச்சியைக் காண்பீர்கள். உங்களின் பெயரும், புகழும் உயரும். பண வரவு சீராக இருக்கும். கடன் வாங்கும் நிலைமை உண்டாகாது. நண்பர்களின் ஆலோசனை உங்களுக்கு நல்ல பலனைத் தரும். உங்களின் அனைத்துச் செயல்களிலும் தனி முத்திரை பதிப்பீர்கள்.
4.8.2012 முதல் 2.11.2014 வரை சனி பகவான் மறுபடியும் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் உங்களுக்குப் போட்டிகளைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உங்கள் வேலைகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உங்களின் உடல் உழைப்பு இரட்டிப்புப் பலன் தரும். குடும்பத்தில் சுப காரியங்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும். பெற்றோரால் நன்மைகள் உண்டாகும். உடன் பிறந்தோரிடமும், நண்பர்களிடமும் அன்பு மேலோங்கும். அனைத்துப் பிரச்னைகளையும் பக்குவமாக சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்யம் மேம்பட நல்ல உணவை உட்கொள்வீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
31.5.2013க்குப் பிறகு குரு பகவானின் பார்வையில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் சுய மரியாதையை விட்டுக்கொடுக்காமல் வைராக்யத்துடன் பணியாற்றுவீர்கள். செய்தொழிலில் நிலவிய சங்கடங்கள் மறையும். பழைய கடன்கள் வசூலாகும். எதிர்ப்பாளர்கள் மறைந்து போவார்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து பாராட்டு கிடைக்கும். உங்கள் பேச்சில் வசீகரம் தென்படும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. மற்றபடி தற்பெருமை பேசுவதைத் தவிர்க்கவும். உங்களின் கனவு நனவாக அடித்தளம் அமையும்.
உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் நிலவும் இறுக்கமான சூழ்நிலைகளில் சிக்கித் தவித்தாலும் உங்களின் அசாத்திய துணிச்சல் வேலைகளில் வெற்றியைத் தேடித் தரும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்களும் உண்டாகலாம். பயணங்கள் உங்களுக்கு மன நிம்மதியைத் தரும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு சச்சரவுகள் இல்லாமல் பணியாற்றி உங்கள் அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ளவும்.
வியாபாரிகள் தீட்டிய திட்டங்கள் செயல்வடிவம் பெறுவதில் தாமதம் ஏற்படும். கூட்டாளிகளுடன் குழப்பான சூழ்நிலை உருவாகலாம். அதனால் அவர்களைக் கலந்தாலோசிக்காமல் எந்தச் செயலையும் செய்ய வேண்டாம். வியாபாரத்தைப் பெருக்க புதிய கடன்களை வாங்குவீர்கள். கடன்களைக் குறித்த காலத்திற்குள் திருப்பிச் செலுத்திவிடுவீர்கள். சிலருக்கு வழக்குகளுக்காக செலவு செய்ய நேரிடும்.
விவசாயிகள் விளைச்சல் நன்றாக இருப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய கழனிகளை வாங்கி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். தரமான விதைகளைப் பயிரிடுவீர்கள். சிலர் குறுகிய காலப் பயிர்களை உற்பத்தி செய்து இரட்டிப்பு லாபத்தை அடைவீர்கள். பழைய கடன்கள் தீர்ந்து நிம்மதியாக மூச்சுவிடுவீர்கள். சந்தைகளில் தரத்துக்கேற்ப பொருட்களின் விலையை நிர்ணயித்து லாபமடைவீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் தைரியமும், செயல்திறனும் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். வழக்கு விவகாரங்கள் சாதகமான திருப்பங்களை சந்திக்கும். சமூகத்தில் உங்கள் செயல்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும். பெயரும், புகழும் உயரும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் சற்று தாமதம் உண்டாகும். மேலும் பழைய ஒப்பந்தங்களும் இழுபறியில் இருக்கும். ஆனாலும் ரசிகர்களின் ஆதரவு உங்களுக்கு அமோகமாக இருக்கும். அதோடு உங்கள் முயற்சியை மற்றவர்கள் பாராட்டுவார்கள். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
பெண்மணிகள் இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். கணவரிடம் ஒற்றுமையாக இருப்பீர்கள். சரளமான பணவரவால் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகளுடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள்.
மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள். அதிக மதிப்பெண்களைப் பெற போதிய பயிற்சிகளை மேற்கொள்ளவும். விளையாட்டினால் உடல் ஆரோக்யத்தை வளர்த்துக்கொள்வீர்கள். பரிகாரம்: சனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும். -