கன்னி ராசி - சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2011


கன்னி
(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

கன்னி ராசி நேயர்களே! உங்களுக்கு ஏழரை நாட்டு சனி பகவான் தன் கடைசி இரண்டரை ஆண்டு சஞ்சாரமாக 15.11.2011 முதல், முதல் கட்டமாக 15.5.2012 வரை துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் குரு பகவானின் பார்வையில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களை மதியூகி என்ற நிலைக்கு உயர்த்திவிடுவார். அநாவசியமான விஷயங்களைக் கண்டும் காணாமல் இருப்பீர்கள். செய்தொழிலில் அமைதியாக செயல்பட்டு உங்கள் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். நல்லது, கெட்டது இரண்டையும் பகுத்தறிந்து தீயவற்றை ஆரம்பத்திலேயே அகற்றுவீர்கள். உங்களின் திறமையை தங்களின் நலத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளும் சுயநலவாதிகளையும் ஒதுக்கிவிடுவீர்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் எதிரிகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்து உங்களுக்கு எதிராக செயல்படாதவாறு பார்த்துக்கொள்வீர்கள். செய்தொழிலில் உங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகிவிடுவார்கள்.
16.5.2012 முதல் 80 நாட்கள் அதாவது 3.8.2012 வரை சனி பகவான் வக்கிர கதியில் கன்னி ராசியில் அதாவது ஏழரை சனியின் ஜென்ம சனியாக சஞ்சரித்தாலும் குரு பகவானின் பார்வையை ரிஷப ராசியிலிருந்து பெறுகிறார். இந்தக் காலகட்டத்தில் உடல் ஆரோக்யம் பலப்படும். தொழில் விஷயத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். குழந்தைகள் படிப்பில் சாதனைகளைச் செய்வார்கள். பங்கு வர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலமும் லாபம் கிடைக்கும். மற்றபடி நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பிறர் விஷயங்களிலும் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். சிலருக்கு வீடு மாற வேண்டிய அவசியம் ஏற்படும். செய்தொழிலில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்குத் தக்கபடி உங்களை மாற்றிக்கொள்ளவும்.
4.8.2012 முதல் 2.11.2014 வரை துலாம் ராசியில் மறுபடியும் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களின் விவேகத்தைக் கூட்டுவார். நீங்கள் உயர்வதற்கான உபாயங்களைத் தேடிக் கண்டுபிடிப்பீர்கள். ஏடாகூடமாக எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். அரிய வாய்ப்புகள் கைவிட்டுப் போய் விடாமல் பார்த்துக்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
தகுதியான நபர்களிடம் உங்கள் வேலைகளை ஒப்படைத்துவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொள்வீர்கள்.
31.5.2013க்குப் பிறகு சனி பகவானுக்கு குரு பகவானின் அருட்பார்வை கிடைக்கிறது. இந்தக் காலகட்டம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளைக் கொண்டு வந்து சேர்க்கும். தகுந்த முன்னெச்சரிக்கையுடன் காரியமாற்றுவீர்கள். எவரையும் பகைத்துக்கொள்ளாமல் நட்புடன் பழகுவீர்கள். அசாதாரண சூழ்நிலைகளையும் உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்வீர்கள். உங்களை நம்பி உதவி கேட்டு வந்தவர்களுக்கு அவர்களின் எதிர்பார்ப்புக்கும் மேல் நன்மைகளைச் செய்வீர்கள். மிகுந்த செல்வாக்குடன் உலா வருவீர்கள்.
உத்யோகஸ்தர்கள் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். மற்றபடி உங்களின் திறமைக்குக் குறைவு ஏற்படாது. பண வரவு சிறப்பாக இருப்பதால் உங்கள் வேலை உண்டு நீங்கள் உண்டு என்கிற நிலையில் இருப்பீர்கள். அலுவலக ரீதியான பயணங்களாலும் நன்மைகள் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய முதலீடுகளில் தொழிலை விரிவுபடுத்த நினைக்க வேண்டாம். இருப்பதை நேர்த்தியாகச் செய்து கொண்டிருப்பதே நலமாகும். வீம்புக்கு செலவு செய்து புதிய கடன்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். மற்றபடி கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு நிலைமையை உங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்வீர்கள்.
விவசாயிகளுக்கு வருமானம் குறைந்தாலும் செலவுகள் கூடினாலும் தைரியத்திற்கு குறைவு வராது. உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய குத்தகை முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் செயல்கள் அனைத்தும் படிப்படியாக பலன்களைக் கொடுக்கும். விளை பொருட்களை உடனுக்குடன் சந்தைகளுக்கு எடுத்துச் சென்று நல்ல முறையில் விற்பனை செய்வீர்கள். கால்நடைகளை நன்கு பராமரிப்பீர்கள். மற்றபடி விவசாயத் தொழிலாளர்களை அரவணைத்துச் செல்லவும்.
அரசியல்வாதிகளுக்குத் திட்டமிட்ட வேலைகளில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் அனைத்தும் வெற்றி பெறும். உங்களின் பொதுச் சேவையை அனைவரும் பாராட்டுவார்கள். நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். சிறு அலைச்சல்கள் ஏற்படும். தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அவர்களின் ஆதரவினால் உங்களின் அணுகுமுறையில் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறத் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனம் சோர்வடையாமல் உங்கள் கடமைகளைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள். புகழைத் தக்க வைத்துக்கொள்வதற்கான சீரிய முயற்சிகளை செய்வீர்கள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். இது எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமையும்.
பெண்மணிகளுக்கு பண வரவு அதிகரிக்கும். உங்களின் கோரிக்கைகளை குடும்பத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீகச் சுற்றுலா சென்று வருவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் நன்மை அடைவீர்கள்.
மாணவமணிகளுக்கு மகிழ்ச்சி நீடிக்கும். பெற்றோரால் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். என்றாலும் கடினமாக உழைத்துப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும்.

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபட்டு வரவும். முடிந்தால் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யவும்.
--