கடக ராசி வாசகர்களே! உங்களின் மூன்றாம் ராசியில் சஞ்சரித்த சனி பகவான் சுகஸ்தான ராசியான நான்காம் ராசியில் 15.11.2011 முதல், முதல் கட்டமாக 15.5.2012 வரை துலாம் ராசியில் குரு பகவானின் பார்வையில் சஞ்சரிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் செய்தொழில் லாபகரமாகவே இருக்கும். புதிய மாறுதல்களைச் செய்து முன்னுக்கு வருவீர்கள். இழந்த அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். மனதில் இருந்த விபரீத எண்ணங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு நேர்வழியில் சிந்திப்பீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். கவர்ச்சியாகப் பேசி உங்களின் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். விடாமுயற்சியால் கடினமான வேலைகளையும் சுலபமாக முடித்துவீர்கள். எதிர்காலத்திற்காக புதிய சேமிப்புத் திட்டங்களில் இணைவீர்கள்.
16.5.2012 முதல் 80 நாட்கள் அதாவது 3.8.2012 வரை சனி பகவான் வக்கிர கதியில் கன்னி ராசியில் குரு பகவானின் கனிவான பார்வையில் சஞ்சரிக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில் உங்கள் வழியில் தனிக்காட்டு ராஜாவாக பயணத்தை மேற்கொள்வீர்கள். உங்களின் எதிரிகள் மறைந்து போவார்கள். புதுப்பாதையில் புது வேகத்தில் உங்கள் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். நண்பர்களைப் பற்றிய சந்தேகங்கள் மறைந்து அவர்களை நன்றாகப் புரிந்துகொள்வீர்கள். தெய்வ பலத்தை அதிகரித்துக்கொள்ள ஆலய வழிபாட்டினை மேற்கொள்வீர்கள். இளைய சகோதர, சகோதரிகளின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும்.
4.8.2012 முதல் 2.11.2014 வரை துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்களின் செய்தொழிலில் தேவையில்லாத மாற்றங்களை ஏற்படுத்துவார். இதனால் மனதில் சிறு சஞ்சலத்திற்கு ஆளாவீர்கள். புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பீர்கள். மேலும் சுயமாக முடிவுகளை எடுக்க வேண்டாம். மனதில் காரணமில்லாத ஓர் அச்சம் குடிகொண்டிருக்கும். உடல் ஆரோக்யத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். மற்றபடி குடும்பத்தில் அமைதி நிறையும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.
31.5.2013க்குப் பிறகு சனி பகவானுக்கு குரு பகவானின் அருட்பார்வை கிடைக்கிறது. இந்தக் காலகட்டத்தில் தீயவர்களைக் கண்டறிந்து விலக்கிவிடுவீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். பண வசதி அதிகரிக்கும். இல்லத்திற்குத் தேவையான உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். அசையும், அசையாச் சொத்துக்களைக் குறைந்த விலைக்கு வாங்குவீர்கள். உடல் நலம் சீராகும். விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொள்வீர்கள். கோர்ட் விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களிலிருந்து தொடர்ந்து வருமானத்தைப் பெறுவீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு எதிர்ப்புகள் குறையும். மேலதிகாரிகளிடமும், சக ஊழியர்களிடமும் இணக்கமான சூழ்நிலை உருவாகும. சிலருக்கு அலுவலக வேலைகளில் எதிர்பார்த்த சாதகமான திடீர் திருப்பம் உண்டாகும். இதனால் வளர்ச்சியைக் காண்பீர்கள். மேலதிகாரிகளிடம் வீண் வாக்கு
வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சக ஊழியர்
களால் நன்மை உண்டாகும். பண வரவிற்கு ஏதும் தடை ஏற்படாது. அவசியம் ஏற்பட்டாலொழிய அலுவலகரீதியான பயணங்களைத் தவிர்க்கவும்.
வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் இந்தக் காலகட்டத்தில் சில முடிவுகளை தனித்தே எடுக்கவும். மற்றபடி எதிர்பார்த்த வங்கிக்கடன்கள் கிடைத்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வராது என்று நினைத்திருந்த பணம் உங்கள் கை வந்து சேரும். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்க நினைப்பீர்கள். உங்கள் பேச்சினால் எவருடனும் விரோதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
விவசாயிகளுக்கு வருமானம் சீராக இருக்கும். புதிய குத்தகைகள் தேடாமலேயே கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். புதிய பயிர் உற்பத்தியில் இறங்குவீர்கள். பூச்சிக்கொல்லிகளை சரியான நேரத்தில் பயன்படுத்தி உற்பத்தியில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்யும் விவசாயக் கூலிகளைக் கடிந்து கொள்ள வேண்டாம்.
அரசியல்வாதிகளுக்கு பெயரும், புகழும் உயரும். செயல்களில் வெற்றி காண்பீர்கள். கவனத்துடன் செயல்பட்டு கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் காரியங்களைச் செய்வீர்கள். கட்சி மேலிடத்தின் உத்தரவிற்குப் பிறகே மக்களின் முக்கியப் பிரச்னைகளில் கருத்தைத் தெரிவிக்கவும். மற்றபடி தொண்டர்களின் ஆதரவு உங்களுக்கு நல்ல முறையிலேயே இருக்கும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனாலும் எதிர்பார்த்த பெயரும், புகழும் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பொறுமையுடனும், கவனத்துடனும் உங்கள் வேலைகளைச் செய்வீர்கள். வருமானத்திற்குக் குறைவு ஏற்படாது. சிலருக்கு விருதுகள் கிடைக்கும். சக கலைஞர்களுக்குத் தேவையான நேரத்தில் உதவி செய்வீர்கள்.
பெண்மணிகளுக்கு பண வரவு நன்றாக இருக்கும். மற்றவர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தர்மகாரியங்களிலும் ஈடுபடுவீர்கள். பழைய கசப்புகளை மறந்து உறவினர்களுடன் இன்பமாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.
மாணவமணிகள் சிறு சிறு குழப்பங்களைச் சந்திப்பீர்கள். நண்பர்களுடன் வம்பு, சண்டைகளில் ஈடுபட வேண்டாம். படிப்பில் முழு அக்கறை காட்டினால்தான் சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற முடியும். பரிகாரம்: ஸ்ரீ ராமரை வழிபடவும். .--