மட்டக்களப்பு நகரப் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மாநகர சபை ஊழியர் மூவர் கைது

(மா.சசி)
மட்டக்களப்பு நகரப் பகுதியில் வீடுகளை உடைத்துக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மட்டக்களப்பு மாநகர சபை காவலாளிகள் மூவரை மட்டக்களப்பு  பொலிஸார் கைது செய்ததுடன் கொள்ளையிட்ட 4 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களையும் மீட்டுள்ளனர்.

 அண்மைக் காலமாக மட்டக்களப்பு நகரப் பகுதியில் வீடுகளை உடைத்தும் கடைகளை உடைத்தும் கொள்ளைகள்  இடம்பெற்றதுடன் வீதிகளினால் செல்லும் பெண்களின் கழுத்தில் கிடக்கும் தங்கச் சங்கிலிகளை அறுத்துச் செல்லும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது.
இந் நிலையில் கடந்த 13 ஆம் திகதி இரவு திருப்பெருந்துறையில் அமைந்துள்ள சமூக அபிவிருத்தி நிறுவனம் உடைக்கப்பட்டு கணனி மற்றும் நிணல் பிரதி இயந்திரம்,பிறின்ரர் என்பன கொள்ளையிடப்பட்டதாக 14 ஆம் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதே வேளை கடந்த 24 ஆம் திகதி இரவு மட்டக்களப்பு மாநகரின் மத்தியில் உள்ள முனை வீதியில் உள்ள வீடு அட்கள் இல்லாத வேளை உடைக்கப்பட்டு மடிக் கணனி,கமரா,நகை என்பன கொள்ளையிடப்பட்டதாகவும் 25 ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏ.ரவிந்திர வைத்தியலங்கார,சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.ஏ.அஜந்த சமரக்கோண்,உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்தின ஆகியோரின் வழிகாட்டலில் மட்டக்களப்புப் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் புலன் விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி ரி.சாந்தகுமார் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட தீவிர விசாரணையினை அடுத்தே சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு மாநகர சபையில் காவலாளிகளாகக் கடமை புரியும் மூவர் 29 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டபோது சந்தேக நபர்கள் கொள்ளைச் சம்பவங்களை ஒப்புக்கொண்டதுடன் கொள்ளையிட்ட பொருட்களை விற்பனை செய்த இடங்களையும் பொலிஸாரிடம் தெரிவித்ததனை அடுத்து குறித்த பொருட்களை சின்ன ஊறணி,சுவிஸ் கிராமம்,தளவாய் போன்ற இடங்களில் இருந்'து பணத்திற்கு கொள்வனவு செய்தவர்களிடம் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.










இதெ வேளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மட்டக்களப்பு நகரில் பெண் ஒருவரின் தங்க மாலை பறிக்கப்பட்டது தொடர்பாக மட்டக்களப்புப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையினைத் தொடர்ந்து 24 ஆம் திகதி ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது இவரிடமிருந்து மூன்று கொள்ளைச் சம்பவங்களில் கொள்ளையிடப்பட்ட மூன்று மாலைகள் ஏறாவூரில் உள்ள நகைக் கடையில் விற்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும் குறித்த சந்தேக நபரை 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமடாறும் இன்று முதலாம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான உத்தரவிட்டதுடன் இன்று அடையாள அணிவகுப்பு நடைபெற்று அடையாளம் காட்டப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.