மண்முனைக் கண்ணகி தொடர்பில் எழும் ஆய்வுச் சிக்கல்கள் - ஆரயம்பதி கண்ணகி வழிபாடும், தாளங்குடா கண்ணகி வழிபாடும்

 -கவிக்கோ வெல்லவூர்க் கோபால்-
நம்பிக்கை என்பது விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையாக அமையாது போனாலும் அது உண்மையிலும் வலுவானது என்பதனை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ளவே செய்வர். கண்ணகி வழிபாடும் முழுக்க முழுக்க
நம்பிக்கையின்பால் கட்டியெழுப்பப்பட்டதே என்பதனை வரலாறு தொடர்ந்தும் பதிவுசெய்தே வந்துள்ளது. சிலப்பதிகார காவியத்தை எழுதிய இளங்கோவடிகளும் “அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவதும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றலும் ஊழ்வினை உருட்டுவந்து ஊட்டுமென்பதுவும் சூழ்வினைச் சிலம்பு காரணமாக” என அக்காவியம் படைக்கப்பட்டதைக்  கூறுவதும் நம்பிக்கையின் அடையாளமே.


                   தாளங்குடாக் கண்ணகி

இங்கே நாம் கருத்தில் கொள்வது மண்முனைக் கண்ணகி பற்றிய தேடலாகும். 10.05.2016ல் Battinews ல் என்னால் எழுதப்பட்ட கட்டுரை ஒரு தற்செயல் நிகழ்வின் அடையாளமே. கடந்த 09.05.2016ல் நிகழ்ந்த தாளங்குடா கண்ணகி ஆலயத்தின் குடமுழுக்கு வைபவத்திற்கு அங்குள்ள பெரியவர்கள் சிலரது வேண்டுகோளினை ஏற்று சென்றிருந்தேன். அவ்வாலயத்தினுடைய கட்டிட அமைப்பில்இ அதன் மூலஸ்தானத்து அமைவு என்னைப் பெரிதும் கவர்ந்தது. மேலும் அங்குள்ள தெய்வீகக் களைபொருந்திய அழகிய சிறிய கண்ணகி விக்கிரகம் - சுமார் எட்டடி தூரத்திலிருந்து அவதானித்தபோது என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. அதன்பின் அதன் வரலாறு தொடர்பில் தகவல்களைச் சேகரிக்க முற்பட்டடேன். மண்முனையில் முதன்முதலில் கண்ணகிக்கு கோவிலெடுத்த தன்மையில் அது மண்முனைக் கண்ணகியாக நிலைநிறுத்தப்பட்டதையும் கூடவே அங்கு பாடப்படுகின்ற காவியம் மற்றும் உடுக்குச் சிந்து என்பவற்றின்மூலம் அங்கு அருள்பாலிக்கும் கண்ணகியே மண்முனைக் கண்ணகி எனவும் அவர்களால் வெளிப்படுத்தப்பட்டது. அத்தோடு அக்கண்ணகி தொடர்பில் அவர்களால் சொல்லப்பட்ட வாய்மொழித் தகவல்களிலே தொடக்கத்தே அழகிய பேழையுடன் கூடிய கண்ணகி விக்கிரகம் அங்குள்ள வீரையடி நிழலில் ஒரு மூதாட்டியால் சிறாம்பி அமைத்து வழிபாடு செய்யப்பட்தாகவும் பின் அங்கிருந்த பேழை களவாடப்பட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் அங்கிருந்த ஒரு முக்கியஸ்தரை வினவியபோது மூதாட்டி தனது வறுமையின் நிமித்தம் ஒரு செல்வந்தருக்கு விற்றுவிட்டதாக தனது முன்னோர்கள் வாயிலாக அறியப்படடதாக பின்னர் கூறப்பட்டது. அந்தப் பேழை தற்போது எங்குள்ளது என்ற வினாவுக்கு அவர்கள் தங்களுக்கு தெரியவில்லை என்றே கூறினர். இதனடிப்படையிலேதான் தாளங்குடாக் கண்ணகியே மண்முனைக் கண்ணகியாக நிலைநிறுத்தப்பட சில சான்றுகள் தென்படுவதை நம்மால் உணரமுடிந்தது. இதனது காலக்கணிப்பில் ஏற்பட்ட சந்தேகம் இதனை முடிந்த முடிவாக கொள்வதற்கு போதிய காரணங்கள் இல்லாமையால் மேலும் வலுவான ஆய்வுக்கு உட்படுத்தும் அவசியமும் உணரப்பட்டது.  
 

              ஆரயம்பதிக் கண்ணகி

இக்கட்டுரை வெளியானபோது சில காத்திரமான வேண்டுகோள்கள் நம்மிடம் முன்வைக்கப்பட்டன. அதன்பின்னரே இதுவரை நாம் தாளங்குடாக் கண்ணகியாகவும் ஆரையம்பதிக் கண்ணகியாகவும் பார்த்த ஒரே கண்ணகித் தெய்வம் மண்முனைக் கண்ணகியாக நிலை நிறுத்தப்படவேண்டிய உரிமைப் பிரச்சினைகளுக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்படும் தன்மை உணரப்பட்டது. ஒருபுறத்தில் கவலையைத் தருவதாகவும் இது அமைகின்றது. இதே போன்ற தன்மையினை எருவில் கண்ணகி வழிபாட்டிலும் களுவாஞ்சிக்குடி கண்ணகி வழிபாட்டிலும் நம்மால் அவதானிக்க முடிந்தாலும் அது கருத்து மோதல்களை வெளிப்படுத்தவில்லை. அங்கு ஒருசாரார் பேழையினையும் மறுசாரார் விக்கிரகத்தையும் வழிபடவேசெய்கின்றனர். ஆரயம்பதிக் கண்ணகியம்மன் தொடர்பான தகவல்களில் இங்கு வழிபாட்டிலிருக்கும் பேழையானது தாளங்குடாவிலிருந்தே பெறப்பட்டது எனும் தகவலானது ஏற்றுக்கொள்ளப்படும் தன்மையில் இரு சாராரது வழிபாடும் ஒரேயடியில் நிலைகொள்வதைக் காரணப்படுத்தி வரலாற்றில் இரு ஆலயங்களையும் மண்முனைக் கண்ணகியாகப் பதிவுசெய்ய ஏதுவாக அமையும்.  மாறாக தாளங்குடாவில் அக்காலகட்டத்தே பேழைமாத்திரமே இருந்ததாகவும் அதுவே ஆரயம்பதிக்கு இடம்மாறியதாகவும் கொள்ளப்படுமாயின் மேலும் ஒரு வலுவான தேடலை நோக்கி ஆய்வாளர்கள் பயணிக்கவேண்டியிருக்கும். அத்தோடு தாளங்குடா கண்ணகி தொடர்பில் நாம் முன்வைத்த கருத்துக்களும் மீள்பரிசீலனைக்கு உட்படவேசெய்யும்.

எதுஎவ்வாறு அமையினும் மண்முனைக் கண்ணகி சார்ந்த உரிமைப் பிரச்சினையானது ஆய்வுத்துறையில் பாரிய மாற்றங்களுக்கு உரியதாக அமையாது என்பதனை நாம் கருத்தில்கொண்டால் இருசாராரும் இணைந்து இதில் சுமுகமான முடிவினை எட்ட வாய்ப்பாக அமையும். அத்தோடு ஆரயம்பதி கல்விமான்களாலும் ஆர்வலர்களாலும் மண்முனைக் கண்ணகி தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் மஞ்சந்தொடுவாய் கண்ணகி வழிபாடு தொடர்பில் தற்போது எம்மால் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் மிகுந்த நம்பிக்கை ஊட்டுவன என்பதால் ஒரு சிறப்பான நீண்டகால வரலாற்றை ஆரயம்பதிக் கண்ணகி தன்னுள் நிலைநிறுத்தவே செய்வாள். இது தொடர்பான மீளாய்வுக் கட்டுரையினை விரைவில் எதிர்பார்க்கமுடியும்.