சிறப்பாக இடம்பெற்ற சித்தாண்டி அறக்கட்டளை அமைப்பின் வருடாந்த பரிசளிப்பு விழா

(ஜெ.ஜெய்ஷிகன்)
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளை அமைப்பின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்றைய தினம் அமைப்பின் தலைவர் முரளிதரன் தலைமையில் வரலாற்று புகழ் பெற்ற சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தின் முன்றலில் இடம்பெற்றது.
சிகண்டி அறக்கட்டளையின் முழுப் பங்களிப்பு மற்றும் பல்வேறு வகையில் பங்களிப்புக்களை செய்கின்ற நன்கொடையாளர்களின் நிதியுதவிகளை வைத்து வருடா வருடம் சித்தாண்டி -01 தொடக்கம் சித்தாண்டி-04, ஈரளக்குளம், மாவடிவேம்பு போன்ற பகுதிகளிலுள்ள பாடசாலைகளை மையப்படுத்தியதாக தரம் 5 புலமைப் பரீசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்குமேல் சித்தபெற்ற மாணவர்கள், பாடசாலை மட்டங்களில் விளையாட்டு, விவசாய விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம், கலை, கலாசாரம் போன்றவற்றில் மாகாணம், தேசியம் அத்துடன் முதன்மை, சிறப்பு நிலைகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளை செய்துவருகின்ற நிலையில் இவ்வருடத்திற்கான பரிசளிப்பு விழாவினை மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.
இவ்வேளை, இம்முறை சித்தாண்டி கிராமத்தை அண்டிய பாhடசாலைகளில் இருந்து 15 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்குமேல் சித்திபெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர், அத்துடன் விவசாய விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் போன்ற போட்டியூடாக தேசிய மட்டம் வரைச் சென்ற மூன்று மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கும்மி, காவடி, சிறுவர் விளையாட்டுக்களில் தேசிய மட்டம், மாகாண மட்டம் சென்ற 24க்கு மேற்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் கலைஞர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள், அதிபர்கள் என பலர் இதன்போது கௌரவம் பெற்றனர்.
இந்நிகழ்வுக்கு சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தின் நித்திய பூசகர்கள் உட்பட செங்கலடி பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம், கல்குடா கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, செங்கலடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எஸ்.டினேஸ், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், கௌரவம் பெறுவதற்காக வருகைதந்த மாணவர்கள், பெற்றோர்கள், சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளையின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.


இதன்போது கருத்து தெரிவித்த வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி,
சித்தாண்டியைப் பொறுத்தவரையில் சிகண்டி அறக்கட்டளை அமைப்பினர் பிரதேசத்தின் கல்வியினை வளர்த்தெடுப்பதற்கும் பாரம்பரிய கலைத்துறையை நல்லமுயற்சிகளை பல ஆண்டுகாலமாக முன்னெடுத்துவருகின்ற வேளையில் குறித்த பிரதேசத்தில் அதிகளவான படித்த கல்விப்புலத்தில் உள்ளவர்கள் காணப்படுகின்ற போதிலும் குறித்த பிரதேச பாடசாலைகளில் இருந்து உயர் பாடசாலைக்கு வெளியேறும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி உட்பட எழுத்தறிவு வீதமும் பாரிய பின்னடைவை வலயத்தின் கல்வி வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துக்கின்றது, இவ்வாறான நிலைமையினைக் கருத்திற் கொண்டு வலயத்தினால் விசேட செயற்திட்டமொன்றை வலயம் தற்போது முன்னெடுத்துவருகின்றது என தெரிவித்தார்.