மக்களை பாதிக்கும் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது


(ஜெ.ஜெய்ஷிகன்)
செங்கலடி கும்புறுவெளியில் தண்ணீர் போத்தல் தயாரிப்பு தொழிற்சாலை  மக்களை பாதிக்கும் வகையில் ஆரம்பிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அவர் அனுப்பி வைத்துள்ள மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பெரியபுல்லுமலை கும்புறுவெளி என்னும் பகுதியில் தண்ணீர் போத்தல் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு வருவதாகவும், இவ்விடயம் சார்பாக உரிய நடைமுறைகளை பின்பற்றாமலும், சுற்றுச் சுழலில் உள்ள மக்களின் அனுமதியை பெறாமலும், ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தற்போது மக்கள் போராட்டங்களின் மூலமும் எனது கள ஆய்வின் மூலமும் அறிந்துள்ளேன்.

இவ்வேளை இவ்விடயமாக பிரதேச அபிவிருத்திக் குழு, மாவட்ட அபிவிருத்திக் குழு போன்றவற்றில் ஆராயப்படாது செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழில் பேட்டைகள் ஆரம்பிக்கப்படும் போது பிரதேச அபிவிருத்தி குழு ஒன்றுகூடல் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு ஒன்றுகூடல் போன்றவற்றில் ஆராயப்பட வேண்டும் என இக்குழு கூட்டங்களில் முன்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளை உரிய நடைமுறைகளை பின்பற்றாது அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி தொழில் பேட்டை ஆரம்பி;க்கப்படும் இடங்களில் வாழும் மக்களை பாதிக்கும் வகையில் தொழில் பேட்டைகள் ஆரம்பிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது.

இதேவேளை இது அமைக்கப்படும் காணி சார்பாகவும் பிரச்சனைகள் முன்வைக்கப்படுகின்றது. இவ்விடயமாக ஆராய்வதற்கு அண்மையில் நடாத்தப்படவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இதையும் உட்படுத்துமாறு கோருகின்றேன் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள் செங்கலடி பிரதேச செயலக பிரதேச செயலாளர், ஏறாவூர்பற்று பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.