உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள், நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இந்தப் பணிகள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக 24 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடையும் வரை நான்கு பாடசாலைகள் முழுமையாக மூடப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு ஆனந்தா கல்லூரி, களுத்துறை குருலுகோம் மகா வித்தியாலயம், காலி சுதர்மா கல்லூரி மற்றும் மாத்தறை கொட்டுவேகொட சர்வேஷஸ் கல்லூரி ஆகியன மதிப்பீட்டுப் பணிகளுக்காக முழுமையாக மூடப்படவுள்ளன.

இதேவேளை, ஏனைய 20 பாடசாலைகளின் ஒரு பகுதி மட்டும் மூடப்பட்டு, மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, வவுனியா சைவ பிரகாச மகளிர் கல்லூரி, மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் கல்லூரி, யாழ். இந்து மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளும் இதில் அடங்குகின்றன.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் காரணமாக, முழுமையாகப் மூடப்படவுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகுமெனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.