சீரற்ற காலநிலை தொடரும் ! நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதன்படி நாடு முழுவதிலும் பல இடங்களில் இன்று (திங்கட்கிழமை) மழையுடன் கூடிய வானிலை காணப்படுமென அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பாக வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பலத்த மழை பெய்யும் வேளைகளில் நாட்டின் கடற்பகுதிகளில் பலந்த காற்று வீசக்கூடுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மீனவ சமூகத்தினரையும், கடலை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்களையும் அவதானமாக செயற்படும்படி வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.