துறைநீலாவணையைச் சேர்ந்த திரு. க. கணேசபிள்ளை 31 வருடங்கள் ஆசிரிய சேவையாற்றி அரச சேவையில் ஓய்வு.

 (SITHTHA)

திரு. க. கணேசபிள்ளை அவர்கள் மட்டக்களப்பு பழம் பெரும் கிராமமான துறைநீலாவணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தங்கப்பிள்ளை அவர்களின் மூத்த புதல்வனாவார். இவர் ஆரம்பக் கல்வியினை மட்/துறைநீலாவணை மகாவித்தியாலயத்திலும் உயர்தரக்கல்வியினை கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியிலும் சுயமாகவும் கற்று சிறப்பான உயர்தரச் சித்தியினைப் பெற்று 1981 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகி பொருளியல் சிறப்புப்பட்டதாரியாக வெளியேறினார்.
ஆசிரியராக நியமனப் பெற்று 1988.04.06 ஆந் திகதி முதல் நீர் கொழும்பு கம்மல் துறை அல்பலா முஸ்லிம் வித்தியாலயத்தில் கடமையாற்றி, பின் அங்கிருந்து இடமாற்றம் பெற்று 1992.09.01 ஆந் திகதியிலிருந்து மட்/துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து மீண்டும் இடமாற்றம் பெற்று 2003.02.23 ஆந் திகதியில் இருந்து மட்/பெரியகல்லாறு மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி பின் இடமாற்றம் பெற்று 2012.01.01 ஆந் திகதி முதல் மட்/பட்/மகிழூர் சரஸ்;வதி மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், உதவி அதிபராகவும் சிறப்பாகப் பணிபுரிந்து தனது அறுபதாவது வயதில் 2019.02.08 ஆந் திகதி ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் 1992 இல் பிள்ளையான்தம்பி சகுந்தலா ஆசிரியை அவர்களைத் திருமணம் செய்து முன்று பிள்ளைகளுக்குத்  தந்தையானார். அவர்களில் மூத்தமகன் யசோதரன் பொறியியலாளராகவும், இரண்டாவது மகள் கீர்த்தனா கால்நடை வைத்தியத் துறையிலும், மூன்றாது மகள் சித்த வைத்தியத்துறையிலும் கற்பதற்கு உறுதுணையாகவும், வழிகாட்டியாகவும் இருந்து அவர்களின் வாழ்வை வளம்படுத்த உதவினார்.
இவர் தனது சேவைக் காலத்தின் போது சிறப்பான சேவையினையாற்றி கூடுதலான மாணவர்களை பல்கலைகழகம் அனுப்பியுள்ளார். இவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் பலர் உயர் பதவிகளில் நல்லொழுக்க சீலர்களாக உள்ளனர். சக ஆசிரியர்கள், மாணவர்கள் ஏனையவர்களுக்கும் அவர்களின் தேவைகளுக்கேற்ப தம்மால் முடிந்நளவு உதவியினையும் சேவையினையும் புரியும் நல்ல மனப்பாங்குடைய சிறந்த மனிதருமாவார்.