கட்புலனற்றவர்களுக்கான கல்விப் போக்கு
கண்ணிமைப் பொழுதினில் கதிகலங்கும் மாற்றங்கள் நடந்தேறிவரும் இன்றைய உலகுதனில் கண்பார்வையற்றோர்க்கான கல்வியறிவும் காத்திரமானதொன்றே. கண்பார்வை அற்றவர்களாலும் கல்வி கற்க முடியும். அவர்களுக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை 18ஆம் நூற்றாண்டு காலப்பகுதியிலேயே உலகளாவியரீதியில் உதயமாகிவிட்டது. கண்களிருந்தும் கல்வியின் மகிமையினையும் முக்கியத்துவத்தினையும் புரியாது பலர் அறியாது பல தவறுகளை இழைத்துக் கொண்டிருக்க அடுத்தகட்ட நகர்வுக்காக நாள்தோறும் உழைத்து நல்லதொரு எதிர்காலத்திற்கு பிரகாசிக்க துடிக்கும் கண்பார்வையற்ற அறிஞர்களுக்கு கல்வியறிவு வழங்க வேண்டியது காலத்தின் கடப்பாடாகவே அமைந்திருந்தது.

கண்பார்வையற்றவர்களுக்கான பிரத்தியேக பாடசாலைகள் அமைத்து கல்வியினை புகட்ட வேண்டும் என்ற புரட்சிகரமான சிந்தனையை முதன்முதலில் உலகிற்கு உணர்த்தி வெற்றிக் கனியினை பறித்த மகானாக அன்றைய உலகினில் மிளிர்ந்தவர்தான் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திரு. வலன்ரைன் கொய் என்பவராவர.மானிட வாழ்வின் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தமுண்டு என்பார்கள். இவரது வாழ்வில் நடந்தேறிய தற்செயலான சம்பவமே கண்பார்வையற்றவர்களுக்கான கல்வி என்ற விதையினை விதைக்கக் காரணமாயிற்று.

ஞாயிறு ஆராதணையினை முடித்துக்கொண்டு சாலையோரமாக திரும்பிக்கொண்டிருந்த கொய் அவர்கள் கண் பார்வையற்ற நிலையில் தெருவோரமாக பிச்சையெடுக்கும் சிறுவனை சந்திக்க நேரிட்டது(கி.பி. 1771). சிறுவனது நிலை கண்டு மனம் கனிந்த கொய் நாணயம் ஒன்றை பிச்சையாக தட்டிலிட அதனைத் தடாவிப் பார்த்து அதன் பெறுமதியினை அறிந்து கொண்ட அச்சிறுவன் முகம் மகிழ்ந்ததனை பார்த்த வேளையில் அவரது அகத்திலிருந்துதித்த சிந்தனையே கண்பார்வையற்றவர்ளாலும் கற்க முடியும் என்பதனை உணர்த்தலானது.

நாணயத்தை தடவி அதன் பெறுமதியினை அறிந்து கொள்ள முடியுமானால் எழுத்துக்களை தடவிப் பார்க்க சந்தர்ப்பம் அளிக்கப்படும் போது அவர்களால் எழுத்துக்களையும் கற்க முடியுமென்பதனை உணர்ந்து கொண்ட கொய் அந்த பிச்சைக்கார சிறுவனாகிய பிரையன் கொய்ஸ் லெசுவரை தன்னுடன் அழைத்துசென்று கற்பித்தல் பணியினை ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டார். ஆதரவற்று தெருவோரத்தில் பிச்சை எடுத்த சிறுவன் அன்று கொய் அவர்கள் அறிஞனாக்கப்பட்டான்.

முயற்சி செய்தால் முடியாததென்று உலகில் எதுவுமேயில்லை. அயராது உழைத்த வலன்ரைன் கொய் அவர்களின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டிற்கு பிரான்ஸ் கல்விக் கழகம் வழங்கிய ஆதரவின் பிரதிபலனாக 1773 ஆம் ஆண்டளவில் கண் பார்வையற்றோர்களுக்கான பாடசாலையொன்று முதன்முதலாக உதயமானது. கண் பார்வையற்ற மாணவர்கள் பலர் இணைக்கப்பட்டு கல்வி புகட்டப்பட்டதோடு விரல்களால் தடவிப் பார்த்து எழுத்துக்களை அறிந்துகொள்ளக்கூடிய வகையிலமைந்த அட்சர எழுத்துக்களையும் வெளியிட்டார். இருப்பினும் இந்நூல்கள் அளவில் பெரியதாகவும் இலகுவில் உருவாக்கப்பட முடியாததாகவும் காணப்பட்டமையினால் பல இன்னல்கள் மற்றும் இடர்பாடுகளை மாணவர்கள் எதிர்கொள்ள நேரிட்டமையே பெரியதொரு குறையாக அமையலானது.

காலம் கனியும் பொழுது பாலை வனமும் சோலை வனமாக மாறுமென்பார்கள். கண் பார்வையற்ற லூயிஸ் பிறேயில் என்பவரினால் மாணவர்களினால் இலகுவில் கற்கக்கூடிய வகையிலமைந்த பிறேயில் எழுத்து முறையானது கண்டுபிடிக்கப்படலானது. கி.பி 1809 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் நாள் நடுத்தர குடும்பமொன்றில் நான்காவது பிள்ளையாக பிரான்ஸ் நாட்டில் அவதரித்த லூயிஸ் இளவயதினில் விபத்தொன்றில் சிக்கியதனால் கண் பார்வையினை இழக்கலானனார். இந்நிலையில் கல்வி கற்பதற்காக பாடசாலைக்கு அனுப்பப்பட்ட லூயிஸ் தனது அதித அறிவுத் திறன் காரணமாக முதன்மை மாணவனாக மிளிரலானார். அப்போது பார்வையற்றவர்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த எழுத்து முறை பொருத்தமற்றது என உணர்ந்து கொண்ட அவர் மனம் வருந்தியதோடு இந்நிலையினை மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது பத்தாவது வயதில் துளிர் விட்டதன் பிரதிபலனாக கி.பி 1824 ஆம்

ஆண்டு தனது 15 ஆவது வயதில் பிறேயில் எழுத்து முறையினைக் கண்டு பிடித்தமை அளபரியதொன்றாக அமைந்தது. கண் பார்வையிழந்த நிலையிலும் தனது கடின உழைப்பின் பிரதிபலனாக புதியதொரு முறையிலமைந்த எழுத்துமுறையினை லூயிஸ் அறிமுகப்படுத்தியிருந்தாலும் அன்;றைய காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 'கண்ணுடையரென்போர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையோர் கல்லாதவர்' என்பது போலவே கண்களிருந்தும் கல்லாதவர்களைப் போல கடின உழைப்பின் மூலம் கட்புலனற்ற லூயிஸ் கண்டு பிடித்த பிறேயில் எழுத்து முறையினை
பலர் நிராகரித்து வந்தனர். இந்நிலையில் தனது எழுத்து முறையினை அங்கிகரிக்க வேண்டி நீண்ட காலமாக போராடி வந்த லூயிஸ் கி.பி 1852 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆறாம் நாள் தனது 43 வது வயதில் மரணத்தை தழுவினார். ஆனால் மரணத்தில் தனது போராட்டத்தை வெற்றி கண்டார். அவரது மரணத்தின் பின்னர் பிறேயில் எழுத்து முறையானாது

அங்கிகரிக்கப்பட்டதோடு பிறேயில் உபகரணங்கள், சாதனங்கள், விளையாட்டு உபகரனங்கள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டன. இதேவேளை பிறேயில் எழுத்து முறையினை கணணியிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை இவரது கண்டுபிடிப்பின் மேன்மையினை வலியுறுத்தி நிற்கின்றது. இதன் விளைவாகவே நாடுகள் பல நாகரீகமான முறையில் கண்பார்வையற்றோர்களுக்காகன பல பாடசாலைகள் அமைக்க அடித்தளமிட இலங்கையிலும் கண்பார்வையற்றவர்களுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படலானது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் செனனா மிசனெறியினர் இதற்கான பணியில் முதன் முதலில் ஈடுபட்டனர். இம்மிசனெறியினைச் சேர்ந்த செல்வி மேரி எப் சாப்மன் என்பவர் கி.பி 1912 ஆம் ஆண்டு கட்லனற்ற மற்றும் செவிப்புலனற்றவர்களுக்கான பாடசாலையொன்றினை ஆரம்பித்தார். இதனால் இலங்கையில் இவர் விசேட கல்வியின்அன்னையாக போற்றப்படுகின்றார்.

இருந்த போதிலும் இலங்கை வாழ் தமிழ் பேசும் பார்வையற்றவர்களைப் பொறுத்தமட்டில் கி.பி 1956 ஆம்ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் நாள் கைதடி நவீல்ட் பாடசாலை பாடசாலையொன்றினை அமைத்ததனைத் தொடர்ந்தே
இவர்களது கல்விக்கான அடித்தளம் ஆரம்பமானது எனலாம். இதன் போக்கில் கி.பி 1972 ஆம் ஆண்டு இலங்கை ஒருமுகப்படுத்தப்பட்ட கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு மாபெரும் திருப்பமாகும். இவர்கள் உயர்கல்விவரை கற்பதற்கும் பல்வேறு துறைகளுக்குள் நுழைவதற்கும் சமூகத்திலே நல்லதொரு ஸ்தானத்தில் தம்மை நிலைநிறுத்திக்கொள்வதற்கும் இதன் மூலம் வழி ஏற்பட்டது;. இன்று இவ்வொருமுகப்படுத்தப்பட்ட கல்வித்திட்டத்தின் அடுத்த படிநிலையாக உட்படுத்தல் கல்வி அறிமுகப்படுத்தப்படடுள்ளமையினால் பார்வையற்ற ஒருவர் தான் விரும்பும் எந்தவொரு பாடசாலையிலும் கல்வி பயிலும் உரிமையை சட்ட ரீதியாக அளித்துள்ளமை போற்றற்குரியதே.

பார்வை இழப்பு என்பது இன்று நேற்றல்ல. மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மனித குலத்தை பீடித்து வருகின்ற ஒரு பிரச்சினை. ஆனால் கண் பார்வையற்றவர்களும் சாதிப்பார்கள் என்பதனை அறிந்த உலகு பார்வையினை இழந்து விட்டாலும் அவர்களது வாழ்வானது கருகிப் போய்விடலாகது என்பதனையுணர்ந்து கண் பார்வையற்றவர்களும் சாதிப்பார்கள் என்பதனை லூயிஸ் பிறேயில் என்பவரை முன்னுதாரணமாகக்கொண்டு கட்புலனற்றவர்களின் எதிர்காலத்திற்காக உழைத்து வருகின்ற உலகின் அற்பணிப்பின் மூலம் இருள் சூழ்ந்து தவிக்கும் இவர்களது வாழ்வுபிரகாசிப்பது திண்ணம்.


சி.புனிதா,
2ஆம் வருடம் (சிறப்புக் கற்கை),
கல்வி, பிள்ளைநலத்துறை,
கிழக்குப் பல்கலைக் கழகம்