தரமற்ற பொருட்கள் சந்தையில் விற்பனை



நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியம்

நுகர்வோர் அனைவருக்கும் தங்களுக்கிருக்கும் உரிமைகள் பற்றிய அறிவு அவசியம். எத்தனையோ உரிமைகள் நுகர்வோருக்குண்டு. ஆனால், இவை பற்றி பெரும்பாலானா நுகர்வோர் அறிந்து கொள்ளாதவர்களாக இருப்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இது தொடர்பில் ஊடகங்கள் தெளிவுபடுத்த வேண்டும். அத்தோடு பிரதேச மட்டத்திலும் தேசிய ரீதியிலும் விழிப்புணர்வு கருத்தரங்குகளும் நடத்தப்பட வேண்டும்.

நுகர்வோர் அலட்சியமாக இருப்பதா​லேயே தரமற்ற உணவுப் பொருட்கள் சந்தைக்கு வருகின்றன.

மக்களுக்கான பொருட்களை உற்பத்தியாளர்கள் வழங்கி வருகின்றனர். மறுபுறம் நுகர்வோர் அப்பொருட்களை வாங்கி உபயோகித்துப் பயனடைகின்றனர்.

இருதரப்பினருக்கிடையே நுகர்வோரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காரணம் பாவனையாளர்களைப் பார்க்கிலும் உற்பத்தியாளர்கள் உற்பத்தி நுட்பம் தெரிந்தவர்களாகவும் காலத்துக்கேற்ற வகையில் செயற்படுபவர்களாகவும் இருப்பதே இதற்குக் காரணமாகும். இவ்வாறான நிலையில் பாவனையாளர்களின் நலன்கள் தொடர்பாக அரசாங்கம் பல சட்டங்களை இயற்றியும் செயற்படுத்தியும் வருகின்றது.

இன்று பாவனையாளர்களின் நலன் கருதி 2003ம் ஆண்டின் 9ம் இலக்க பாவனையாளர் விவகாரங்கள் அதிகாரசபைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இது போன்ற சட்டங்கள் அனைத்தும் நுகர்வோரைப் பாதுகாக்க முன்வைக்கப்பட்ட சட்டங்களாகும். இவ்வாறான சட்டங்கள் அமுலில் இருந்த போதிலும் இன்று அநேகமான பாவனையாளர்கள் வர்த்தகர்களால் ஏமாற்றப்பட்டு வருவதை அறியக் கூடியதாக உள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் 26ம் பிரிவின் ஏற்பாட்டின்படி வியாபாரி ஒருவர் தனது வியாபார நிலையத்தில் தான் விற்பனை செய்யும் பொருட்களுக்கான மொத்த வியாபார விலை பட்டியல் ஒன்றையும், சில்லறை வியாபார விலைப்பட்டியல் ஒன்றையும் நுகர்வோரின் பார்வைக்காக வைத்திருத்தல் வேண்டும். மேலும் இவ்வேற்பாட்டின் பிரிவு 20ன்படி விலையில் பாரபட்சம் காட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அத்தோடு வியாபாரிகள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் தரம், அவற்றின் அளவு, பாவிக்கும் முறை, அதன் விலை, நிறை, உற்பத்தித் திகதி, காலாவதியாகும் திகதி, என்பனவற்றையும் நுகர்வோருக்கு எழுத்து (லேபல்) மூலம் தெரியப்படுத்த வேண்டும்.பிழையான தகவல்கள் தண்டனைக்குரிய குற்றமாகும். நுகர்வோர்களின் நலன் கருதி அரசாங்கம் கிராம மட்டம் தொடக்கம் தேசிய ரீதியில் நுகர்வோர் சங்கங்கள் அமைத்து செயற்படுத்தி வருகின்றது. 2003ம் ஆண்டின் 09ம் இலக்க பாவனையாளர் அதிகார சபை சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு செயற்பட்டு வரும் இச்சங்கங்கள் சிறந்த பணிகளை மேற்கொண்டு வருவதையும் காணக் கூடியதாக உள்ளது

பாவனையாளர் சங்கங்களின் பணிகள்:

பாவனையாளர்களுக்கு பயன்படுகின்ற தகவல்களைப் பரப்புதல்,பாவனையாளர்கள் கல்வி அறிவைப் பெற்றுக் கொள்ளக் கூடிய செயற்திட்டங்களைத் திட்டமிடல், பிரதேசத்தில் எழுகின்ற பாவனையாளர்களின் பிரச்சினைகள் பற்றிய விடயங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளல், பாவனையாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வருதல், குற்றம் இழைக்கும் வியாபாரிகள் தொடர்பான தகவல்களைப் பெற்று திணைக்களத்திற்குத் தெரியப்படுத்தல், சூழலைப் பாதுகாக்கும் நடைமுறைகளைப் பின்பற்றுதல், பங்களிப்புச் செய்தல்.

இவ்வாறான மேலும் பல நடவடிக்கைகளை இச்சங்கங்கள் செய்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் முன் குற்றமாக காணப்படும் செயற்பாடுகளில் சில வருமாறு:

வியாபார நிலையங்களில் சில்லறை மற்றும் மொத்த விலைப் பட்டியல் தொங்க விடப்படாமை, பண்டத்தில் பொருளில் குறிக்கப்பட்டுள்ள விலையை விட கூடுதலான விலைக்கு விற்பனை

செய்தல்,பொருளில் குறிக்கப்பட்டுள்ள தகவல்களை மாற்றுதல் - அழித்தல் - மங்கச் செய்தல், காலவதியான பொருட்களை விற்பனை செய்தல்,பொருட்களை வைத்துக் கொண்டு விற்பனை செய்ய மறுத்தல்,நுகர்வோரை ஏமாற்றும் நோக்கோடு குறைகளை மறைத்து பொருட்களை விற்பனை செய்தல்,பாவனையாளர்களுக்கு எல்லா விபரங்களும் அடங்கிய பற்றுச்சீட்டு வழங்கப்படாமை.

இவ்வாறான செயற்பாடுகள் சட்டத்தில் குற்றச் செயலாகும். இவற்றைக் கவனத்தில் கொண்டு

வியாபாரிகள் நடந்து கொள்ள வேண்டும். இவற்றைக் கண்காணிப்பதற்கென தேசிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் திடீர் சோதனைகளை நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தாலும் பாவனையாளர் அதிகார சபையினாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள உரிமைகள், பாதுகாப்பு சட்ட திட்டங்கள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் நுகர்வோரின் நலன்கருதியே ஏற்படுத்தப்பட்டவை. இவற்றை அடைந்து கொள்ள நுகர்வோர் கல்வி அவசியம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நுகர்வோர் பாதுகாப்பு என்னும் நோக்கத்தை நாம் அடைந்து கொள்ளவே முடியாது.

சர்வதேச நுகர்வோர் தினம் கடந்த 15ம் திகதி கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அன்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப் கெனடி 1962ம் ஆண்டு நுகர்வோர் உரிமைகள் பற்றியும் பாதுகாப்பு பற்றியும் அமெரிக்க காங்கிரஸில் (பாராளுமன்றத்தில்) உருக்கமான உரையொன்றையாற்றினார். அந்த உரையானது உலக அரங்கில் முக்கிய உரையாகக் கருதப்பட்டது. அதேவேளை நுகர்வோர் உரிமைகள் , பாதுகாப்பு மற்றும் நலன்கள் தொடர்பில்அக்கறை காட்டிய முதலாவது உலகத் தலைவராகவே ஜோன் எப் கெனடி அன்றும் இன்றும் மதிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அன்று ஜோன் எப் கெனடி ஆற்றிய உரையின் பின்னரே 1983ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி உலக நுகர்வோர் தினமாக ஜக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.