அதிகளவான பாலியல் குற்றங்கள் கையடக்கத் தொலைபேசி கேமராக்கள் மூலமாகவே இடம்பெறுகின்றன, - மட்டக்களப்பு மாநகரசபையில் விவேக்
தாய்மார்கள் தொலைக்காட்சி நாடகம் பார்த்துக் கொண்டு, தந்தையர்கள் கையடக்கத் தொலைபேசியில் இருந்து கொண்டு, பிள்ளைகள் வீடியோ விளையாட்டுக்கள் பார்த்துக் கொண்டிருந்தால் குடும்பத்துக்குள் இணக்கம் இல்லாமல் போய்விடும். அதிகளவான பாலியல் குற்றங்கள் கையடக்கத் தொலைபேசியில் இருக்கின்ற கேமராக்கள் மூலமாகவும், எளிதாகக் கிடைக்கின்ற இணையத்தின் மூலமாகவும் தான் இடம்பெறுகின்றன என நகைச் சுவை நடிகர் பத்மஸ்ரீ விவேக் தெரிவித்தார்.

கடந்த திங்கட் கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட நகைச்சுவை நடிகர் விவேக் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் அவர்களின் அழைப்பை ஏற்று மாநகருக்கு வருகை தந்து காந்திப் பூங்காவில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, பசுமை செயற்பாட்டின் அம்சமாக மரக் கன்றொன்றும் நட்டுவித்தார். பின்னர் நீரூற்றுப் பூங்காவில் உள்ள முத்தமிழ் வித்தகர் விபுலானந்தரின் சிலைக்கு மலர் வணக்கம் செலுத்தினார்.

அதன் பின்னர் மாநகரசபைக்குச் சென்று மாநகரசபை உறுப்பினர்கள், அலுவலகர்கள், ஊழியர்கள் என அனைவரையும் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் அவர்களால் பொன்னாடை போர்த்தியும், மாநர முதல்வரினால் நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மாநகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டே இவ்வாறு உரையாற்றினார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் எல்லாம் தமிழைப் பேசுகின்றோம், நேசிக்கின்றோம் ஆனால் மட்டக்களப்பு மக்களாகிய நீங்கள் தான் சுத்தமான தமிழைச் சுவாசிக்கின்றீர்கள். பாரதியார் பல்வேறு கருத்துக்களை அவரின் கவிதைகளில் சொல்லியிருக்கிறார். ஆனால் நம்மவர்கள் மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஆங்கிலம் வந்து கலந்து விடும், பிள்ளைகள் தமிழ் படிப்பதற்கான ஆர்வம் இல்லாமல் இருக்கின்றார்கள், திருக்குறள் தெரியாது, திருவள்ளுவர் என்றால் யார் என்று தெரியாது, தமிழ் அழிந்து விடும், தமிழ் பேசுபவர்கள் குறைந்து விட்டார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இதனை நான் முன்பும் சொன்னேன். அதனை மீண்டும் பதிவு செய்ய விரும்புகின்றேன். உலகத்தில் ஒரு இலங்கைத் தமிழன் இருக்கும் வரையில் தமிழை யாராலும் அழிக்க முடியாது.

அவ்வளவு அற்புதமான தமிழைப் பேசுகின்ற மக்கள் நீங்கள். இராமகிருஸ்ண மடத்தின் மூலமாக வந்த விபுலானந்தர் அவர்கள் மக்களின் அன்பைப் பெற்று மிகப் பெரிய கௌரவத்துடனும், கன்னியத்துடனும், மரியாதையுடனும் நினைவு கூரப்படுகின்றார்.

மட்டக்களப்பு மக்கள் கோபமாகப் பேசும் போது கூட அது அன்பாகத் தான் தெரிகின்றது. மட்டக்களப்பு மக்கள் என்றென்றும் அன்பான மக்கள். எல்லோரையும் நேசியுங்கள்.

எத்தனையோ கண்ணீரையும், துன்பத்தையும், துயரத்தையும் தாண்டி வந்த உண்மையான வீரர்கள். பல நாடுகளில் துயரம் என்றால் என்னவென்று தெரியாமல் அன்பை மட்டுமே, கொண்டாட்டத்தை மட்டுமே, வாழ்வில் சந்தோசத்தை மட்டுமே பார்த்த குழந்தைகள் இருக்கின்றார்கள். ஆனால் மிக மிக அதிகமான வளத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வந்து பின்னர் மிக மோசமான துன்பங்களையும் சந்தித்துக் கொண்டு பின்னர் அதிலிருந்து மீண்டு நெருப்பில் இருந்து எழுந்து வருகின்ற பீனிக்ஸ் பறவை போன்று எழுந்து வருகின்ற நீங்கள் தான் உண்மையான வீரர்கள்.

அடுத்த ஒரு சாகாப்தத்தை உருவாக்குகின்ற உழைப்பாளிகள் நீங்கள். இன்னும் பத்து வருடங்களில் மற்றைய நாடுகளுடன் போட்டி போடும் அளவிற்கு நீங்கள் வளர்ந்து நிற்பீர்கள்.

இன்று சிசிடிவி இல்லாத இடமே இல்லை. ஆனால் உலகத்திற்கே ஒரு சிசிடிவி இருக்கின்றது. அது நம்மை நெருக்கமாகப் பார்த்துக் கொண்டும் இருக்கின்றது. அது வேறு யாரும் அல்ல இறைவன் தான். அதை ஒருபோதும் மறந்து விடக் கூடாது.

பிள்ளைகளை வளர்க்கும் போது குடும்ப உறவுகளுக்கு இடையிலான அன்பு, அரவணைப்பினை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும். தாய்மார்கள் தொலைக்காட்சி நாடகம் பார்த்துக் கொண்டு, தந்தையர்கள் கையடக்கத் தொலைபேசியில் இருந்து கொண்டு, பிள்ளைகள் வீடியோ விளையாட்டுக்கள் பார்த்துக் கொண்டிருந்தால் குடும்பத்துக்குள் இணக்கம் இல்லாமல் போய்விடும். அதிகளவான பாலியல் குற்றங்கள் கையடக்கத் தொலைபேசியில் இருக்கின்ற கேமராக்கள் மூலமாகவும், கையடக்கத் தொலைபேசியில் எளிதாகக் கிடைக்கின்ற இணையத்தின் மூலமாகவும் தான் இடம்பெறுகின்றன.

பெற்றோர்கள் வேலை பார்ப்பதன் நோக்கம் குடும்பத்தினை வளமாக்க வேண்டும் என்பதற்காகவே தான். குடும்பத்தில் உள்ள குழந்தைகள் வேறு வேறு திசைக்குச் சென்று விட்டால் பெற்றோர்கள் கஷ்டப் படுவதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். அதனால் தான் ஒரு நல்ல ஒழுக்கத்தை சமுதாயத்திற்குக் கற்பிக்கும் இடங்களிலே குழந்தைகளை விடுங்கள் என்று தெரிவித்தார்.