கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை


 இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களும் மக்களுக்கு  சேவை  செய்யும் நோக்கோடு   பல பிரதேச செயலாளர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது .  அதே போல் அம்பாறை மாவட்டமும் மக்களுக்கு சேவை செய்யும்  நோக்குடன் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளாக   பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தோடு பிரிக்கப்பட்ட பிரதேச செயலகங்களுள்   கல்முனை தமிழ் பிரதேச செயலகமும் ஒன்றாகும்  . ஆனால் இந்த 20 செயலகங்களில் கல்முனை தமிழ் செயலகம்  ஒன்று தான் முழு அதிகாரம் இல்லாத குறை மாத செயலகமாக  1989 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை  அதே நிலையில்தான் செயற்பட்டு வருகின்றது. அதேவேளை கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை ஒரு முழு செயலகமாக மாற்றும் முயற்சி 1993 ஆண்டில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை ஒரு வெற்றியளிக்காத  முயற்சியாகவே தொடர்கின்றது . முக்கியமாக   காணி மற்றும் நிதி அதிகாரமற்ற ஒரு உப பிரதேசசெயலகமாக 1989 இல் இருந்து இன்றுவரை இயங்கிவருகின்றது  இது  கல்முனை தமிழ் சமூகத்தை பாரியளவில் பாதிக்கும் விடயமாக உள்ளது 

 கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை எடுத்துக்கொண்டால்  இச்  செயலகமானது 29 கிராமசேவையாளர் பிரிவுகளையும்   36,346 மக்கள் தொகையையும்  கொண்டதாக அமைந்துள்ளது .மேலும்  இந்த மக்கள் தொகையில் 90 வீதமாணவர்கள்   தமிழ் மக்களாகவே  காணப்படுகின்றனர்    அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேச செயலகங்களில் மிககூடுதலான தமிழ் மக்கள் தொகையானா 32,000 மேற்பட்ட சனத்தொகையையும் கொண்டதாகவும் உள்ளது, இங்கு வாழ்கின்ற தமிழ் மக்கள்  பூர்வீகமாகவே  இப் பகுதியில் வாழ்பவர்களாகும்   மற்றும் அம்பாறை மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களின் தலைநகரமாகவும் கல்முனை நகரம் அமைந்துள்ளது
இவற்றிற்கு மேலாக புராதான காலத்திலிருந்து இந்த குறிப்பிட்ட பகுதி ஒரு தலைநகரமாக விளங்கியதற்கு சான்றாக பழமை வாய்ந்த பல முன்னணி பாடசாலைகள்   பல அரச திணைக்களங்கள் , கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை உட்பட இப் பகுதியிலேயே அமைந்துள்ளது அத்தோடு ஒரு பிரதேச செயலகத்துக்கு உரிய சகல அடிப்படை தகமைகளையும் கொண்டுள்ளதாகவும்  அமைந்துள்ளது.


இதே வேளை கல்முனை முஸ்லீம் பிரதேச செயலகம் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு தெற்காக கல்முனைக்குடியைய் மையமாக கொண்டு அமைந்துள்ளது, அதாவது கல்முனை முஸ்லீம் பிரதேச செயலகம் கல்முனை மத்தியில் இருந்து  கரையோரமாக ஆரம்பித்து தெற்கே சாய்ந்தமருதையும் ,  வடக்கே கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரிவை எல்லையாகவும் அத்தோடு மூன்று  நிலத்  தொடர்பற்ற  பிரதேசங்களான சாய்ந்தமருது , நற்பட்டிமுனை ,இஸ்லாமபாத் ஆகிய பிரதேசங்களை   உள்ளடக்கிய ஒரு பிரதேச செயலக பிரிவாக காணப்படுகின்றது. கல்முனை முஸ்லீம் பிரதேச செயலகமும் 29 கிராமசேவையாளர் பிரிவுகளையும்   51,413  மக்கள் தொகையையும்  கொண்டதாகவும் காணப்படுகின்றது.

 கிழக்கு மாகாணத்தை பொறுத்தளவில்  தமிழர்களும்   ,  முஸ்லிம்களும் அண்ணளவாக சமமான வீதமாக   உள்ளார்கள் அதாவது அண்ணளவாக 39% - 40% சனத்தொகை கொண்டுள்ளனர் , அது மட்டும் இன்றி கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களிலும் பல இடங்களில்  அல்லது கூடுதலான இடங்களில் இந்த இரண்டு சமூகங்களும் முறையே ஒரு சமூகத்திற்கு அடுத்ததாக மற்றைய சமூகம் எல்லையை கொண்டதாக வாழ்ந்து வருகின்றனர் அதனால் ஒரு நில தொடர்பற்ற கல்முனை முஸ்லீம் பிரதேச செயலகம் நடைமுறையில் சாத்தியமானதாகும். இதற்கு மேலாக இலங்கையில் ஏற்கனவே 3  நில தொடர்பற்ற பிரதேச செயலகங்கள் உள்ளன. அவை யாவும் சிறந்த முறையில் இயங்கி  வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தை பொறுத்தளவில் தமிழ் மக்களின் சனத்தொகையானது அன்னளவாக 18% மாகவும் அத்தோடு சனத்தொகை  வரிசையில் மூன்றாவது நிலையிலும்  உள்ளனர். மேலும் முஸ்லீம் சமூகத்தின் சனத்தொகையானது 45% ஆகவும் சனத்தொகை வரிசையில் பெரும்பான்மையாகவும் உள்ளனர். இவ்வாறு இருக்கையில் தமிழ் சமூகம் எந்தவொருவகையிலும் முஸ்லீம் சமூகத்திற்கு ஆபத்தாக அமையப்போவதில்லை. இந்த கட்டுரையில் முன்னர் குறிப்பிட்ட போன்று கல்முனை தமிழ் சமூகம் தங்களுடைய தனித்துவத்தை   பேணி காப்பதற்கு அவர்களுக்கென ஒரு முழு அளவிலான பிரதேச செயலகத்தின் தேவை  இன்றியமையாததாகவுள்ளது

ஆனால் மிகவும் துர்பாக்கியமான நிலை என்னவெனில் இதில்  முக்கியமான  சுயநல  அரசியல் மயப்படுத்தப்படுகின்ற ஒரு தண்மை  தற்போது உருவாகியுள்ளது. இத் தன்மையானது இரு சமூகங்களிடையும் ஒரு காழ்ப்புணர்ச்சியை உருவாக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படக்கூடியதாகவும் உள்ளது. தமிழ் சமூகத்தை பொறுத்தளவில்  ஒரு தனி பிரதேச செயலகமானது அவர்களது  தனித்துவத்தினை பேணி காப்பதற்கான  ஒரு நியாயமான கோரிக்கையாகும்     இந்த இழுத்தடிப்பு  எவ்வளவு காலம் நீடிக்கின்றதோ  அதே அளவில் இன ஒற்றுமையும்  பாதிக்கப்படுவதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவும்   உள்ளது.


  இழுத்தடிப்பில்    முஸ்லிம் அரசியல்வாதிகளின்  பங்கு  

 இதேவேளை கல்முனை உப  தமிழ் பிரதேச செயலகம் முப்பது வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டது , இன்னும் அதே நிலையில் இருப்பதற்குரிய காரணங்களை ஆராய்வோமேயானால் , பின்வரும்  காரணங்கள் இந்த  உப பிரதேச செயலகம் ஒரு முழுமையான செயலக தரத்திற்கு தரமுயர்த்துவதற்கு முக்கிய தடைகளாக உள்ளன .
முஸ்லிம் மக்களை இப் பகுதியிலிருந்து  தொடர்ந்து  பிரதிநிதித்துவ படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிந்தனையும் அவர்களை பிரதிநிதித்துவ படுத்தும் அரசியல் கட்சியின் அழுத்தமும் கடந்த முப்பது வருடங்களாக தொடர்ந்து வரும் ஆட்சியாளருக்கு கொடுத்தமை


 கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவை பொறுத்தவரை 1993 ஆண்டு தரமுயர்த்துவதற்காக அமைச்சரவை அமர்வு அளவிற்கு சென்ற போதும் , அடுத்த கட்டமான முழு பிரதேச செயலாளர் பிரிவு அளவிற்கு செல்லாமல் துரதிஷ்டவசமாக எமது சகோதர சமூக அரசியல்வாதிகளின் அழுத்தங்கள் காரணமாக அந்த நிலையிலேயே இன்று வரையும் உள்ளது .

அத்தோடு   அன்றிலிருந்து இன்றுவரை இந்த பிரதேசத்திலிருந்து முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் தங்களுடைய இருப்பை தக்க வைத்துக்கொள்ளும் நோக்குடன் அதாவது தமது முஸ்லிம்  சமூகத்திடம்  ஒரு தப்பான பிரச்சாரத்தை ,மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .  மேலும்  இந்த தரமுயர்த்தலை வைப்பில் வைத்துக்கொள்வதன் மூலம் தாங்கள் ஒரு சாதனையாளர் என்ற தோற்றப்பாடையும் அத்தோடு சகோதர சமூகம் பெரும் அச்சுறுதல்லுகளாகும் என்ற ஒரு தோற்றப்பாட்டையும்  தோற்றுவித்து சகோதர சமூகத்தின் வாக்கு வங்கியை தம்வசம் வைத்துக்கொள்ளும் ஒரு துர்ப்பாக்கிய முயற்சி   தொடந்த வண்ணமே உள்ளதை காணக்கூடியதாகவுள்ளது . கல்முனை நகரில் முஸ்லீம் சமூகத்திற்கு உள்ள ஒரு அரச நிர்வாக கட்டமைப்பு அவர்களுடன்  சேர்ந்து வாழ்கின்ற தமிழ் சமூகத்திற்கு இருக்க கூடாதென்ற ஒரு முயற்சியும் இங்கு தென்படுகின்றது
.

  தற்போது 36,346 மக்கள் தொகை கொண்ட கல்முனை தமிழ் பிரிவில் 3,500 முதல் 4,000 வரையிலான  முஸ்லிம் மக்களுக்காக 90  வீத தமிழ் மக்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டு  , 10  வீத முஸ்லிம் மக்கள் காப்பாற்றபட வேண்டும்  என  கூறி ஒரு பிரதேச செயலகத்துக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான அதிகாரங்களான  . காணி , மற்றும்  நிதி சம்பந்தமான  முடிவுகள் . அந்த பிரதேச செயலகத்தால் எடுக்காமல்   . இன்னொரு செயலகத்தில் எடுக்கப்படுவது  என்பது பத்து வீத முஸ்லிம்   மக்கள் மட்டும்தான்   இலங்கை பிரஜைகள் என்ற தோற்றப்பாடும் . இந்த பிரதேச செயலகத்துக்குள் . வாழுகின்ற மற்றும்  தொண்ணூறு  வீத  தமிழ் மக்களும் முழு  பிரஜாவுரிமை  அற்ற  ஒரு இனம் போன்ற . ஒரு தோற்றப்பாடை . தென்படுதுத்துகின்றது. இப்படியான ஒரு சூழ்நிலையை  கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தாங்கள் வாழுகின்ற பல பகுதிகளில்   நாளாந்தம் எதிர்  கொள்ள வேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்படுவதான ஒரு வலுவான அபிப்பிராயம் தமிழ்  மக்கள் மத்தியில் எழுவதை  அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. அதாவது மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் முன்னர் எப்படி நடத்தப்பட்டார்களோ அதே நிலைக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களும் தள்ளப்படலாம் என்ற ஒரு ஐயம் தென்பட தொடங்கியுள்ளது  .

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தனி ஒரு செயலகமாக அமையும் பட்சத்தில் அது காரைதீவு, நாவிதன்வெளி, சம்மாந்துறை, பொத்துவில், நிந்தவூர், அட்டாளைச்சேனை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் போல் இந்த செயலகமும் இரு இனங்களும் வாழுகின்ற மற்றுமொரு செயலகமாக   அமையும் ,  அத்தோடு இதே போன்று பல பிரதேச செயலங்கள் மட்டக்களப்பு , திருகோணமலை மாவட்டங்களில் இரு சமூகங்களினதும் தனித்துவத்தை கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது

 இதே  வேளை கடந்த காலங்களில் கிழக்கிலுள்ள மூன்று மாவட்டங்களிலும்   முக்கியமாக   தமிழ் முஸ்லிம் மக்களின் தனித்துவத்தை கருத்திற்கொண்டு பல பிரதேச செயலாளர் பிரிவுகளும் .  அத்தோடு ஒரு நிலத்தொடர்பற்ற கல்வி வலயமும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது அதே வேளை கல்முனை பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களின் நலனை பாதுகாப்பதற்காக கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படக்கூடதேன்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒரு காரணமாகும்


 கல்முனை தமிழ் உப பிரதேச செயலக தரமுயர்த்தல் நீண்ட காலமாக கிடப்பில் இருப்பதற்கு  வட கிழக்கில் தொடர்ந்த  பாரிய யுத்தமும்  ஒரு  முக்கிய காரணமாகும் .யுத்த காலத்தில் தமிழ் மக்கள் பெரும் இன்னல்களை   முகம்கொடுக்க வேண்டிய நிலையில் இச் செயலகத்தை  தரமுயர்த்துவதற்குரிய   முயற்சிகள்  மேற்கொள்ள முடியாத  ஒரு  சமூகமாக தமிழ் சமூகம்   இருந்துள்ளனர். அவ் வேளையில் முக்கியமாக இடம்பெயர்வு , காணாமல் போனமை ,  போன்ற  அசாதரணமான சூழ்நிலை நிலைகளோடு   ,சுனாமியின் தாக்கத்தையும்   முகம்கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தனர்

 அதேவேளை இந்த மாவட்டத்தை கடந்த முப்பது வருடங்களாக பிரதிநித்துவ படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு அமைந்ததேன்பதும் கேள்வியாகவுள்ளது . அதுவும் முக்கியமாக போர் சூழ்நிலை அற்ற  கடந்த பத்து வருடத்தை எடுத்துகொள்வோமேயானால்  இப்பகுதியிலிருந்து  தெரிவுசெய்யப்பட்ட பாராளமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு அக்கறையும் ஒரு கேள்விக்குறியாகவுள்ளது .

 இதிலும் கடந்த நான்கு வருடங்களாக  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளிகள் போல் முக்கியமாக கடந்த நான்கு வருட வரவு செலவு திட்டங்களிளும் மற்றும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்ல பிரேரனைகளிலும் அரசுக்கு ஆதரவாகவிருந்து ஒரு சக்தி வாய்ந்த பங்காளி போல் தோற்றமளித்துக்கொண்டிருக்கும்  கிழக்கு தமிழ் மக்களை நூறு வீதம் பிரதிநிதித்துவ படுத்தும் கட்சியா இருந்தும் , இக் கட்சியின்  பாராளுமன்ற உருப்பினர்காளால்  இப் பிரச்சனையை மூன்று வருடங்களுக்கு முன்பே முன்னிலை படுத்தியிருக்க வேண்டும்  இந்த இழுத்தடிப்பால் கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரும்அதிருப்தியை ஏற்படுதியவன்னமுள்ளது

மக்களின் எண்ணப்பாடு

நீண்ட போரால் மிக பாரிய அளவில்  பாதிக்கப்பட்ட தமிழ் இனம் எந்த ஒரு அபிவிருத்தியும் அற்ற அல்லது மிக சிறிய அளவிலான நன்மையை பெறுகின்ற வேளையில் மறு பக்கத்தில் மற்றைய இரு சமூகங்களும்    மிக நீண்ட காலமாக பாரிய அபிவிருத்தி திட்டங்களின் ஊடாக பெரும் நன்மையை அனுபவித்துவருகின்றது. அதேவேளை இவை மற்றைய இரு சமூகககளின்பிழையுமல்ல என்பதையும் பதிவுசெய்து கொள்கின்றோம். அதே வேளை கடந்த மூன்று வருடங்களாக ரணில் அரசிற்கு  நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கி வரும் தமிழர் தரப்பு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான  மனிதாபிமான பிரசினைகளுக்கு நிவாரணம் வழங்க கூடிய வகையில் அணுகுமுறையை  மேற்கொண்டிருக்கலாம் என்ற எண்ணப்பாடு  பெரும்பாலான கிழக்கு   தமிழ் மக்களின் உள்ளத்தில் உள்ளது . அத்தோடு கல்முனை தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு தமிழர் அரசியல் தரப்பு  முஸ்லீம் மக்களின் இரண்டு அரசியல் தலைமையிடம்மும்  எடுத்துக்காட்டி அதாவது  முஸ்லீம் தலைமை சுயநல அரசியலுக்கு அப்பால் சென்று இரு சமூகங்களுக்கும் இடடையே ஒரு நீண்ட சுமுக உறவின் முக்கியதை வலியுறுத்தகூடிய வகையில் கல்முனை தமிழ் பிரதேச செயலக தீர்வு  அமைய வேண்டும் என்பதே எமது இந்த கட்டுரையின் நோக்கமும்மாகும் .

 தமிழ் மக்களை கிழக்கு மாகாணத்தில் இருந்து பிரதிநிதிபடுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படியான முயற்சிகளை மேற்கொண்டது அல்லது மேற்கொள்கின்றது என்ற கேள்வி கல்முனை தமிழ் சமூகத்திடம் எழுந்த வண்ணம் உள்ளது. அது மட்டும் இல்லாமல் மூன்று இனம் வாழ்கின்ற இந்த மாகாணத்தில் ஒரு முழு நிர்வாக அலகை பெறமுடியாது  அதுவும் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக ரணில் அரசாங்கத்திற்கு எந்த ஒரு நிபந்தனையும் இன்றி ஆதரவை வழங்கி வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பால் மிக நீண்டகாலமாக (1993 யிலிருந்து) கிடப்பில் இருக்கும் இந்த சிறிய விடயத்தைக்கூட பெறமுடியாமல் இருக்கும் நிலையில் இவர்களால் எப்படி ஒரு  அரசியல் தீர்வை கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு பெற  முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது அத்தோடு மேலும் வடக்கில் உள்ள அரசியல் தலைமைகளுக்கு எந்த அளவிற்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் தெரிகின்றதென்பது?. மேலும் இங்குள்ள அரசியல் தலைமைகள் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் நாளாந்தம் நோக்குகின்ற பிரச்சினைகளை  திருகோணமலை மற்றும் வடக்கில் உள்ள தலைமைகளுக்கு எடுத்து கூறுகின்றார்களா அல்லது அதனை எடுத்து கூற கூடிய பக்குவம் இருக்குகின்றதா என்ற கேள்வியும் எழுகின்றது.

அரசியல் தீர்வுடன் கல்முனைபிரச்னையை தொடர்பு படுத்தல் என்பது எந்த அளவிட்கு நியாயம் ஆனது அத்தோடு தமிழ் தலைமை முஸ்லீம் சமூகத்துடன் ஒத்து போக வேண்டும் என்ற போக்கு எந்த அளவிட்கு வெற்றி அளிக்கும் என்பதும் கிழக்கு வாழ் தமிழ் மக்களிடம் எழுந்தவண்ணமுள்ளது . ஏனெனில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததில் இருந்து இன்று வரையான காலப்பகுதியை எடுத்து கொள்வமானால் கிழக்கில் உள்ள முஸ்லீம் சமூகம் தமிழ் சமூகத்திடம் இருந்து விலகி செல்லும் ஒரு தெளிவான பாதையை காணக்கூடியதையுள்ளது. ஆரம்பத்தில் முஸ்லீம் அரசியல் வாதிகள் தமிழ் கடசிகளின் ஊடக பாராளுமன்றம் சென்றனர், பின்னர் இந்த முயற்சி  60, 70 களில் வெற்றி அளிக்கவில்லை பின்னர் 80 களில் அமரர் அஸ்ரபினால்  முஸ்லீம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது அன்றில் இருந்து இன்று வரை கிழக்கிலுள்ள முஸ்லீம் சமூகம்   பல துறைகளிலும் ஒரு பெரும் சக்தியாக வளர்ந்து  பல   பரிணாமனங்களை     கடந்து சென்று கொண்டுள்ளது. இப்படியாக ஒரு உறுதியாக வளர்ந்துவரும் ஒரு சமூகம் தமிழ் சமூகத்தை தங்களின் ஒரு அங்கமாக இணைத்துக்கொள்ளும் ஒரு மனநிலையில் உள்ளார்கள் என்பதை கல்முனை உப செயலாளர் பிரிவும்  , அத்தோடு  கடந்த கிழக்கு மாகாண  முதலமைச்சர் பொறுப்பை எடுக்கும் முடிவிலும் காணக்கூடியதாக இருந்தது .   இந் நிலையில்    தமிழ் தலைமை முஸ்லிம்களுடன்  சேர்ந்து பயணிக்கலாம்  என்று நினைப்பது கிழக்கிலுள்ள தமிழ் மக்களால் எந்தளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது .


JVP - யின் பாராளமன்ற உறுப்பினர்  விஜித ஹேரத்திற்கு உள்ள அக்கறையும் மனத்துணிவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இல்லையா அதாவது அவரால் இதற்கு தடையாய் உள்ள இராஜங்க அமைச்சரை கண்டித்ததோடு அவர் இந்த அமைச்சரின் செயற்பாடு இதே முறையில் தொடருமாயின் இரு இன்ங்களிடையேயும் இனக்கலவரம் வரை இட்டுசெல்லலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து  தெரியும் முக்கிய விடயம் என்னவென்றால் கல்முனை தமிழ் மக்களுக்கு இதுவரை இழைக்கப்பட்ட உரிமை மறுப்பு  எந்த ஒரு முறையிலும் நியாயபடுத்தமுடியாத விடயம் என்றும். தரமுயர்த்தலுக்கு தடையாய் உள்ளவர்கள் இனியும் தங்களுடைய இந்த நியாய படுத்த முடியாததும், தமது கட்சி மற்றும் சுய நன்மையை கருத்தில் கொள்ளாது இரு இனங்களின் நீண்டகால உறவை கருத்தில் கொண்டு தமது நிலையை மாற்றவேண்டும். என்பதை வலியுறுத்தியதாக இருந்தது

              தமிழ்த் தலைமைகளிடம் வேண்டிநிற்பவை

இறுதியாக இவை எல்லாவற்றிட்கும் அப்பால் இந்த விடயத்தில் நடந்த சரி பிழைகளை கடந்து  அல்லது  ஒரு பக்கம் தள்ளி வைத்து விட்டு கிழக்கு வாழ் தமிழர்களை 100 விகிதம் பிரதிநிதித்துவம்  படுத்தும் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் ஒரு தலையாய கடமையாய் உள்ள அதாவது கல்முனை வாழ் தமிழ் மக்களின் ஒரு நியாயபூர்மமான அடிப்படை உரிமையை பெற்று கொடுக்க வேண்டிய கடமை தமிழ் மக்களின் பாதுகாவலராகவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உள்ளது . மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட ஒரு சக்தி வாய்ந்ததும்,ஆக்க பூர்வமான முயட்சிகளை முன்னெடுக்க கூடிய  அனுபவமும்  மற்றும் கட்டமைப்பும் உள்ள இன்னொரு  தமிழ் அமைப்பு  இல்லை என்பதே யதார்த்தமாகும்.

இப்படிப்பட்ட உறுதியான தன்மைகளை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் அனுபவிக்கும் ஒரு அடிப்படை உரிமையை கல்முனை தமிழ் மக்களும் அனுபவிப்பதற்கு உரித்து உடையவர்கள் என்பதனை எந்தவொரு ஐயப்படுமின்றி ஏற்றுக்கொண்டு. கல்முனை வாழ் தமிழ் சமூகத்திற்கு பெற்று கொடுக்கவேண்டிய கடமைப்பாட்டில் தமிழ் பிரதிநித்துவம் உள்ளது .
இப் பிரச்சினைக்கு  முன்னுரிமை கொடுத்து . மேலும் அரசின் தலைமைத்துவத்திடம் ஒரு நல்ல  உறவு முறையை பேணும் தமிழ் தலைமை தொடர்ச்சியாய் கல்முனை தமிழ் சமூகத்தின் அடிப்படை தேவையை பூர்த்திசெய்ய கூடிய இந்த  கோரிக்கையை எடுத்துக்  கொண்டு செல்வதன் மூலம் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களின் ஒருமைப்பாட்டை பேணுவவர்களாகவும் அத்தோடு மிக நீண்ட கால கிடப்பில் உள்ள கல்முனை தமிழ் சமூகத்தின் ஒரு நியாயப்பூர்வமான  கோரிக்கைக்கு காலம் தாமதியது தீர்வு காணப்படவேண்டும் என்பதுமேயாகும்

ஆர்.சயனொளிபவன்
தம்பிலுவில்