வயது செல்லச் செல்ல நிலவிலும் சுருக்கம் வரும்



நாஸாவின் புதிய கண்டுபிடிப்பு

நாம் ஆசை ஆசையாய் பார்த்து வர்ணித்த, கவிதை தீட்டிய நிலவு சுருங்க ஆரம்பித்து விட்டது என்பது உண்மைதான் என்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.

நிலவை காதலியின் முகத்தோடு ஒப்பிட்டு கவிதை புனைந்தனர் நமது கவிஞர்கள். ஆனால் காதலிக்கும் வயதானால் முகத்தில் சுருக்கங்கள் வரும். அப்படித்தான், நிலவிற்கும் இப்போது சுருக்கங்கள் வந்துவிட்டது.

இந்த சுருக்கங்களுக்குக் காரணம், நிலவு சிறிதாகிக் கொண்டே போவதுதான். நிலவு மெலிந்து செல்வதால், அதன் மேற்பரப்பு உடைந்து, பாறை முறிவுகள் ஏற்பட்டு, அவை கோடுகளாக உருமாறி தென்பட ஆரம்பித்துள்ளது. இவை ஒன்றோடொன்று மோதும் தன்மை கொண்டவை என்பது அச்சுறுத்தும் தகவலாகும். கடந்த சில நூறு மில்லியன் ஆண்டுகளில் நிலவு 150 அடி அளவுக்கு சுருங்கியுள்ளது.இப்படி நிலவு சுருங்கிக் கொண்டே செல்லக் காரணம் என்ன என்பதையும் நாசா விளக்கியுள்ளது.

நிலவின் உட்பகுதி குளிர்ச்சையடைவதுதான், இந்த நிலைமைக்கு காரணம். குளிர்ச்சியடையும் பொருள் சுருங்கும் என்பது பௌதிகவியல் விதி என்பது அனைவரும் அறிந்ததுதான்.விண்ணியல் ஆய்வாளர்கள் கடந்த கால ஆய்வு திட்டங்களின் போது, நிலவில் சீசோமீட்டர்களைப் பொருத்தினர். அதில், நிலவில் நிலநடுக்கம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது. இதை moonquake என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.

விஞ்ஞானி தாம் வோட்டர்ஸ் கூறுகையில், "நிலவு தொடர்ச்சியாக குளிர்சியடைவதாலும், சுருங்குவதாலும் நிலவில் அதிர்வு ஏற்படும் என்பதை நாங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளோம்.

இந்த விஷயத்தில் இந்த ஆய்வுதான், முதல் ஆதாரம்" என்று தெரிவித்துள்ளார்.நிலவில் ஏற்படும் நில அதிர்வு, ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவுக்கு வலிமையானதாக இருக்கும் என கணித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

மேலும், நிலவு சுருங்குவது தொடர்பாக ஒரு வீடியோவை ட்விட்டரில் நாசா ஷேர் செய்துள்ளது. சமீபத்தில் பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளையை புகைப்பட ஆதாரமாக வெளியிட்டு ஆச்சரியத்தில் மூழ்கடித்த நாசா அமைப்பின் அடுத்த முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாக இது பார்க்கப்படுகிறது.