அரசாங்கம் தம்மை பாதுகாக்க தவறுகின்றதென மக்கள் நினைத்தால் அவர்கள் தம்மைத் தாமே காக்க முயற்சிப்பார்கள்


கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்களின் வீடுகள், வியாபார ஸ்தாபனங்கள், பள்ளிவாசல்கள் என்பன தாக்குதலுக்குள்ளாவது குறித்து கவலையடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்ட நேரத்தில் பாதுகாப்புப் படையினர் இந்த வன்செயல்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது.


நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்முறையாளர்களுக்கு எதிராக உடனடியானதும் கடமையானதுமான நடவடிக்கைகளை அதிகாரத்திலுள்ளோர் எடுக்கவேண்டுமென கோரியுள்ள கூட்டமைப்பு, அரசாங்கம் தம்மை பாதுகாக்க தவறுகின்றதென மக்கள் நினைத்தால் அவர்கள் தம்மைத் தாமே காக்க முயற்சிப்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறான சூழ்நிலைக்கு அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.

இந்த நாட்டில் தாம் சுயமாக வாழ்வதற்கு போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும் என்று இன்னுமொரு சமூகத்தையும் தூண்டாதீர்கள் என கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவ ஆலயங்களை தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும், பள்ளிவாசல்களை தாக்குகின்ற பயங்கரவாதம் என்றாலும் எந்த பயங்கரவாதத்திற்கும் இந்த நாட்டில் இடமில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.