பதுரியா நகர் பெண் கொலை; கொலையாளி பொலிசில் சரண்
(மு.கோகிலன்)

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொண்டயன்கேணி பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலத்தினை நேற்று சனிக்கிழமை இரவு (10)  11.40 மணியளவில் மீட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிசார் தெரிவித்தனர்.

பதுரியா நகர் மாஞ்சோலையைச் சேர்ந்த உஸனார் ராகிலா உம்மா வயது (52) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்துள்ளார், நேற்று சனிக்கிழமை இவர் காணாமால் போயிருந்த நிலையில் உறவினர் இவரை தேடியும் கண்டுபிடிக்காத நிலையில் பொலிசார் இவரை சடலமாக மீட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிழந்த பெண்ணின் உறவினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு பொலிசாரினால் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மரண விசாரணையினை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஹபிப் றிபான் மேற்கொண்டதுடன் பின்னர் சடலத்தின் மேலதிக சட்ட வைத்திய அறிக்கையினை பெற்றுக்கொள்ளும் முகமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைக்குமாறு பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்தார்.

இதேவேளை கொலையாளியே குறித்த சம்பவத்தினை தாம் மேற்கொண்டுள்ளதாக வழைச்சேனைப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்ததுடன் வாக்குமூலமும் வழங்கியுள்ளார்.அதனைத் தொடர்ந்தே சம்பவ இடத்தி;ற்கு பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தினையும் கைப்பற்றியதாக தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பெரும் குற்றப்பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கடந்த 2015.08.17ம் திகதி ஓட்டமாவடிப் பிரதேசத்தில் வைத்து 11வயது நிரம்பிய சிறுவன் ஒருவனின் கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர் என்பதுடன், இவரின் வழக்கு தற்போது மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது என பொலிசார் மேலும் இச் சம்பவம் தொடர்பாக தெரிவித்தனர்