சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் 50 சதவீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தகவல்

தனியார் பேருந்துகளில் பணிபுரியும் சாரதிகள் மற்றும் நடத்துநர்களில் 50 சதவீதமானவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னர் கஞ்சா போதை பொருளை பயன்படுத்திய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், தற்போது ஐஸ் போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட ‘சஹாசரா’ திட்டத்தை அமுல்படுத்தாமை காரணமாகவே, இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் பெறப்படும் பயணக்கட்டணத்திற்கு உரிய மிகுதி பணம் வழங்கப்படுவதில்லை எனவும் கெமுனு விஜயரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனூடாக பெறப்படும் பணத்திலேயே தனியார் பேருந்துகளில் சேவையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஐஸ் போதை பொருளை பெற்று பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சு, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை மற்றும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.