பரபரப்பான சூழ்நிலையில் நிறைவேறியது கல்முனை MC பட்ஜெட்

(அஸ்லம் எஸ்.மௌலானா)
பரபரப்பான சூழ்நிலையில் நிறைவேறியது கல்முனை MC பட்ஜெட்

கல்முனை மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று வியாழக்கிழமை (17) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபையின் ஆளும் தரப்பில் 16 உறுப்பினர்கள் மாத்திரம் உள்ள நிலையில், கடந்த முறை போன்று இம்முறையும் பட்ஜெட் தோற்கடிக்கப்படலாம் என்ற பரபரப்பான சூழ்நிலையில் பிற்பகல் 2.10 மணியளவில் சபை அமர்வு ஆரம்பமானது.

வழமையான சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மாநகர முதல்வரினால் கல்முனை மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் இவ்வரவு- செலவுத் திட்ட அறிக்கை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த வாக்கெடுப்பின்போது மாநகர சபையின் 41 உறுப்பினர்களில் 21 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். இவர்களில் 18 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 03 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 11 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் 02 உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 02 உறுப்பினர்களும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் ஒருவரும் ஹெலிகொப்டர் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் மான் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 02 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினரும் எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான ஐ.தே.க.உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, ஏ.ஆர்.அமீர், ரஹ்மத் மன்சூர், எம்.எம்.நிஸார், ஏ.சி.ஏ.சத்தார், சட்டத்தரணி ரொஷான் அக்தர், ஏ.எம்.பைறூஸ், சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், ஐ.தே.க. உறுப்பினர்களான கே.புவனேஸ்வரி, நடராஜா நந்தினி, தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களான காத்தமுத்து கணேஷ் (பிரதி முதல்வர்), சுமித்ரா ஜெகதீசன், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் தாஜுதீன் முபாரிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான நெய்னா முஹம்மட், சித்தி சபீனா, சுயேட்சைக்குழு உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.ஹாரிஸ் (ஹெலிகொப்டர்), ஏ.ஆர்.செலஸ்டினா (மான்) ஆகியோரே ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான பொன் செல்வநாயகம், எஸ்.குபேரன், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் செல்வராசா ஆகியோரே எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பலரும் மாநகர முதல்வரின் சேவைகளைப் புகழ்ந்து பாராட்டி, வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். வாக்கெடுப்பு முடிவுற்று சிறிது நேரத்தின் பின்னர் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் உட்பட மற்றும் பல உறுப்பினர்களும் சபைக்கு சமூகமளித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

அங்கு முதல்வர் ஏ.எம்.றகீப் உரையாற்றுகையில்;

"எமது 2019 ஆண்டு வரவு செலவு திட்டத்தில்    எதிர்பார்க்கப்பட்ட சபை வருமானமானது சுமார் 300 மில்லியன் ரூபாவாக இருந்தது. அதனை 2020 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சுமார் 350 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கான வருமான மூலங்களை இனம்கண்டுள்ளோம். இவ்வாறு பெறப்படுகின்ற வருமானங்கள் அனைத்தும் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவே பயன்படுத்தப்படும். அதனை இம்முறை செயற்பாட்டு ரீதியாக நிரூபித்தும் உள்ளோம்.

கல்முனை மாநகர சபைக்கு தொடர்ச்சியாக சவாலாக இருந்து வந்த திண்மக்கழிவகற்றல் சேவையை இந்த ஆண்டில் எம்மால் சிறப்பாக முன்னெடுக்க முடிந்திருக்கிறது. அத்துடன் இவ்வருடம் எமது மாநகர சபைக்குட்பட்ட வீதி வடிகான் பராமரிப்பு மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு போன்ற சேவைகளும் மிகத்திருப்திகரமாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. கடந்த காலங்களில் எமது மாநகர பிரதேசங்களில் இருள்சூழ்ந்து காணப்பட்ட அனைத்து மூலை முடுக்குகளும் இன்று வெளிச்சம் பெற்றிருப்பதைக் காண்கிறீர்கள்.

எதிர்காலத்தில் மாநகர சபையின் அனைத்துப் பணிகளையும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதே எமது இலக்காகும். அதற்கான மூலோபாய திட்டங்கள் எம்மால் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை மையப்படுத்தியே எமது மாநகர சபையின் 2020ஆம் ஆண்டின் பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருக்கிறது" என்று முதல்வர் றகீப் குறிப்பிட்டார்.

இந்த சபை அமர்வை முன்னிட்டு கல்முனை மாநகர சபை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த சபை அமர்வுக்கு முன்னதாக இங்கு வருகை தந்திருந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத்தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல், பட்ஜெட் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து முதல்வர் றகீப் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.