அம்பாரை மாவட்டத்திலும் தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளில் தமிழ் மக்கள்!


(வி.சுகிர்தகுமார்)
அம்பாரை மாவட்டத்திலும் தைப்பொங்கல் கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளில் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும் தைபிறந்தால் வழிபிறக்கும் எனும் பெரும் நம்பிக்கையோடு விவசாயிகளும் மக்களும் தைமகளை வரவேற்பதற்காக தயாராகி வரும் அதேவேளை கடைத்தொகுதிகளில் பெருந்திரளான மக்கள் கொள்வனவுகளில் ஈடுபட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது.

இம்முறை வழமைக்கு மாறாக அதிகளவான மக்கள் புத்தாடைக் கொள்வனவிலும் அத்தியாவசியப் பொருட் கொள்வனவிலும் ஈடுபட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

நடைபாதை கடைத்தொகுதிகளும் இம்முறை அதிகமாக அமைக்கப்பட்டிருப்பதுடன் வெளியுர் வியாபாரிகளும் படையெடுத்துள்ளதுடன் வாழைப்பழத்திற்கான கேள்வி அதிகரிப்பினால் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.

இதேவேளை திருக்கோவில் பிரதேசத்திலும் ஆலய திருவிழாக்காலம் போல் வீதியின் இருபக்கங்களிலும் அதிகளவான நடைபாதை வியாபரிகள் கடைத்தொகுதிகளை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.