பாராளுமன்ற தேர்தல் 2020 : கிழக்கின் தேர்தல் கள நிலவரம்


ஆர்.சயனொளிபவன் & TEAM  
  • 2015 பாராளுமன்ற தேர்தல் ஒருபார்வை 
  • கிழக்கின்  தேர்தல் கள நிலவரம் 
  • நாட்டு தலைமையின் நிலைப்பாடு 
  • சிறுபான்மை சமூகம் சார்ந்த அரசியலின் முக்கியத்துவம் 
கடந்த வருட இறுதியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பிரதான எதிர்கட்சிகள் சார்பாக ஜனதிபதி வேட்பாளராக களமிறங்கி பெரு வெற்றி பெற்று நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சா அவர்கள் பதவி ஏற்றதன் தொடர்ச்சி ஆட்சி மாற்றதிற்கும் வழிகோலியது .மேலும் நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றத்தின் ஆட்சிக்காலம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி முடிவிற்கு வர இருக்கும் பட்சத்தில் ஜனாதிபதிக்கு 19ம் சட்டமூலம் ஊடாக வழங்கப்பட்ட அதிகாரத்தின் மூலம் தற்போதைய பாராளுமன்றத்தின் ஆட்சிக்காலம் 4 1/2 வருடங்களை பூர்த்தி செய்யும் பட்சத்தில் அதாவது ஜனதிபதியால் வருகின்ற மார்ச் மாதம் 1ம் திகதிக்கு பின்னர் உள்ள காலப்பகுதியில் இருந்து எவ்வேளையும் பாராளுமன்றத்தை கலைக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

 
2015 பாராளுமன்ற தேர்தல் ஒருபார்வை

2015யில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் மூலம்  கிழக்கில் இருந்து  தெரிவுசெய்யப்பட்ட   16 பாராளுமன்ற அங்கத்தவர்களில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறுபான்மை  கட்சிகளால் களமிறக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். அதாவது கிழக்கில் உள்ள மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களில்  70% மான உறுப்பினர்கள் சிறுபான்மை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களாகவே  உள்ளனர். மேலும் இவர்களை விட ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டி இட்டு வெற்றி பெற்ற   முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஓருவர் என மொத்தமாக   12 பேர்  2015யில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் ஊடாக  பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் . மேலும் மொத்தமாக தெரிவு செய்யப்பட்ட 16 பாராளுமன்ற உறுப்பினர்களில் 7 பேர் முஸ்லீம்களும் 5 பேர் தமிழர்களும் ஏனைய 4 பேரும்  பெருன்பான்மை  சிங்கள இனத்தை சேர்ந்த்தவர்கள் ஆவர்  என்பதும் குறிப்பிடதக்க விடயமாகும்.


தெரிவு செய்யப்பட்ட  அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும்   தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களாவார் மேலும் இவர்களுள்   திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்   R சம்பந்தன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட   G சிறிநேசன்,   S வியாழேந்திரன் (தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில்  இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்துள்ளார்),  S யோகேஸ்வரன் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட  K கோடீஸ்வரன் ஆகிய   ஐவரும்   ஆவர்  .

முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களை பொறுத்த அளவில் முஸ்லீம் காங்கிரசின் ஊடாக   அம்பாறை மாவட்டத்தில் இருந்து   பைசல் காசீம்,   M.H.M. ஹாரிஸ்,   M.I.M.மன்சூர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து  அலிசார் மௌலானா என  நால்வரும். மற்றும் முஸ்லீம் மக்கள் காங்கிரசின் ஊடாக   மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து   அமீர் அலியும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து   மஹ்ரூப் , இம்ரான்  என இருவரும் ஆக முஸ்லீம் அரசியல் கட்சிகளை  சேர்ந்த 6 பேரும் அடங்குவர். இதனை விட ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்டு  திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட    மஹ்ரூப்   சேர்த்து மொத்தமாக 7 முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.


கிழக்கின்   தேர்தல் கள நிலவரம்ஜனாதிபதியிற்கும் அரசாங்கத்திற்கும்  சார்பாக கிழக்கில்  இருந்து இயங்கும் தமிழ் அரசியல்வாதிகள்    மட்டக்களப்பு  அம்பாறை மாவட்டங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில்  முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ( பிள்ளையானின் ) TMVPயும், அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) அவர்களை பொறுத்தளவில்  நடைபெறவிருக்கும்  பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் நோக்குடன் ஏற்கனவே கிராமம் கிராமமாக சென்று தமது ஆதரவை பெருக்கும்  வேலைப்பாடுகளை மும்முரமாகவும் மேற்கொள்வதையும் காணக்கூடியதாவும் உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்த அளவில் கிழக்கில் குறிப்பாக கடந்த  மைத்திரி ரணில்  அரசின்  பங்காளிகள் போல் செயற்பட்டு தமிழ் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு  பாரிய நன்மைகளையோ அல்லது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமாக  எந்த ஒரு முன்னேற்றத்தையுமோ   ஏற்படுத்தாத  வகையில் அவர்களது ஆட்சியும் முடிவுக்கு வந்ததை  தொடர்ந்து தமிழ் மக்களின் பெரும் அதிருப்தியிற்கும்  ஆளாகியுள்ளது மேலும் இந்த நிலைமையை மாற்றும் முகமாக கிழக்கின் தமிழ் அரசியல் தலைமைகள் தமது வேட்பாளர் தெரிவில் பாரிய மாற்றங்களை  மேற்கொள்ளும் முயற்சியிலும்  இறங்கியுள்ளது அந்த வகையில் பல  பிரபல்லியமான புதுமுகம்களையும் ஒரு சில இளைஞர்களையும் இணைத்து  களமிறக்கும் முயற்சியை தற்போது மேற்கொள்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது 

கடந்த வருட இறுதியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயா ராஜபக்ஸ அவர்களின் பாரிய வெற்றியை தொடர்ந்து முஸ்லீம் அரசியல் கடசிகள் அமைதிகாத்த வண்ணமே உள்ளனர் மற்றும்  ஜனாதிபதியின் அமைச்சர்ரவையில் இருந்து நாட்டின் சரித்திரத்திலேயே  முதல் முறையாக முஸ்லிம் சமூகம் முற்று முழுதாக விடுவிக்கப்பட்டதும் அதற்கு  ஒரு முக்கியமான  காரணமாகவும் கருதப்படுகின்றது   ஜனாதிபதியின் இவ் அணுகுமுறையை முஸ்லீம் அரசியல் சற்றும் எதிர்பார்க்கவில்லை எனவும் இதன் தொடர்சியாக  வருகின்ற பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு அணுகுவது மற்றும்  எவ்வாறு ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பது என்பதிலும்  பல  இடர்பாடுகளுக்கும் உள்ளாகியுள்ளது   என்றும்  கருதப்படுகின்றது. 


நாட்டு தலைமையின் நிலைப்பாடு 


ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சா கடந்த நவம்பர் மாதம் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அடைத்த அமோக வெற்றியை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைவரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் வழமைக்கு மாறாக இதுவரை மக்களின் ஜனாதிபதியாக நடந்து கொள்வது மட்டுமல்லாது பல நன்மைபயக்கும் அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார். குறிப்பாக வீண் விரயத்தை தடுப்பதில் அவர்  ஒரு உதாரணமாக விளங்குவதை காணக்கூடியதாகவும் உள்ளது. இது மட்டுமன்றி அரச திணைக்களங்களுக்கு செய் திறன் உள்ள தலைவர்களை தெரிவு செய்தல் என நாட்டை முன்னர் தலைமை வகித்த  தலைவர்களை விட  நாட்டில் உள்ள பெரும்பாலான  மக்களும் நேசிக்கும் வகையில் நாட்டை முன்னெடுத்து செல்வதையும்  உணரக்கூடியதாகவும் உள்ளது.

சிறுபான்மை சமூகத்தை பொறுத்த அளவில் குறிப்பாக முஸ்லீம் அரசியல் சமூகம் முற்று முழுதாக அரசில் இருந்து ஓரம் கட்டப்பட்டமையும் மற்றும் தமிழ் மக்களை பொறுத்த அளவில் அவர்களின் நீண்ட கால வேண்டுகோளாக உள்ள அரசியல் தீர்வு பற்றி எந்த ஒரு சமீஞ்சைகளும் காண்பிக்கபடாத  வகையிலும் அதேவேளை ஜனாதிபதி அவர்கள் தான் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்ற  தொனிப்பட நடந்து கொள்வதை அவரது பதவிக்காலத்தின் முதல் 7 வாரங்களும் தென்படுத்துகின்றன. அதேவேளை  குறிப்பாக வடக்கு கிழக்கில் இதுவரை காலமும்  சட்டமும் ஒழுங்கும்   முறையாக நடைமுறை படுத்தப்படுவதையும்  மேலும் ஜனாதிபதியை சார்ந்த தமிழ் அரசியல் வாதிகளும் இதுவரை எவ்வித ஆரவாரமும் அற்றமுறையில் அமைதியாக நடந்து கொள்வதையும் பார்க்கக்கூடியதாகவும் உள்ளது.


சிறுபான்மை சமூகம் சார்ந்த அரசியலின் முக்கியத்துவம்

குறிப்பாக வடக்கு கிழக்கை பொறுத்தளவில் மொத்த சனத்தொகையில் தமிழ் முஸ்லீம் மக்களின் சனத்தொகை 85% அளவாக உள்ளது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் சமூகம் ரீதியான அரசியல் கட்சிகளினாலேதான் அவர்களுடைய சமூகங்களின் தேவைகளை கூடிய அளவிற்கு நிவர்த்தி செய்ய முடியும். இதற்கு ஒரு நல்ல உதாரணமாக இந்தியாவில் மாநில ரீதியாக உருவாக்கப்பட்ட அரசியலும்  ஒரு நல்ல உதாரணமாக உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டை பொறுத்த அளவில் மத்தியில் பா.ஜா.க பலம் வாய்ந்ததாக இருந்தாலும் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்களின் நலனை பேணிப்பார்க்க தமிழ் நாட்டு மக்களால் திராவிட கட்சிகளே தெரிவு செய்யப்படுகின்றன. 

அதேபாணியில் தான் எமது நாட்டிலும் சிறுபான்மை மக்கள் மிகவும் பெரும் எண்ணிக்கையில் வாழும் வடக்கு கிழக்கிலும்  80% அளவிலான பாராளுமன்ற ஆசனங்களை சிறுபான்மை கட்சிகள் கடந்த பாராளுமன்ற தேர்தல்களில்   தம் வசப்படுத்தி உள்ளனர் . மேலும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் முறையான கட்டமைப்பை மிகவும் அடிமட்டம் வரையிலான  கிராமிய அளவில் அமைத்து இயங்குவதனாலும் இம் மக்களை முறையாக பிரதிநிதித்துவ படுத்தக்கூடிய வல்லமையும் நீண்ட கால அனுபவமும் இவ் அரசியல் கட்சிகளுக்கே  உள்ளது  மேலும் இவை யாவற்றையும் வைத்து பார்க்கும் போது சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளினாலேயே இப் பகுதிகளில் வாழும் தமது  சமூகத்திற்கு  சிறந்த முறையில்   சேவையும் செய்யமுடியும்.

அதே வேளை குறிப்பாக கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்தை  பொறுத்த அளவில் அவர்களை கடந்த 30 வருடகாலமாக 100% விகிதமும் பிரதிநிதித்துவப்படுத்திவரும்  தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  தமிழ் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் மற்றும்  பொருளாதார மேன்பாட்டையும் கருத்தில் கொண்ட வகையில் தமது கொள்கைகளை வகுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளனர் என்பதையும் இத் தருணத்தில் தெளிவாக எடுத்து காட்டவேண்டிய நிலையில் நாமும் உள்ளோம். கடந்த அரசாங்கத்திலும் இவ்வாறான    அரசியல் தீர்வு மற்றும் போரால் அழிக்கப்பட்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் என்ற ஒரு இரட்டை கொள்கையுடன் பயணித்து இருந்திருந்தால்  கிழக்கில் உள்ள தமிழ் பகுதிகள் ஓர் அளவிற்கேனும் பொருளாதார ரீதியாக ஆவது நன்மைகளை பெற்று இருக்கமுடியும்.

மேலும் சிறுபான்மை அரசியலை  பொறுத்த அளவில் சிறுபான்மை அரசியல் கட்சிகளின் ஊடக அரசியலில் நுழைந்து பின்னர் பெருன்பான்மை கட்சிகளுக்கு சென்ற தமிழ் முஸ்லீம் அரசியல்வாதிகள் அரசியலில் நிலைத்த சரித்திரம் இதுவரை தொடரவில்லை . அந்த வகையில் ஒரு காலப்பகுதியில்  தமிழ்  அரசியலில் முடிசூடா மன்னனாக  இருந்த  திரு செல்லையா ராஜதுரையில்  இருந்து முஸ்லீம் அரசியல் வாதிகளான திருமதி பேரியல் அஸ்ரப், அதாவுல்லா ஹிஸ்புல்லாஹ்,  பசீர் சேகுதா  என பெருன்பான்மை அரசியல் கட்சிகளுக்குள்  சென்று அமைச்சர்களாக பதவிவகுத்தும் அவர்களால் தமது அரசியலில் தொடர்சியாக நிலைத்து நிற்கமுடியவில்லை.  இதற்கு   . முக்கிய காரணமாக கருதப்படுவது   இவர்களால்  தனிமனிதர்களாக பெரும்பான்மை கட்சிகளுக்குள் சென்று தமது சமூகத்திற்கு சாதிப்பது என்பது முற்றிலும் சவாலாக அமைத்ததினால் இவர்களின் அரசியல் பயணம் தொடரவும் இல்லை . இந்த வகையில் எமக்கு கடந்த காலம் தொடர்ச்சியாக நல்லதொரு அனுபவத்தை கற்பித்தும் உள்ளது . அதேவேளை சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் காலத்திற்கு காலம் பல சவால்களை சந்தித்தாலும் இன்றும் தத்தமது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாக ஆலமரம் போல் நிலைத்தும் நிற்கின்றன. 


கிழக்கை பொறுத்தளவில் இவ் வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் இங்குள்ள தமிழ் முஸ்லீம் சமூகங்களுக்கும் மேலும் இம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மை அரசியல் கட்சிகளுக்கும்  முற்றிலும் சவாலாக அமையவுள்ளது. குறிப்பாக மிக கூடுதலான சிங்கள மக்களின் வாக்குவங்கியுடன் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சா சிங்கள மக்களின் அபிலாசைகளை திருப்திப்படுத்தக்கூடியவகையில் முற்றிலும் செயல்படுவார் என்று எதிர்பாக்கப்படுவதனால். குறிப்பாக தமிழ் மக்களை முழுதாக பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள  தமிழ் மக்களின் நம்பிக்கையையும் பெறுவதற்கு பல யுக்திகளை மேற்கொள்ளவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பங்காளி கட்சியான தமிழ் அரசு கட்சியின் செயலாளர் தமது வேட்பாளர் தெரிவில் இம் முறை தமிழ் மக்களை கவரக்கூடிய வகையிலும்  மற்றும் நம்பிக்கை  தரக்கூடிய வகையிலும் பல புதுமுகம்களையும் இளைஞர்களையும் களமிறக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்   அதிகமாக தென்படுகின்றன. மேலும் முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகள் இன்றும் ஜனாதிபதித்தேர்தலின் முடிவு மற்றும் அதற்கு பின்னர் அரசியல் ரீதியாக இடம்பெற்ற நிகழ்வுகளின் அதிர்ச்சியில் இருந்து மீளாத தன்மையே தென்படுகின்றது. இவை  தான் 2020 பாராளுமன்ற தேர்தலுக்கான கிழக்கின் தற்போதைய கள நிலவரமாகும்.

ஆர்.சயனொளிபவன் & TEAM