திருகோணமலையில் சளிக்கு மருந்து அருந்திய குழந்தை பலி !

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நல்லூர், தோப்பூர் பிரதேசத்தில் சளிக்கு மருந்து எடுத்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிறந்து 26 நாட்களே ஆன ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 10 ஆம் திகதி காலை சளி காரணமாக தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு தாய் அன்டன் நிலோஜியினால் பிறந்து 26 நாட்களான தனுஜன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, வைத்தியரால் குழந்தை பரிசோதிக்கப்பட்டு ஆவி பிடிக்கப்பட்ட நிலையில் பாணி மருந்து வழங்கப்பட்டதனை அடுத்து அதனை இரவிற்கும் வழங்குமாறு வைத்தியர் அறிவுறுத்தியதன் பின்னர் தனுஜன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். வீடு வந்த குழந்தை மூச்சற்ற நிலையில் உள்ளதை அவதானித்த தாய் குழந்தையை தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளார்.

இதன்போது, குழந்தையை பரிசோதித்த வைத்தியர் குழந்தை உயிரிழந்து விட்டதாக குழந்தையின் தாயாரிடம் தெரிவித்துள்ளார். மரணமடைந்த குழந்தையின் சடலமானது பிரேத பரிசோதனைக்காக சம்பூர் பொலிஸாரினால் எடுத்துச் செல்லப்பட்டு தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.