பட்டதாரிகளுக்கான நியமனம் திட்டமிட்டபடி இடம்பெறும் - குறை நிரப்பு பிரேரணை இதற்கு தடையாக அமையாது !

53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறை நிரப்பு பிரேரணைக்கும் இந்த விடயத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (24) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் முன்னைய அரசாங்கத்தினால் ஒப்பந்தகாரர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவையை செலுத்துவதற்காகவே அரசாங்கம் குறை நிரப்பு பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு பயிற்சிக் காலத்தில் 20,000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது. இதற்கான நிதியை அரசாங்கத்துக்கு நிதி முகாமைத்துவத்தின் மூலம் சமாளிக்கக்கூடிய வல்லமை இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனவே இந்த நியமனம் குறிப்பிட்ட வகையில் இடம்பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவௌவும் கலந்து கொண்டார்