கிழக்கு மாகாணத்தினது சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!


கிழக்கு மாகாணத்தினது சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி தொடர்பில் அதிக கவனம் எடுக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று இடம்பெற்ற மாகாண சுற்றுலா பணியகத்தின் முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான திட்டங்களை வகுப்பதற்கு பதிலாக, அந்தத் திட்டங்கள் அப்பிரதேசத்திற்கு யதார்த்தமாக உள்ளதா என ஆராயப்பட வேண்டும்.

எங்கள் மாகாணத்தில் சுற்றுலாத்துறை ஒரு கண்ணியமான சுற்றுலா தளமாக உருவாக்கப்பட வேண்டும். சில இடங்களில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்த கழிப்பறைகள் இல்லை.

அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுலா தளத்தின் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கொவிட் 19 காரணமாக, நம் நாட்டிலும், முழு நாட்டிலும் சுற்றுலாத்துறை சீர்குலைந்துள்ளது.

அதை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு நிரந்தர திட்டத்தை அரசாங்கம் செய்து வருகிறது. நாங்கள் ஒரு மாகாணமாக, இந்த துறையை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என ஆளுநர் அநுராதா யஹம்பத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.