திருமண Pre-Shoot இன் போது நீர்வீழ்ச்சியில் வீழ்ந்த இளைஞரின் சடலம் மீட்பு

திருமணத்திற்கு முன்னர் புகைப்படம் எடுப்பதற்காக ஜோடியொன்று சென்றிருந்த நிலையில், சேர எல்ல நீர்வீழ்ச்சியில் வீழ்ந்த இளைஞரின் சடலம் இன்று (29) பகல் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்கச் சென்ற திருமணமாகவிருந்த ஜோடி தவறி வீழ்ந்த நிலையில், மணமகன் காணாமல் போயிருந்தார். இதேவேளை, மணமகள் காப்பாற்றப்பட்டுள்ளார்.

நேற்று (28) பிற்பகல், லக்கல பொலிஸ் பிரிவுக்குச் சொந்தமான நக்கிள்ஸ் மலைத்தொடர் பிரதேசத்திலுள்ள சேர எல்ல நீர்வீழ்ச்சியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவராவர்.

எதிர்வரும் மாதம் திருமணம் புரியவுள்ள இவர்கள், தமது பெற்றோருடன், குருணாகல் பிரதேசத்திலிருந்து லக்கல ரிவஸ்டன், நக்கிள்ஸ் போன்ற பிரதேசங்களில் புகைப்படம் எடுப்பதற்காக வந்திருந்தனர்.

ரிவஸ்டன் பிரதேசத்திலிருந்து 12 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இலுக்குபுர, சேர எல்ல நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க இவர்கள் முயற்சித்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென்று குறித்த இளைஞரும் யுவதியும் நீரில் வழுக்கி வீழ்ந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மணமகள், அங்கு வந்தவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

கடற்படையினரின் சுழியோடிகள் குறித்த இளைஞரை தேடிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.