மட்டக்களப்பில் கறுவா பயிர் செய்கையினை ஊக்கப்படுத்த நடவடிக்கை

(மட்டக்களப்பு சிஹாறா லத்தீப்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் தொழிநுட்ப ஆலோசனையுடன் கறுவா, இஞ்சி, கமுகு, வெனிலா போன்ற பல்வேறு வகையான ஏற்றுமதிப் பயிர்கள் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன. தற்போது இவ்வகையான அதிக இலாபம் தரக்கூடிய பயிர்களை விவசாயிகள் ஆர்வத்துடன் செய்கை பண்ணி வருகின்றனர்.


அவர்களுக்கான தொழிநுட்ப ஆலோசனைகளை வழங்கும் பொருட்டும், இப் பயிர்ச்செய்கை மற்றும் அறுவடை, அறுவடைக்குப் பின்னரான தொழிநுட்பம் போன்றவற்றில் பயிற்சியளிக்கும் செயற்பாடுகள் காலத்திற்குக் காலம் மட்டக்களப்பு ஏற்றுமதி விவசாய விரிவாக்கல் பிரிவினரால் நடாத்தப்பட்டு வருகின்றது.

இந்த விசேட திட்டத்தின்கீழ் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் மாரியம்மன் கோவில் வீதி, தாந்தாமலையில் செய்கை பண்ணப்பட்ட கறுவா பயிர் அறுவடைசெய்யும் விழா நேற்று (0 3) நடைபெற்றது. இந் நிகழ்வில் மாவட்டச் செயலாளரும், அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இந்த கறுவா அறுவடையினைஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வின் போது உலக தரிசன நிறுவனத்தின் உதவியில் கறுவா பட்டைகளை கழற்றும் உபகரணங்களும் இலவசமாக அன்பளிப்பு செய்யப்பட்டன .

மட்டக்களப்பு ஏற்றுமதி விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தர் திருமதி.நர்த்தனா குகதாசன் தலைமையில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி தினேஷ், மாத்தளை மாவட்ட ஏற்றுமதி விவசாயத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் சுதாரகசொய்சா, இத்திணைக்கள விரிவாக்கல் உத்தியோகத்தர் மொகமட் ஹில்மி, உலக தரிசன நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக பிரதிநிதி இருதயம் மைக்கல் மற்றும் கறுவா செய்கையாளர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இங்கு அரச அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா கருத்து வெளியிடுகையில் ஈர வலய பிரதேசத்தில் உற்பத்திசெய்யப்படும் ஏற்றுமதி பயிரான கறுவா உலர்ந்த வலயமான எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வெற்றியளித்துள்ளது .எதிர்காலத்தில் எமது பிரதேசத்தில் ஆர்வம் காட்டும் கறுவாசெய்கையாளர்களுக்கு தேவையான உதவிகள் பெற்றுக்கொடுக்க உதவுவேன் அதிக லாபமுள்ள இத்தொழிலை செய்ய எமது விவசாயிகள் முன்வரவேண்டும் இத்திணைக்களம் இலவசமாக விதைகளையும் மற்றும் மானிய உதவிகளையும் வழங்கி வருகின்றது. இதன் கூடிய பயனை அடைய எமது விவசாயிகள் முன்வர வேண்டும் என குறிப்பிட்டார்.